புதன், 9 ஆகஸ்ட், 2017

ராஜ்யசபா அகமது பட்டேல் வெற்றி .. பாஜகவின் தில்லு முல்லுகள் தகர்ந்தது எப்படி?


குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குஜராத் சட்டசபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாஜக சார்பில் அதன் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர். 3 இடங்களுக்கு 4 பேர் போட்டியிடுவதால் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
சோனியாவின் வலதுகரம் என அழைக்கப்படும், அகமது பட்டேலை தோற்கடிக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டது. இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் போதும் ஒரு எம்பியை தேர்ந்தெடுத்துவிட முடியும்.

கட்சிகளின் எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் அமித்ஷா, இரானி, அகமது பட்டேல் ஆகிய மூவரும் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும். பாஜகவுக்கு 121 எம்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 51 எம்.எல்.ஏ.க்களும் உள்ளதால் அது சாத்தியப்படும் என கருத்து இருந்தது.

ஆனால் சில வாரங்களுக்கு முன்பு குஜராத் மாநில காங்கிரசின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சங்கர்சிங் வகேலா அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.
மேலும், அவருக்கு ஆதரவாக 6 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்தனர். இதனால் சட்டசபையின் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 182ல் இருந்து 176 ஆகவும் காங்கிரசின் பலம் 51 ஆகவும் குறைந்துபோனது. அவர்களை தக்க வைக்க பெங்களூர் அருகேயுள்ள ரிசார்ட்டுக்கு காங். மேலிடம் அழைத்துச் சென்றது.
ஆனால் 44 எம்எல்ஏக்கள்தான் ரிசார்ட் சென்றனர். மற்ற 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வகேலாவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, வாக்குச் சீட்டில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிப்பதற்காக ‘நோட்டா’ வசதியும் சேர்க்கப்பட்டு இருந்தது.
இது காங். வயிற்றில் புளியை கரைத்தது. காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது உறுதியானபோதிலும், அகமது பட்டேல் வெற்றி பெற கூடுதலாக ஓட்டு தேவை.
ஆனால், பாஜகவின் பல்வந்த்சிங் ராஜ்புத்துக்கு 31 ஓட்டுகளே கிடைக்கும். அவர் வெற்றி பெற மேலும் 14 ஓட்டுகள் தேவைப்படும் சூழல் இருந்தது. காங்கிரசின் கூட்டணியான தேசியவாத காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.க்களும், ஐக்கிய ஜனதா தளம், குஜராத் பரிவர்த்தன் கட்சிக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர்.
இதில் தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் அகமது பட்டேல் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தபோது உடன் இருந்தவர்கள் ஆவர். இதனால் இவர்கள் ஆதரவு காங்கிரசுக்கு கிடைக்கும் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில்தான், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2பேர் தாங்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக பகிரங்கமாக கூறினர். எனவே அவர்கள் வாக்குகளை செல்லாது என அறிவிக்க காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பாஜகவோ, மூத்த அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அமைச்சர் குழுக்களை அனுப்பி, மாற்றி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்குகளும் செல்லும் என அறிவிக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவிடுத்தது.
பாஜக தலைவரும், வேட்பாளர்களில் ஒருவருமான அமித்ஷா, தேர்தல் ஆணைய அலுவலகம் வெளியே சேர் போட்டு அமர்ந்தேவிட்டார்.
ஆனால் இந்த நெருக்கடி தந்திரங்களுக்கு வளையவில்லை தேர்தல் ஆணையம். மாற்றி வாக்களித்த இரு காங். எம்எல்ஏக்கள் வாக்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். ரகசிய வாக்கெடுப்பு விதிமுறைகளை அவர்கள் மீறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல் ஆணைய முடிவு, அகமது பட்டேல் வெற்றிபெற நம்பிக்கையளிப்பதாக இருந்தது. தேர்தல் ஆணைய முடிவை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது. ஆனால் பாஜக எம்எல்ஏ ஒருவர் அகமது பட்டேலுக்கு வாக்களித்ததாக பேட்டியளித்ததால் நள்ளிரவு 1.20 மணியளவில் பாஜக சார்பில் பெறப்பட்ட புகாரை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தப்பட்டது.
ஆனாலும் உடனடியாக மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அகமது பட்டேல் 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல அமித்ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோரும் ராஜ்யசபாவுக்கு தேர்வாகியுள்ளனர். பாஜகவின் 3வது வேட்பாளர் பல்வந்த்சிங் ராஜ்புத் தோல்வியடைந்தார்.
அகமது பட்டேல் சரியாக 44 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன  tamiloneindia

கருத்துகள் இல்லை: