ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

இந்த ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

இந்த ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தமிழக அரசின் சார்பில் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் விழா கொண்டாடப்பட்டது. அந்த வரிசையில் பெரம்பலூரில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். உருவ படத்தையும், புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்தார். பின்னர் அவர் ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:- எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் பெண் எம்.ஜி.ஆராக மக்கள் மனதில் இடம் பிடித்து எவ்வளவோ திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார்.


 இதனை எதிர்கட்சிக்காரர்கள் கூட பாராட்டி இருக்கிறார்கள். மக்கள் மனதில் இருந்து அவர்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. பொதுமக்களுக்கு எம்.ஜி.ஆர் போல் உதவியவர்கள் யாரும் கிடையாது. நடிகர்களாக இருந்து எம்.ஜி.ஆர் போல் ஆகவேண்டும் என நினைப்பவர்கள், ஒருபோதும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை தான் நினைவுக்கு வருகிறது. எம்.ஜி.ஆரை போல் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் பல தியாகங்களை செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாதவர்களால், ஒரு போதும் புனித ஜார்ஜ் கோட்டையை பிடிக்க முடியாது.

ஜெயலலிதா வழியில் இந்த ஆட்சி மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்ட பணிகளை விரிவாக்கம் செய்ய தமிழகத்தில் உள்ள 2,065 ஏரிகளை தூர்வார ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள். சிலர் ஆட்சியை கலைக்க வேண்டும் என முற்படுகிறார்கள். அவர்களால் எதுவும் செய்து விட முடியாது. ஜெயலலிதா ஆத்மா இருக்கும் வரை இந்த ஆட்சியை அசைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்

கருத்துகள் இல்லை: