புதன், 24 மே, 2017

அமைச்சர் பதவி உடனே வேண்டும் ... அதிமுக அணிகள் கோரிக்கை ...


கூவத்துார் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், அ.தி.மு.க., - சசிகலா அணியில், அதிருப்தி அதிகரித்துள்ளது. அமைச்சர்களுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கியுள்ள, எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரிடம் புகார் பட்டியல் வாசிக்க, அடுத்தடுத்து படையெடுத்து வருகின்றனர். < நேற்று முன்தினம், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் கூட்டாக, முதல்வரை சந்தித்தனர். நேற்று, 10 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து, தங்கள் குறைகளை கொட்டினர்.'சட்டசபை கூட்டத்திற்கு முன், மந்திரி பதவி வேண்டும்; மாவட்டம், ஜாதி வாரியாக, அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட வேண்டும்' என்றும், அவர்கள் நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளனர்.
அரசு பணிகளுக்கான, 'டெண்டர்'களில், ஜெயலலிதா இருந்த வரை, கட்சிக்கு, 8 சதவீதம், அமைச்சர்களுக்கு, ௨ சதவீதம் கமிஷன் பெறப்பட்டது.
வாக்குறுதி    : தற்போது,அமைச்சர்கள் தரப்பில், 14 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது. இந்த தொகை, யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற விபரம் தெரியவில்லை.முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரும் முன், சென்னை அருகேயுள்ள கூவத்துார் சொகுசு விடுதியில், எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டனர்.
அப்போது, அரசுக்கு ஆதரவு தரும், எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதந்தோறும் பணம் தரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதற்காக, அமைச்சர்கள் வாங்கும் கமிஷன் தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவிக்க ப்பட்டது; அவை எதுவும் நிறைவேற்றப் படவில்லை.
மறுப்பு


அ.தி.மு.க., அணிகளை இணைக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, அமைச்சர்கள்
அறிவித்தனர். பேச்சு நடத்த குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், யாரிடமும் பேசவில்லை.எதன் அடிப்படையில், குழு அமைக்கப்பட்டது; குழு அமைத்த பின், ஏன் பேச்சு நடத்தவில்லை; பேச்சுக்கு தடையாக இருப்பது என்ன... என்ற எந்த விபரங்களையும், எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிவிக்கவில்லை.
குறிப்பிட்ட சில அமைச்சர்கள் தான், எல்லா முடிவுகளையும் எடுக்கின்றனர். ஆட்சி கவிழாமல் காப்பாற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, அந்த முடிவுகள் குறித்தோ, அதன் பின்னணி குறித்தோ தெரிவிக்க மறுக்கின்றனர். எனவே, 'கூவத்துாரில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தற்போதைய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும்' என, எம்.எல்.ஏ.,க்கள் போர்க்குரல் எழுப்புகின்றனர். அதற்காக, சென்னையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.

மந்திரி பதவி வேண்டும்

அதை, முதல்வர் பழனிசாமியை சந்தித்து முறையிட, படையெடுக்க துவங்கி உள்ளனர். நேற்று முன்தினம், முன்னாள் அமைச்சர்கள் மூவர் அடங்கிய, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வரை சந்தித்து, புகார்களை பட்டியலிட்டனர். அதைத் தொடர்ந்து, நேற்று, 10 எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்தனர்.
ஈரோடு கிழக்கு தென்னரசு, மணப்பாறை சந்திரசேகர், விளாத்திகுளம் உமா மகேஸ்வரி, திருப்பூர் தெற்கு குணசேகரன், ராதாபுரம் இன்பதுரை, மண்ணச்சநல்லுார் பரமேஸ்வரி, பெருந்துறை கே.வி.ராமலிங்கம், பெரம்பூர் வெற்றிவேல், தி.நகர் சத்யா உட்பட, 10 எம்.எல்.ஏ.,க்கள், நேற்று காலை, தலைமைச் செயலகம் வந்தனர்.
அவர்களில் சிலர் தனியாகவும், சிலர் தங்கள் மாவட்ட அமைச்சர்களுடன் சேர்ந்தும், முதல்வரை சந்தித்து பேசினர்.
'கூவத்துார் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சட்டசபை கூடும் முன், மந்திரி பதவி வழங்க வேண்டும்; மாவட்டம், ஜாதிவாரியாக, அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும். அதுபற்றி விவாதிக்க, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, உடனே கூட்ட வேண்டும்' என, அனைவரும் வலியுறுத்தி உள்ளனர். அமைச்சர் பதவி வேண்டும்

இதில், ராதாபுரம் இன்பதுரை, தற்போதைய அமைச்சரவையில், நாடார் சமுதாயத்திற்கு, பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என, முதல்வரிடம் நேரிடையாக வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல, மீதமுள்ள எம்.எல்.ஏ.,க்களும், முதல்வரை சந்தித்து, முறையிட முடிவு செய்துள்ளனர். எனவே, எம்.எல்.ஏ.,க்களின் படையெடுப்பு தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களின் கோரிக்கைகளை, இனிமேலும் நிறைவேற்றாவிட்டால், அவர்கள் அணி மாறும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில், உடனடி முடிவெடுக்க வேண்டிய நெருக்கடி, முதல்வர் பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.,க்கள் கூறுவது என்ன?

முதல்வரிடம் பேசிய விஷயங்கள் வேறாக இருந்தாலும், வெளியில், தொகுதி பிரச்னைகள் பற்றி விவாதித்ததாக, எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர்.
எம்.எல்.ஏ., இன்பதுரை கூறும்போது, ''தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு, நிலம் கொடுப்போருக்கு, ஆறு மடங்கு இழப்பீடு வழங்க, சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் அல்லது சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். பெருமணல், கூட்டாப்புளி, கூடுதாழை பகுதியில், துாண்டில் வளைவு அமைக்க வேண்டும்,'' என, முதல்வரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., குணசேகரன் கூறும்போது, ''திருப்பூர் மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர் ராதாகிருஷ்ணனுடன் சென்று, முதல்வரை சந்தித்தோம். திருப்பூர் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், முதல்வரை சந்தித்து பேச, தேதி கேட்டோம்,'' என்றார்.


- நமது நிருபர் -   தினமலர்

கருத்துகள் இல்லை: