திங்கள், 7 ஆகஸ்ட், 2017

ஊழலுக்கு ஒத்துவராத உதயசந்திரன் மாற்றம்? செங்கோட்டையன் கைங்கரியம்?


உதயசந்திரனை மாற்ற முயற்சியா?
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டபோது, செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் நியமிக்கப்பட்டார்.
செங்கோட்டையனும் உதயசந்திரனும் பள்ளிக் கல்வித்துறையில் பல புதுமைகளைப் புகுத்தினர். ரேங்க் பட்டியல் முறை ஒழிப்பு, ஆசிரியர் பணியிட மாற்றத்தில் வெளிப்படைத் தன்மை, புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணிகளில் மும்முரம் என்று இந்த கூட்டணியின் நடவடிக்கைகளைப் பலரும் பாராட்டினர்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதவியில் இருந்து உதயசந்திரன் மாற்றப்பட இருக்கிறார் என்ற தகவல் கோட்டை வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பரவி வருகிறது.

இந்த யூகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று ஆகஸ்டு 6 ஆம் தேதி, ஓர் அறிக்கை விட்டிருக்கிறார்.
அதில், “உதயசந்திரன் பள்ளிக் கல்வித்துறை செயலாளராகப் பொறுப்பேற்று சரியாக ஐந்து மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் அவரை அத்துறையிலிருந்து இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கான காரணம் ஆட்சியாளர்களின் ஊழலுக்குச் உதயசந்திரன் ஒத்துழைக்கவில்லை என்பதுதான். தமிழ்நாட்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் அண்மையில் தரம் உயர்த்தப்பட்டன. இதையடுத்து ஏற்கெனவே காலியாக இருந்த இடங்களையும் சேர்த்து 2,950 ஆசிரியர் பணியிடங்களை இடமாறுதல் மூலம் நிரப்பட வேண்டிய சூழல் உருவானது. பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான அரசாணை கடந்த மாதம் 18ஆம் தேதி வெளியான நிலையில் அடுத்த சில நாள்களில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்களின் உதவியுடன் முதற்கட்டமாக 700-க்கும் கூடுதலான அதிகாரிகள் நிர்வாக இடமாறுதல் என்ற பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதுபற்றி விசாரணை நடத்தக்கோரியும், மாறுதலை ரத்து செய்யக் கோரியும் கடந்த 24ஆம் தேதி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதன்பின்னர் அடுத்தகட்ட இடமாறுதல்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அனுமதி அளிக்கவில்லை. நிர்வாக இடமாறுதல் வழங்கப்பட்ட 700 பேரிடமும் தலா 5 லட்சம் வீதம் ரூ.35 கோடி கையூட்டு பெறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக மேலும் பல நூறு ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கி மீண்டும் ஒரு வசூல் வேட்டை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதையடுத்து உதயசந்திரன் வளைந்து கொடுக்க மறுப்பதால் கட்சிக்காரர்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியவில்லை என்று பினாமி முதலமைச்சரிடம் செங்கோட்டையன் முறையிட்டதாகவும், அதையேற்று உதயசந்திரனை இடமாற்றம் செய்ய தலைமைச் செயலாளருக்கு முதலமைச்சர் ஆணையிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையான தேவை தரமான கல்வி வழங்குவதாகும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை மாற்றத்துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும். உதயசந்திரனை இடமாற்றம் செய்வதால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால், பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட கல்வி வளர்ச்சி சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். எனவே, இடமாற்ற முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: