செவ்வாய், 23 மே, 2017

சென்னை ஐ ஐ டி-யில் பெண் பலாத்கார முயற்சி .. இஞ்சினியர் அகப்பட்டார்!

சென்னை ஐ.ஐ.டி-யில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவிக்கு கல்லூரி வளாகத்திலேயே நிகழ்ந்த பாலியல் கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாரில் உள்ள ஐ.ஐ.டியில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் விடுதியில் தங்கி இன்ஜினியரிங் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 9 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை சில இளைஞர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இருள் நிறைந்த பகுதிக்கு சென்றதும் மாணவியை அவர்கள் வழிமறித்துள்ளனர். அதில் ஒரு இளைஞர் மாணவியிடம் அத்துமீறியுள்ளார். இதை எதிர்பார்க்காத மாணவி தன்னை காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர். அதை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அதன் பிறகு நடந்த சம்பவத்தை, அப்பெண் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து ஐ.ஐ.டி உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை கோட்டூர்புரம் போலீசார் ஐஐடி வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர். இதில் மாணவியிடம் ஒரு இளைஞர் அத்துமீறும் சம்பவம் பதிவாகியிருந்தது. மேலும் இதுகுறித்து நடத்திய விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த இன்ஜினியர் அந்தோணி என்பது தெரியவந்ததுள்ளது.
இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் சென்னை ஐ.ஐ.டி-க்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. பாதிக்க பட்ட மாணவியும் போலீசில் புகார் கொடுக்க வில்லை. இதை அடுத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்த வழக்கில் இன்ஜினியர் அந்தோணியை கைது செய்து சிறையில் அடைத்தனர், போலீசார். ஐ.ஐ.டி வளாகத்தில் அந்நியர்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு உள்ளது. அதையும் மீறி அந்தோணி எப்படி ஐ.ஐ.டி வளாகத்துக்குள் சென்றார் என்று விசாரித்தபோது, அவர் புராஜெக்ட்டுக்காக அங்கு செல்வது தெரியவந்தது. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் இடம் பிடித்த சென்னை ஐஐடியில் இதுபோன்ற சம்பவம் நடந்தது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கடந்த ஏப்ரல்-30 ஆம் தேதி ஐ.ஐ.டி வளாகத்தில் இருக்கும் பிரம்மபுத்திரா மாணவர் விடுதி பின்புறம் உள்ள முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: