ஞாயிறு, 21 மே, 2017

மெரீனா ... திருமுருகன் காந்தி, வேல்முருகன், இயக்குனர் கவுதமன் கைது

மெரினாவில் தடையை மீறி பேரணி நடத்திய திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு மெரினா கடற்கரையில் கூட்டம் நடத்தவோ, நிகழ்ச்சிகள் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று இலங்கை இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி மெரினாவில் அனுசரிக்கப்படும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்தார்.
இதனால் மெரினா கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு தடுப்புக் காவல் மையம் அமைக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். தடுப்புக் காவல்கள் அமைக்கப்பட்டு, கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள 9 வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

மெரினா கடற்கரையில் பிரபாகரன் உருவம் பதித்த, கருப்பு சட்டை மற்றும் டி-சர்ட்டுகள் அணிந்து வந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த 12 பேரையும் குண்டுக்கட்டாக தூக்கி போலீஸார் பேருந்தில் ஏற்றினர்.
இதனால் திருவள்ளுவர் சிலையை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியை அனுசரிக்க திருமுருகன் காந்தி, இயக்குநர் வ.கவுதமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பேரணியாக சென்றனர். உடன் மே 17 இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்களும் பேரணியாக சென்றனர். தடையை மீறி பேரணியாகச் சென்றதாக போலீஸார் இவர்கள் அனைவரையும் கைது செய்தனர். tamilthehindu.com

கருத்துகள் இல்லை: