வெள்ளி, 26 மே, 2017

குஷ்பு தமிழிசை டுவீட்டர் மோதல் ...

சென்னை, ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் நடக்குமா? நடக்காதா? என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில், வாழ்க்கையில் எதிர்ப்பு, ஆதரவு இருப்பது சகஜம்தான். எதிர்ப்பு இல்லாமல் வளரவே முடியாது. அதுவும் அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். நல்லவர்களுக்கு எப்போதும் எங்களுடைய கட்சியில் இடம் உண்டு என பா.ஜனதா தலைவர்கள் ரஜினிகாந்திற்கு பா.ஜனதா தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.இப்போது இவ்விவகாரம் தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், நடிகை குஷ்புவுக்கும் இடையே கடும் மோதல் நடந்து உள்ளது.


 ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்ற அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசையை டுவிட்டரில் டேக் செய்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு,  “பா.ஜனதா தலைவர் தமிழிசையின் அறிக்கையை படித்தேன். மேடம், கட்சியில் மக்கள் சேர்வது அக்கட்சியின் கொள்கையின் அடிப்படையிலும், சுய உணர்வின் அடிப்படையிலும் இருக்கவேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக வலது, இடது, சென்டர் என எல்லாத் திசைகளிலும் ரஜினியிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் காங்கிரஸ் கட்சியில் விரும்பியே சேர்ந்தேன். காங்கிரசில் சேருமாறு எனக்கு யாரும் தூது அனுப்பவும் இல்லை, கேட்கவும் இல்லை. உங்களைப் பார்க்கும்போது என்னுடைய முடிவு சரியென்றே கருதுகின்றேன்,” என கூறிஉள்ளார். 

இதற்கு பதில் டுவிட் செய்த தமிழிசை, “குஷ்பு நீங்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தீர்களா? அல்லது தாவினீர்களா? திமுகவில் சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் தாவியது எந்த கொள்கையின் அடிப்படையில்? அனைவருக்கும் அது தெரியும். உங்களை காங்கிரஸில் சேர்க்க தூதுவர்கள் வரவில்லை. ஆனால் உங்களை திமுகவிலிருந்து விரட்ட ஆட்கள் இருந்தார்களே?” என்றார்.

இதற்கு பதிலளித்து டுவிட் செய்த குஷ்பு “உங்கள் மூளைக்கு கொஞ்சம் மீண்டும் வேலை கொடுத்து யோசித்துப்பாருங்கள் மேடம். 

நான் திமுகவிலிருந்து விலகி 6 மாதம் யோசித்து பின்னர்தான் காங்கிரஸ் கட்சிக்கு சென்றேன். நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்களை அதே நாளில் பா.ஜனதாவில் சேர்த்துக் கொள்கிறீர்கள்? அதேபோல் நீங்கள் மற்றவர்கள் மனதை படிக்கக்கூடியவர்கள் என்றால் என்னுடைய கொள்கை என்ன என்பதை படித்துச் சொல்ல முடியுமா? அது உங்கள் கற்பனைகளிலிருந்து வெகுதூரத்தில் உள்ளது. உங்களை மிகவும் வருத்திக் கொள்ளாதீர்கள். அதேபோல் நான் திமுகவிலிருந்து வெளியேறும் போது நீங்கள் எனக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கவில்லை. 

உங்களைப் போன்ற ஒருவர் கிசுகிசுக்களை நம்புகிறவராக இருக்கிறாரே என்று எனக்கு வருத்தமாக உள்ளது” என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த தமிழிசை, “நான் மற்றவர்கள் மூளையில் உள்ளதை கணிப்பதில் சிறந்தவள். ஒரு மருத்துவராக என்னால் அதை சிறப்பாக செய்ய முடியும். நல்லவர்களை கட்சியில் சேர்க்க முயற்சிப்பது யாசகம் கேட்பது அல்ல. வார்த்தைகள் தான் ஒருவரின் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன” என்றார். தொடர்ந்து பேசிய குஷ்பு, “உங்களுடைய கேள்விக்குதான் நான் பதில் சொன்னேன். இந்த விவாதம் எப்படித் தொடங்கியது என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். செயல்களே ஒருவரின் சிந்தனைகளைத் தீர்மானிக்கின்றன” என்றார். குஷ்பு - தமிழிசை இடையே இந்த வாக்குவாதம் நடைபெற்ற போது கருத்து தெரிவித்தவர்களுக்கும் குஷ்பு பதிலடி கொடுத்து உள்ளார். இருதரப்பு ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் வசைபாடிஉள்ளனர். தினத்தந்தி

கருத்துகள் இல்லை: