வியாழன், 10 ஆகஸ்ட், 2017

புராண புரட்டுகளை எதிர்த்து அறிவியல் பேரணி ! வினவு ..

சென்னை, பெங்களூரு, பூனே, அகமதாபாத், போபால், திருவனந்தபுரம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அறிவியலுக்கான பேரணி நடைபெற்றது.

கொல்கத்தாவில் மாணவர்கள் ஊர்வலம்
ந்தியாவின் முன்னணி ஆய்வு நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளின் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகஸ்ட் 09, 2017 அன்று நாடு முழுவதும் 26 நகரங்களில் அறிவியலுக்கான பேரணி (March for Science) ஒன்றை நடத்தினர். திருப்புமுனை அறிவியல் சங்கம் (BBS-Breakthrough Science Society) என்ற அறிவியலாளர்களின் கூட்டமைப்பு இதை ஒருங்கிணைக்கிறது.
அறிவியல் துறையில் நிகழ்த்தப்பட்ட ஹிக்ஸ் போசான் மற்றும் ஈர்ப்பு அலைகள் உள்ளிட்ட பாய்ச்சல், திருப்புமுனை கண்டுபிடிப்புகளில் இந்திய விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியுள்ளனர். மங்கல்யானின் மூலம் கோள்களுக்கிடையான திட்டங்களுக்கும் விண்வெளி மற்றும் அதன் தொழில்நுட்பங்களில் வெளிநாட்டு சார்பை குறைப்பதிலும் பங்காற்றியுள்ளனர். ஆனால், மறுபுறம், இந்திய அறிவியல் துறையானது பெருகிவரும் அறிவியலற்ற நம்பிக்கைகள் மற்றும் மத அடிப்படைவாதம் ஆகியவற்றாலும், குறைக்கப்பட்டுவரும் அரசின் நிதி ஒதுகீடுகளாலும் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.

“பண்டைய இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளால் உந்துதலும் பெருமிதமும் அடைகிறோம். அதே வேளையில், அறிவியலற்ற, ஆதாரங்களற்ற கருத்துக்கள் நாட்டின் உயர் பதவியிலுள்ளவர்களால் பரப்பப்படுவதைக் காண்கிறோம். நாம் நெஞ்சார விரும்பும் உண்மையான தேசபக்திக்கு பதிலாக இனவாத மோதல்களையும், ஒடுக்குமுறைகளையும் அது தூண்டுகிறது.
சர்வதேச அளவில் நடந்ததைப் போலவே இந்தியாவிலும் அறிவியல் சமூகத்தின் உறுப்பினர்கள் அறிவியல் மற்றும் அறிவியல் அணுமுறைகளை பாதுகாப்பதற்காக ஒருங்கிணைந்து நிற்க வேண்டிய தருணமிது.”
– என பேரணிக்கு அறைகூவல் விடுத்து BBS சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • அறிவியல் ஆய்வுகளுக்கும், கல்விக்கும் அரசின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது – அதாவது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்த பட்சம் 3% அறிவியல் ஆய்வுகளுக்கும், 10% கல்விக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  • அறிவியலுக்கு புறம்பான நம்பிக்கைகள் பரப்பப்படுவதை தடை செய்வது, அதிகரித்துவரும் மற்றும் மத சகிப்பின்மையை நிறுத்துவது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51(அ)-வின் படி மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்
  • கல்வி, பாடத்திட்டங்கள் அறிவியல் ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்ட கருத்துக்களை கொண்டிருப்பதை உறுதிப்படுத்துதல்
  • அரசின் அனைத்து கொள்கை முடிவுகளும் அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.
ஆகியன இந்தப் பேரணியின் முக்கிய கோரிக்கைகளாகும்.
கடந்த ஏப்ரல் 22, 2017 அன்று உலகளவில் சுமார் 600 நகரங்களில் சுமார் பத்து லட்சம் மக்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்ட அறிவியல் பேரணி இந்த பேரணிக்கு உந்துதலாக இருந்ததாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் ஆய்வுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி வெட்டப்பட்டு வருவதற்கு எதிராகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீழ் அறிவியல் விரோத அரசக் கொள்கைகளுக்கு எதிராகவும் அந்த உலகளாவிய நிகழ்வு நடத்தப்பட்டது. அறிவியல் சமூகம் அதில் பெருவாரியாக பங்கெடுத்துக் கொண்டதுடன் நிதி வெட்டுக்கு எதிராகவும், ட்ரம்பின் பருவநிலை மாற்றத்தை நிராகரிக்கும் கருத்துக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தியாவிலும் கூட, நிலைமை அதே மாதிரியாக தான் உள்ளது. மக்களின் வாங்கும் திறன் சமச்சீர் அளவை (PPP) அடிப்படையிலான கணக்கீட்டின் படி இந்தியாவில் மொத்த தேசிய வருமானத்தில் 0.8 லிருந்து 0.9 சதவீதம் மட்டுமே அறிவியல் ஆய்வுகளுக்காக ஒதுக்கப்படுகிறது. அதுவே, தென்கொரியாவில் 4.15%, ஜப்பானில் 3.47%, ஸ்வீடனில் 3.16%, டென்மார்க்கில் 3.08% நிதி ஒதுக்கப்படுகின்றன என்கிறார்கள் இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ள அறிவியல் சங்கத்தை சேர்ந்தவர்கள்.
இதையடுத்து சென்னை, பெங்களூரு, பூனே, அகமதாபாத், போபால், திருவனந்தபுரம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அறிவியலுக்கான பேரணி நடைபெற்றது. இதில் அறிவியலாளர்களுடன், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஒருபுறம் பண்டைய பண்பாட்டின் பெயரால் போலிஅறிவியலும், புராணக் குப்பைகளும் அறிவியலாக பரப்பப்பட்டு வருகிறது. மறுபுறம் நவீன அறிவியலின் சாதனைகள் மோசடித்தனமாக உரிமை கோரப்படுகிறது. இந்த சூழலின் தேவையை உணர்ந்து உண்மையான அறிவியலாளர்கள் மக்களுடன் ஒருங்கிணைந்து அதை முறியடிப்பதற்கு முன்வந்துள்ளனர்.
மறுபுறம், அரசின் மக்கள் விரோத, அறிவியலற்ற கொள்கைகளுக்கு எந்தக் கேள்வியுமின்றி ஊதுகுழலாக செயல்பட்டுவந்த, அனைவரையும் கனவுகாணச் சொல்லி வந்த அப்துல் கலாம் போன்றோர் விஞ்ஞானிகளா? – என்பதையும் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.
மேலும் படிக்க:

கருத்துகள் இல்லை: