செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பேராசிரியை ஜெனிபாவுக்கு கத்தி குத்து ,, மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில்

மின்னம்பலம் :மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை ஜெனிஃபாவுக்கு கத்திகுத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் விஞ்ஞான தகவல் தொடர்புத்துறை தலைவராகப் பணியாற்றி வருகிறார் பேராசிரியை ஜெனிஃபா. பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராகப் பணியாற்றிய ஜோதிமுருகன் இன்று (செப் 26) காலை ஜெனிஃபாவை கத்தியால் பலமுறை தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பேராசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலில் பல்கலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெனிஃபா பின்னர் நாகமலை புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேராசிரியரை தாக்கிய ஜோதி முருகனைப் பிடித்த மாணவர்கள் அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பணியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஜெனிஃபா ஜோதிமுருகன் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் ஜோதிமுருகனுக்கு வேலையிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பேராசிரியரைத் தாக்கியிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு சமயநல்லூர் டிஎஸ்பி மோகன் குமார், நாகமலை காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவுள்ளனர். இதுதவிர பல்கலை துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னதுரை ஆகியோரும் மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பல்கலை வளாகத்தில் நடந்த இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: