ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

தவறான புகைப்படத்தைக் காட்டி சிக்கிக்கொண்ட பாக். தூதர்!

ஐநாவில் காஷ்மீர் பிரச்சனையை முன்னிறுத்த தவறான புகைப்படத்தைக் காண்பித்த பாகிஸ்தான் தூதரால் பரபரப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதில் சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளாகியும், பாகிஸ்தான் தீவிரவாதிகளைத்தான் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கிறது என இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்க நினைத்த பாகிஸ்தானின் தூதர் மலீகா லோதி, காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா கொடூரமாக நடந்துகொண்டுள்ளதாக தெரிவித்தார். மனிதநேயத்திற்கு எதிராக இந்தியா நடந்துகொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து காஷ்மீர் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண் என தான் கொண்டுவந்த புகைப்படத்தையும் அவர் காட்டினார்.


உண்மையில் அவர் காட்டிய புகைப்படம் இஸ்ரேலின் காசா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவருடையது. அதில் இருப்பவர் 17 வயது நிரம்பிய ரவ்யா அபு ஜோம் மற்றும் இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் ஹெய்தி லெவின் எனும் புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர். இந்த புகைப்படம் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தவறான புகைப்படத்தைக் காண்பித்து, அதில் காஷ்மீர் பிரச்சனையை இணைத்து இந்தியாவிற்கு அவப்பெயர் பெற்றுத்தர நினைத்த பாக். தூதரின் எண்ணம் ஐநா மற்றும் உலக அரங்கில் வெளிப்பட்டது மிகப்பெரிய பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. - ச.ப.மதிவாணன்  நக்கீரன்

கருத்துகள் இல்லை: