வியாழன், 10 ஆகஸ்ட், 2017

.அது அழகானது ,அதில் இருந்து தான் நீ வருகிறாய்.... ஷாலின்

Shalin Maria Lawrence :   ரசிகன் .. சிவாஜி ரசிகர்கள் இருந்தார்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருந்தார்கள். இன்னும் சொல்ல போனால் அவர்களின் பக்தர்களாக இருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விவாதத்தில் மோதுவார்கள். வாய் வழி மோதல் தான். ஆனால் கருத்தியல் ரீதியாக மட்டும் இருக்கும். ஒருவரை ஒருவர் இழிவுபடுத்த மாட்டார்கள் .
கமல் ரசிகர்கள் இருந்தார்கள். ரஜினி ரசிகர்கள் இருந்தார்கள். இன்னும் சொல்ல போனால் அவர்களின் வெறியர்களாக இருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாய் மோதலில் துவங்கி அடிதடி வெட்டுக்குத்தில் முடியும் .
விஜய் அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள் .
"ஏன் இருக்கிறார்கள்?" என்று கேள்வி கேட்க்கும்படி இருக்கிறார்கள்.
யாராவது ஒருவர் விஜய் பற்றியோ இல்லை அஜித் பற்றியோ ஏதாவது எழுதி விட்டாலோ அல்லது சொல்லி விட்டாலோ, மெசப்பொட்டேமியா காலத்திலிருந்து இந்த காலம் வரையிலுள்ள பெண்களை மட்டும் கொச்சை படுத்தும் வார்த்தைகளை வைத்து அவ்வளவு கீழ்த்தரமான பேச்சுக்கள் செய்கைகள்.

சிவாஜி எம்ஜியார் ரசிகர்கள் எந்த பெண்ணையும் ஆபாசமாக அசிங்க படுத்த மாட்டார்கள் ஏனென்றால் சிவாஜியும், எம்ஜியாரும் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் பெண்களை ரசித்தார்கள், நேசித்தார்கள் .
ரஜினி கமல் ரசிகர்களும் கிட்ட தட்ட அப்படிதான் .
ஆனால் விஜய்யோ ரசிகர்களோ அப்படி இல்லை. பாகிஸ்தான் தீவிரவாதிகளோடும் உள்ளூர் டான்களோடும் சண்டையிட்டு மிச்சமிருக்கும் முக்காவாசி நேரம் ஹீரோயின்களுக்கு அட்வைஸ் கொடுப்பது, காதலிக்காத ஹீரோயின்களை திட்டுவது, ஆடைகளை வைத்து தரம் பார்ப்பது போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதால் அவரின் ரசிகனுக்கும் பெண் என்றால் ஒரு "பொருள் ", "சதை". அந்த சதையின் மீது ஒரு ஆண் ஆன எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. நான் பெண்ணைவிட உயர்ந்தவன் என்கின்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது .
அஜித் தன் படங்களில் பெண்களை அதிகம் துன்புறுத்தவில்லை என்றாலும், அஜித்தின் படங்களில் testosterone எனப்படும் ஆண் ஹார்மோன் நிறைந்து வழிவதால். பொதுவாகவே அவர் ரசிகர்கள் அதீத கோவம் கொண்டவர்களாகவும், நரம்புகள் புடைத்துக்கொண்டும் திரிகிறார்கள்.
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாக்கத்தில் பலரும் கமல்ஹாசனை வித விதமாக விமர்சித்தார்கள். அப்பொழுது கூட கமல் ரசிகர்கள் யாரையும் புண்படுத்தவில்லை.
ரஜினியின் சமீப கால அரசியல் பேச்சுகளுக்கு எழுந்த எதிப்புக்களுக்கு கூட ரஜினி ரசிகர்கள் இப்படி கட்டம் கட்டவில்லை.
இப்பொழுது தன்யா ராஜேந்திரன் கதைக்கு வருவோம் .
தன்யாவிற்கு ஆரிய திமிர் இருக்கிறது, தன்யா இனவெறி கருத்துக்களை ட்விட்டரில் பரப்பி இருக்கிறார், தன்யா கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கையை நக்கலடித்திருக்கிறார். தன்யா தவறிழைத்திருக்கிறார். ஆனால் .......
அவரை பாலியல் ரீதியாக தாக்கி பேச எந்த கொம்பனுக்கும் இங்கு உரிமை கிடையாது. அவர் மட்டுமல்ல அவரை போல் வேறு எந்த பெண்ணையும் பாலியல் ரீதியாக இழிவு படுத்த முடியாது. இ.பி.கோ section 509 படி ஒரு பெண் யாராக இருப்பினும், ஏன் ஒரு கொலைகாரியாக இருந்தாலும் கூட அவரை பாலியல் ரீதியாக அசிங்க படுத்த இந்திய அரசியலமைப்பின் படி முடியாது /கூடாது . அப்படி செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை நிச்சயம்.
நீ எவ்வளவு பெரிய நல்லவனாகவும் இருக்கலாம், ஒரு பெண் எப்படிப்பட்ட கெட்டவளாகவும் இருக்கலாம், அந்த பெண்ணை நீ அசிங்கமான வார்த்தைகளில் பேசி துன்புறுத்தினால் நீ "பொறுக்கி" தான்.
இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால் விஜயின் படத்தை தவறாக பேசிவிட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக அவரை அசிங்கமாக பேசிவிட்டு, அதை எதிர்த்து அவர் கேள்வி கேட்கும்போது அவரின் பழைய புராணங்கள், கலைஞர் பற்றி அவர் ட்வீட் செய்தது போன்றவற்றை காரணம் காட்டி தப்பிக்க பார்ப்பது. இது அந்த பெண் முன்பு செய்ததை விட கேவலமான விஷயம் ஆகும்.
நானும் திமுக அபிமானி தான், எனக்கும் கலைஞர் பிடிக்கும்தான் ஆனால் எக்காரணத்தை கொண்டும் ஒரு பெண்ணை இப்படி நடத்துவதை என்னால் ஏற்க முடியாது.
இதில் முக்கியமா சில திமுக இணைய அறிவு ஜீவிகள் இதையே காரணமாக வைத்து அந்த பெண்ணை விஜய் ரசிகர்கள் நடத்துவது சரி என்று குதூகலித்து வருகின்றனர். நேற்று ஒரு திமுக விசுவாசி தன்யா மீது நடந்த sexual assautஐ நியாயப்படுத்தி பதிவிட்டு அதில் ஒரு திமுக பெண்ணியவாதியை டேக் செய்து உள்ளார். அவரும் இந்த அசிங்கத்தில் குதூகலிக்கிறார். வாழ்க திமுக பெண்ணியம்!
கலைஞர் வாய் திறந்து பேசி இருந்தால் அந்த பெண் மீது நடந்த தாக்குதலை கண்டித்திருப்பார். தலை அமைதியானால் தும்புகள் ஆட்டம்போடுமாம் அந்த கதை தான் நடந்து கொண்டிருக்கிறது.
சரி தன்யா விஷயத்தை விடுவோம் .
வேறு எந்த பெண் விஜய் அஜித் படத்தை பற்றி பேசி இருந்தாலும் அவர்கள் இப்படியும் இதற்கும் மேலும் தான் தாக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் ரிஷிமூலம் நதிமூலம் எல்லாம் தாக்குதலில் ஈடுபடுவர்களுக்கு முக்கியமில்லை. அவர்களை பொறுத்த வரைக்கும் அவர்களில் தலையையோ இல்லை தளபதியயையோ யார் விமர்சித்தாலும் அவர்கள் நிலை இதுதான். அது ஆணாக இருந்தால் அவர்கள் அம்மா தங்கையை இழுத்திருப்பார்கள், அவர் பெண்ணாகி போனதில் இரட்டை சந்தோஷம், அவர், அவரின் அம்மா இருவரையும் இழுக்கிறார்கள் .
ஏன் நான் கேக்குறேன் அவங்க அப்பா அண்ணன் தம்பிய இழுக்க மாட்டிங்களா ,அப்பப்போ கூட அம்மாவைதான் இழுப்பிங்க .
என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் .நான் பலமுறை இணைய ஆபாச தாக்குதல்களுக்கு ஆளாகி இருக்கிறேன் ஆனால் ஒவ்வொரு முறையும் அப்படி செய்தவர்கள் பெரும்பாலும் யார் என்று பார்த்தால் விஜய் ,அஜித் ,சிவகார்த்திகேயன் படத்தை ப்ரொபைல் படமாக வைத்தவர்கள்தான் . சில சமயம் அவர்களின் படத்தை கொண்டுள்ள யாரிடமிருந்து நட்பு அழைப்பு வந்தாலும் அதை ஏற்க மாட்டேன் . எல்லோரும் இப்படி என்று சொல்ல முடியாது ,ஆனால் 90 % இப்படித்தான் இருக்கிறார்கள் .
ஆமா நான் கேக்குறேன் விஜய் என்ன tom hanks ஆ ? இல்லை morgan freeman ஆ ? படம் நல்ல இல்லனா நல்லா இல்லன்னுதானே சொல்ல முடியும் ?
இல்ல சுறா என்ன அப்படி பட்ட ஒரு தேசிய விருந்து வாங்க கூடிய திறன் இருந்த படமா ? கடல் குள்ள இருந்து பாஞ்சி தரையில வந்து உழுறதெல்லாம் ஒரு மனுஷனால முடியுமா ?
அவ சுறா நாலா இல்லனு சொல்றா ,அவங்க மட்டுமே சொல்றாங்க ஊரே சொல்லுச்சு .நானே சொல்றேன் .
அதே நேரத்துல சுறா நல்லா இல்லேன்னா அது படத்தோட கத ,direction ,screenplay எல்லாத்தையும் சேர்த்து சொல்லுறது .
ஏன் அதே டீவீட்ல ஷாருக்கான் படத்தை கூடத்தான் கிண்டல் பண்ணி இருக்காங்க அவங்க? அதுக்கு ஷாரூக் ரசிகர்கள் அவளை புடிச்சி இப்படி பண்ணங்களா ?
அமெரிக்கால mean tweets னு ஒரு நிகழ்ச்சி இருக்கு.அதுல நடிகர்கள் அரசியல்வாதிகள் பற்றி வந்த ரொம்ப மோசமான டிவீட்ஸ் அ அவங்களே விட்டே படிக்க சொல்லுவாங்க .அவங்களும் அதா ஜாலியா படிச்சு ஜாலியா பதில் சொல்லிட்டு போவாங்க .ஒபாமா கூட பண்ணி இருக்காரு .
ஆனா ...இவ்ளோ நடந்து இருக்கு விஜய் இந்த நேரம் வரைக்கும் வாய தெறந்து இப்படி பண்ணாதிங்கன்னு ஒரு வார்த்தை அவர் ரசிகர்களுக்கு சொல்லல . சொல்லவும் மாட்டாரு .ஏன் தெரியுமா ?
அப்பறம் எப்படி அவர் பின்னாடி இருக்க பலத்த அவர் prove பண்ண முடியும் . இந்த பணம் புகழ் எல்லாத்துக்கும் பின்னாடி ஒரு பெரிய power game இருக்கு . தன்னை ரசிப்பதை தாண்டி தனக்காக துடிப்பதற்கும் ,தனக்காக வெடிப்பதற்கு ,ஏன் தனக்காக தீக்குளிப்பதற்கும் கூட தயாராக இருக்கும் ஒரு ரசிகன் இருப்பது இவர்களுக்கு பிடித்திருக்கிறது . தேவையாகவும் இருக்கிறது .
இந்த நடிகர்களை அரசியலுக்கு வர போகிறீர்களா என்று தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள் ,பேட்டி எடுக்காதீர்கள் .ஏனென்றால் இவர்கள் ஏற்கனவே அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .அதுவும் நன்றாகவே .
மேலும் ஒரு விஷயம் .....பெண்களின் பிறப்புறுப்பு அசிங்கமான விஷயம் இல்லை மானிடர்கள் .அது அழகானது ,அதில் இருந்து தான் நீ வருகிறாய் ,உன் வாழ்க்கை முழுவதும் அதன் உள்ளே திரும்பி செல்லவே எத்தனிக்கிறாய் ,அப்படி இருக்க நீ வந்த இடத்தை நீயே அசிங்க படுத்தலாமா ? இப்படி நீ அசிங்கப்படுத்துவதினால் பெண்கள் பேசாமல் பொய் விடுவார்களா ? மாட்டார்கள் .
இனி பெண்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டார்கள் . பேசிக்கொண்டே தான் இருப்பார்கள் .நீ கடைசிவரை கட்டவுட்டிற்கும் உன் வாழ்க்கைக்கும் சேர்த்து பால் ஊற்றி கொண்டே இரு .
சரி எல்லாம் பேசியாகிவிட்டது .
ரசிகர்களை குறைசொல்லிக்கொண்டே இருக்கலாமா இல்லை விக்ரம் வேதா படத்தில் வருவது போல் கேட்கிறேன் .
குற்றத்தை செய்பவன் கெட்டவனா ,இல்லை செய்பவனை தடுக்காமல் இருப்பவன் கெட்டவனா ?
ஷாலின்

கருத்துகள் இல்லை: