வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

மோடி முன்னிலையில் இணைப்பு முகூர்த்தம்: அதிமுக-வில் அதிரடி ஆபரேஷன் என்கின்ற விபசாரம்!


‘எல்லா சாலைகளும் ரோம் நோக்கி’ என்பதுபோல... இப்போது அதிமுக-வின் எல்லா சாலைகளும் டெல்லி நோக்கித் திரும்பியுள்ளன.
சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்ற நிலைமாறி கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி அணி, தினகரன் அணி, ஓ.பி.எஸ். அணி என்று மூன்று அணிகளாய் மாறிய அதிமுக-வில், இன்று தினகரனைத் தவிர்த்து மற்ற இரு அணிகள் இணையும் புள்ளியை நெருங்கியிருக்கின்றன.
இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவி ஏற்பு விழாவுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மட்டுமே டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. இருவரும் தத்தமது அணி முக்கியஸ்தர்களோடு நேற்று டெல்லி சென்றனர்.
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகிய இரு தேர்தல்களிலும் தினகரன் பாஜக-வுக்கு ஆதரவு அளித்தபோதும் அவருக்குப் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு இல்லை எனும்போதே தெரிந்துகொள்ளலாம் பாஜக-வின் திட்டத்தை.

ஆம், தினகரனை முற்றாகத் தவிர்த்துவிட்டால் இரு அணிகளும் இணைந்து சின்னத்தை மீட்கலாம் என்பதே டெல்லி சொல்லி அனுப்பிய செய்தி.
இந்த நிலையில்தான் மாலை டெல்லி பயணம் என்றால்... நேற்று ஆகஸ்டு 10ஆம் தேதி காலை, அதிரடியாக அதிமுக தலைமைக் கழகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகளைக் கூட்டி தினகரனை நீக்குவதாக அறிவித்தார் முதல்வர். இது அதிமுக-வின் அமைப்பு விதிகளுக்குட்பட்டு நடந்ததோ இல்லையோ... எங்களுக்கு தினகரன் வேண்டாம் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டார் எடப்பாடி. இதே நிலைப்பாட்டைதான் ஆறு மாதங்களுக்கு முன்பே மேற்கொண்டு தர்ம யுத்தத்தை தொடங்கினார் ஓ.பன்னீர்.
இப்போது எடப்பாடி, ஓ.பன்னீர் இருவருமே தினகரன் எதிர்ப்பு என்பதில் ஒன்றுபட்டுவிட்டதால் டெல்லியிலேயே இன்று பிரதமர் மோடி முன்னிலையில் இவர்களுக்கான இணைப்பு முறைப்படி மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக-வில் பரபரப்பாக நிலவுகிறது.

அதேநேரம் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது பற்றி நேற்று இரவு வரை கூட இரு அணிகளுக்கு இடையிலும் மும்முரமாக ஆலோசனை நடந்திருக்கிறது.
இரு அணிகளும் இணையும்பட்சத்தில் ஓ.பன்னீருக்குத் துணை முதல்வர் பதவியும், அவர் விரும்பும் துறைகளும் தரப்படும். இப்போதும் தினகரன் ஆதரவாளர் என்று கருதப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக, ஏற்கெனவே சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து அனுபவம் பெற்ற ஓ.பன்னீர் அணியை சேர்ந்த செம்மலையை அத்துறைக்கே துறை அமைச்சர் ஆக்குவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இப்போது தொழில்துறை அமைச்சராக இருக்கும் எம்.சி.சம்பத்துக்குப் பதிலாக ஓ.பன்னீர் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜனை தொழில்துறை அமைச்சர் ஆக்கும் திட்டம் இருக்கிறது. வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதவியும் பறிக்கப்படலாம் என்கிறார்கள்.
நேற்று அதிமுக தலைமைக்கழகத்தில் கூடி தினகரனை நீக்குவதாக அறிவிப்பதற்கு முன்பே இத்தகவல் தெரிந்த கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி முதல்வரிடம் போய், “எனக்கு சின்னம்மாதான் தெய்வம். உங்க நிலைமை புரியுது. எனக்கு இனிமே அமைச்சர் பதவி தேவையில்லை” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாராம்.
இத்தகைய அமைச்சரவை மாற்ற ஐடியாவோடு இன்று எடப்பாடி, ஓ.பன்னீர் ஆகிய இருவரும் பிரதமர் மோடியை தனித்தனியே சந்திக்க வாய்ப்பிருக்கிறது என்றும், அப்போது உடன்பாடு எட்டப்பட்டு விரைவிலேயே இணைப்பு நடக்கலாம் என்கிறார்கள் டெல்லிவாலாக்கள்.
இத்தனையும் நடக்கும்போது தினகரன் கைகள் என்ன பூப்பறித்துக் கொண்டா இருக்கும்?

ஏற்கெனவே தன்னால் அறிவிக்கப்பட்ட பதவிகளை ஏற்றுக்கொண்ட 19 எம்.எல்.ஏ-க்களிடம் தினகரன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். அப்படி ஒருவேளை எடப்பாடி அணியும், ஓ.பன்னீர் அணியும் தம்மை ஒதுக்கிவிட்டு இணைந்துவிட்டால்... தன்னிடம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களை வைத்து ஆட்சிக்குக் குழப்பம் ஏற்படுத்தவும் தயாராகிவிட்டாராம் தினகரன். இதனால்தான், அறுவைசிகிச்சைதான் வேண்டுமென்றால் அதற்கும் தயார் என்கிறார் தினகரன்.
இன்று டெல்லியில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து, தினகரன் அணியில் இப்போது இருக்கும் குறைந்தபட்சம் இருபது எம்.எல்.ஏ-க்கள்... அதிகபட்சம் நாற்பது எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரைச் சந்தித்து எடப்பாடி அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கும் திட்டமும் இருக்கிறதாம்.
டெல்லி ஆபரேஷன், தினகரன் ஆபரேஷன் ஆகிய இரண்டு ஆபரேஷன்களுக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது, இப்போது பேஷண்ட் ஆக இருக்கும் அதிமுக..  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: