ஞாயிறு, 21 மே, 2017

ராஜீவ் காந்தி .... 26 ஆண்டுகள்.. ஆண்டுகள் கடந்து போனாலும் ஆறாத வலி!

stanley.rajan.: ஒரு மனிதனின் தலைவிதிபடியே வாழ்வு அமையும், அந்த விதியின் முடிவை நோக்கியே சூழ்நிலைகள் ஒருவனை கொண்டு செல்லும், மானிட வாழ்வின் பெரும் விசித்திரமிது, மதியினால் தப்பவேமுடியாது, பெரும் ஞானி சாணக்கியனும், பல ஞான நூல்களும், ஞானிகளும், பைபிளின் சில ஆகமங்களும் சொன்ன உண்மை இது.
இந்த உண்மைக்கு பெரும் உதாரணமாக அமைந்தது ராஜிவ்காந்தியின் வாழ்க்கை,
பெரும் சொத்துக்களும், பாரம்பரியமும், அரசியலின் உச்சமும், கல்வியும், செல்வமும்,பேரழகும் ஒருங்கே அமைந்த அந்த காஷ்மீரிய பண்டிட் குடும்பத்தின் வாரிசாக பிறந்தவர் அவர்.
16 வயதில் லண்டனுக்கு சென்றார் ராஜிவ், தாத்தா போலவே ஐரோப்பியனாகவே வாழ்ந்தார், படித்தார் என்பதைவிட வாழ்வை கொண்டாடினார் என்பது சரி, விமானம் மீது ஒரு ஈர்ப்பு, விமானியாகவும் மாறினார்.
இந்திய சூழ்நிலை வேறு, இரும்பு பெண்ணாக இந்தியாவை கலக்கி கொண்டிருந்தார் இந்திரா, அரசியல் எதிரிகளை ஓடவைப்பது, உட்கட்சியை கட்டுக்குள் வைத்திருப்பது என அவரிடம் வியக்கதக்க அம்சங்கள் உண்டு, உள்நாட்டினை விடுங்கள், சர்வதேசத்தில் இந்திராவின் இந்தியா மிக திறமையாக கையாண்டு பெற்ற வெற்றிகளை இனி காலமும் இந்தியா பெறுமா? என்றால் தமிழகத்தில் சாராயம் ஒழிக்கபடுவதனை போல பெரும் சவால் மிக்கது

அவரது வாரிசாக சஞ்சய்காந்தி இன்னும் அடித்து ஆடிக்கொண்டிருந்தார், அவரிடம் ஏராளமான கனவு இருந்தது, அதிரடி திட்டங்களும் இருந்தது, மொத்தத்தில் அம்மாவுக்குத்தான் அரசியல், அம்மா காலத்திற்கு பின்போ, முடிந்தால் அதற்கு முன்போ தம்பி சஞ்சய்காந்தி , நமக்கு இந்தியா பொருத்தமே அல்ல‌ அமெரிக்கா செல்ல தாய் ஒத்துகொள்ளமாட்டார், சோவியத் ரஷ்யா வேண்டவே வேண்டாம் டாய்லெட் செல்லவும் வரிசையில் விடும் நாடு என்பது ராஜிவ் மனநிலை .
ஐரோப்பா போதும் என்றிருந்தவருக்கு, இன்னும் வாழ்க்கை பிடித்துபோனது, காரணம் இத்தாலிய காதலி, ஐர ஐர ஐரோப்பா என பாடல் மட்டும் அவருக்காக அப்போது வைரமுத்து எழுதவில்லை, மற்றபடி அந்த பாடல்வரி அவருக்காகவே எழுதியது போலவே இருவரும் உலகம் சுற்றினார்கள்.
பெரும் சொத்து, உலகின் முதல் 10 அதிகாரமான குடும்பம், அழகான மனைவி, இரு குழந்தைகள், பொழுதுபோக்கிற்கு விமான பயணம் என இருந்தவரின் விதி எங்கு மாறுகின்றது? ஒரு மனிதனின் விதி பலரின் விதியோடு எப்படி சம்மந்தபடுகிறது என்பற்கு ராஜிவே சாட்சி.
சஞ்சய் காந்தியின் அகால மரணம் இந்திரா குடும்பத்தின் முதல் பெரும் அடி, வங்க பிரிவினையால் கால்நொடிந்த பாகிஸ்தானின் முப்படைகள் + உளவுபடை எல்லாம் 24 மணிநேரமும் இந்திராகாந்தியையே நினைத்து அழுதுகொண்டிருந்தன,
பூட்டோவோ, ஜியா உல்ஹ‌க் என எல்லோரும்" இந்திரா ஒழிக" என சொல்லிகோண்டேதான் உணவு கூட உண்டார்கள்.
கிடைத்த பஞ்சாப் பிரச்சினையை அழகாக கையாண்டு, இந்திராவுக்கு செக் வைத்தது பாகிஸ்தான், பெரும் ரத்தகறையோடு அந்த பிரச்சினை முடியும் பொழுது சீக்கிய அமைப்புகள் சொன்னது, "இந்திராவின் வம்சத்தினை வேரறுப்போம்"
முதன் முதலில் இந்திரா அச்சப்பட ஆரம்பித்தார், சஞ்சயின் மனைவி பஞ்சாப் பெண், ஆபத்தில்லை மாமியார் மருமகள் சண்டையில் அவளை நிச்சயம் தொடமாட்டார்கள். ஆனால் ராஜிவ் குடும்பத்தார் மீது அவரின் கவலை ஆரம்பமானது, பாதுகாப்பு பலபடுத்தபட்டது, ராஜிவோ உலகம் சுற்றிகொண்டு இருந்தார் லண்டனுக்கு அடுத்தபடியாக இமாசல பிரதேசம் மட்டும் வருவார்.
பஞ்சாபை தொடர்ந்து இலங்கை பிரச்சினை தலை தூக்கியது, அட்டகாசமாக ஆடினார் இந்திரா, பிரபாகரனை சென்னையில் பிடித்துவைத்து கொண்டு அவர் ஜெயவர்த்தனேவுக்கு தண்ணி காட்டிய அதிரடியும், அமிர்தலிங்கத்தை அடுத்த நாட்டு அதிபர் எனும் கோணத்தில் அவர் ஜெயவர்த்தனேவிற்கு கொடுத்த கடுக்காவும் சாதாராணம் அல்ல.
ஆனால் சொந்த பாதுகாலவர்களாலே அவர் எதிர்பார்த்த மரணம் நிகழ்ந்தது, அதன் பின் ராஜிவின் தலைவிதி மாறிற்று.
சஞ்சய் இல்லை, இந்திரா இல்லை. சம்பந்தமே இல்லா ராஜிவ் கட்சிக்கு வந்தார், விதி அதன் வழியில் இழுத்துகொண்டே சென்றது.
பிரதமராக வந்த ராஜிவிற்கு இந்தியாவை முன்னேற்றும் பெரும் கனவு இருந்தது, உலகநாடுகள சுற்றிய அவருக்கு வெளிநாடுகளை போலவே இந்தியாவும் சகல துறைகளிலும் முண்ணனியில் இருக்கவேண்டுமென்ற ஆவலும் இருந்தது,
தெற்காசியாவின் பலம்பொருந்திய நாடாக இந்தியாவை மாற்ற முயற்சித்து, 2 முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார் ஒன்று இந்தியா முழுக்க கண்ணிமயம் ஆகவேண்டும் இன்னொன்று பலமான ராணுவம் வேண்டும்.
அவரின் பல அதிரடிகள் , பல திட்டங்கள் மெகா ஹிட்.
பெப்சி கொக்ககோலாவை விரட்டியது, பாலஸ்தீன போராட்டத்தை அங்கிகரித்து அராபத்தின் இயக்கத்திற்கு இந்தியாவில் அலுவலகம் அமைத்து கொடுத்தது, கணிப்பொறியுகத்திற்கு இந்தியாவை கொண்டு சென்றது என சில முத்திரைகளும் உண்டு, காலம் வழி விட்டிருந்தால் நல்ல தலைவராக நிலைத்திருப்பார், அப்போது 46 வயதே ஆகியிருந்தது.
ராஜிவ் துடிப்பான சிங்கம்தான், ஆனால் கிழட்டு நரி இலங்கையின் ஜெயவர்த்தனே பெரும் சாணக்கியன், புலிகளை அடக்க அவனால் முடியவில்லை, காரணம் புலிகளின் பின் தளம் இந்தியா. அதனை குறிவைத்தான் ஜெயவர்த்தனே.
ராஜிவிடம் கெஞ்சினான், சில இடங்களில் மிஞ்சினான். ராஜிவின் மனநிலை வேறுமாதிரி இருந்தது. இந்திய போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது உலகறிந்தது, ஆனால் ஆதாரத்தோடு சர்வதேசம் முன் இலங்கை சென்றால் இந்தியா அவமானபடும், தனிமைபடுத்தபடும் ஏக சிக்கல் உண்டு.
இந்திய ராணுவம் அங்கிருக்கட்டும், இலங்கையினை கட்டுபடுத்தலாம், போராளிகள் ஒருநாளும் இந்தியாவினை எதிர்க்கமாட்டார்கள். தீர்ந்தது விஷயம் என்பது அவர் கணிப்பு.
புலிகளுக்கு அவர் சொன்னது இதுதான், "பாருங்கள் உங்களால் ஒன்றும் கிழிக்கமுடியாது, வடமாராட்சியில் நாங்கள்தான் உங்களை உயிர்காப்பாற்றினோம், சிங்களனுக்கு சர்வதேச உதவிகள் உண்டு, உங்களுக்கு யாருமில்லை. உங்களுக்கு நாடு கொடுத்தால் இந்தியாவில் துப்பாக்கி தூக்கியவன் எல்லாம் நாடு கேட்பான்
இது ஒப்பந்தம், ஏற்றுகொள்ளுங்கள், போதவில்லையா எங்கள் பின்னாளிலிருந்து போராடுங்கள், எங்களை மீறி எவன் தொடுவான், அரசியலுக்கு வாருங்கள், துப்பாக்கி ஏந்தினால் மட்டும் ஒன்றும் மாற்றமுடியாது
ஒன்றுமனதில் வையுங்கள், இன்று உங்களுக்கு ஒன்றுமில்லை, நாங்களும் இல்லை என்றால் உதவபோவது யாருமில்லை, சிந்தியுங்கள் இதுதான் அவர் சொன்னது, செய்தது, இதற்காக சிங்களனிடம் பணயம் வைக்கபட்டது அவர் உயிர், நிச்சயமான உண்மை அது. இனி அப்படி யார் வருவார்?.."
இதனை தூற எறிந்துவிட்டு நான் கிழித்துகாட்டுகின்றேன் என வந்து இந்தியாவுடன் மோதி, ராஜிவினை கொன்று இறுதியில் முள்ளிவாய்க்காலில் மண்டை பிளந்து செத்தான் பிரபாகரன்.
ஆனால் ஜெயவர்த்தனே மகா தந்திரமாக புலிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் சண்டை மூட்டிவிட்டார், உலக வரலாற்றில் பெரும் தந்திரமான திட்டம் அது, அதில் பெரு வெற்றியும் பெற்றார்.
விதி ராஜிவினை இன்னும் சிக்கலில் தள்ளியது, போபர்ஸ் பீரங்கி ஊழல் மிக பெரிதாக விஸ்வரூபமெடுத்தது, அத்வானி ராமர் கோயில் என சங்கு ஊதிக்கொண்டிருந்தார், உலக அரங்கு சடுதியாக மாற்றம் கண்டது, சோவியத் சிதற இந்தியா நிலை தர்மசங்கடமானது.
அப்படியும் ராஜிவ் அவர் பணியினை ஆற்றிகொண்டிருந்தார், விபி சிங் இலங்கை அமைதிபடையினை திரும்ப அழைத்தபோதும் அவர் அமைதி காத்தார், காரணம் சோவியத் இனி இல்லை, இலங்கையில் இந்திய ராணுவமிருந்தால் இன்னொரு நாடு வரும், ஒதுங்குவது நல்லது.
சோவியத் மறையவும் ஆசியாவின் பலமான தலைவர்கள் குறிவைக்கபட்டனர், சதாம் அதில் முக்கியமானவர். அப்போரின் போது மும்பையில் அமெரிக்க போர் விமானம் பெட்ரோல் நிரப்பிய பொழுது கடுமையாக சாடினார் ராஜிவ்
காரணம் அராபத், சதாம் என எல்லோர் மீதும் அவருக்கொரு அனுதாபம் இருந்தது
விதி ராஜிவின் எதிரிகளை ஒன்று சேர்த்தது.
ராஜிவ் பிடித்து நிறுத்த விரும்பிய ஆயுத தரகர்கள், அமைதிபடையினால் வசூல் பாதிக்கபட்டு ஒடுக்கபட்ட புலிகள், தன் நாட்டின் மீது அனுப்பபட்ட ராணுவத்தை பெரும் அவமானமாக கருதிய சிங்களம், இன்னும் சதாமிற்கு ஆதரவான குரலை பெரும் ஆபத்தாக கருதிய எண்ணெய் ஏகாதிபத்தியம்
அராபத்திற்கு ஆதரவான ராஜிவினை குறிவைத்த இஸ்ரேல் என எல்லோரும் ஒற்றை புள்ளியில் இணைந்தனர். யார் துணிவாக செய்ய கூடியவர் என கணக்கிட்டதில் இந்திய எதிர்ப்பான எல்லா குழுக்களும் ஒத்துவரவில்லை. ஆனால் பெரும் லாபத்திற்காக புலிகள் துணிந்தனர்.
அது மிக நுட்பமாக திட்டமிட்ட படுகொலை, கென்னடி கொலைபோல யார் குற்றவாளி என வரலாறு சொல்லமலே போக கூடிய கொலை, அந்த திமிரில்தான் கிட்டு லண்டனில் இருந்து முதலில் சொன்னார், "நாங்கள் இல்லை, முடிந்தால் இந்தியா கண்டுபிடிக்கட்டும்"
அப்படி பெரும் படுகொலைக்கு துணை போனது விதி.
அவரின் கருப்பு பூனை காவல் பறிக்கபட்டது, அவரும் தமிழகம் என்றால் விருப்பமாக சுதந்திரமாக வருவார். அவருக்கு இங்கு அத்தனை நண்பர்கள் இருந்தனர், அப்படித்தான் வந்தார்
காவலை மீறினார், கான்ஸ்டபிள் தடுத்தும் கொலைகாரியினை அழைத்து மாலையினை வாங்கி உயிரழந்தார்.
அவர் அன்று கொழும்பு தாக்குதலிலே உயிரிழந்திருக்கவேண்டியவர், ஆனால் விதி அவரை திருப்பெரும்புதூரில் எடுத்துகொண்டது.
அவர் ஆண்டது பாரதத்தின் 6ம் பிரதமராக ஆண்டது 5 ஆண்டுகள்தான், ஆனால் அடுத்த 100 ஆண்டுகளுக்கான சாதனைகளுக்கு அவர் அடித்தளமிட்டார்.
இந்தியாவில் கணிணி புரட்சி, அணுமின் நிலையம் மூலம் மின்சார உற்பத்தி, தொழில் வளம், துறைமுக வளம், அண்டை நாடுகளில் எது இலக்கு என அவர் போட்ட பாதையில்தான் இந்த நாடு அணுபிசகாமல் செல்கிறது
அது மன்மோகன் சிங்க், மோடி என சிலர் அமெரிக்க பல்டி அடித்தாலும் அதன் அடிப்படை பலமான பல திட்டங்கள் ராஜிவினால் போடபட்டது, அது சமீபத்தில் அர்பணிக்கபட்ட அணுவுலை முதல், புது அவதாரம் எடுக்கும் விஜயநாராயணம் கடற்படை தளம் வரை அவர் தொடங்கியது.
கிராம பஞ்சாயத்துக்கு புது திட்டம் கொடுத்தவர் நிச்சயம் ராஜிவ்
ராஜிவ் மரணத்தால் என்ன நடந்தது யாருக்கு லாபம்? நிச்சயமாக அந்நிய குளிர்பானங்கள் நுழைந்தன, புலிகள் தனிகாட்டு ராஜவாக 18 ஆண்டுகள் ஆட்டம் போட்டனர், போபர்ஸ் வியாபாரிகள் காணாமல் பணத்தோடு செட்டில் ஆயினர்
ஈராக் நொறுக்கபட்டது, பாலஸ்தீனம் பற்றி இந்தியா இப்பொழுது வாய்திறக்காது, அதனை மறந்தே விட்டது என ஏராளம்.
ஆனால் நஷ்டம் நிச்சயமாக இந்தியாவிற்கு, பெருத்த அடி. ஆனால் இன்று மோடி போல சிலர் வந்திருக்கின்றார்கள் பார்க்கலாம்.
இந்த ராஜிவ் பிறந்தநாளில் சோனியாவினையும் நினைத்து பார்க்கவேண்டி உள்ளது, அவர் அந்நிய பிறப்பு
ஆனாலும் திருமணம் ஆனபின் இந்திய கலாச்சாரத்திற்கு மாறினார், இன்றளவும் ஒரு இந்திய பெண்மணியாக இந்திரா வீட்டுபெண்ணாகத்தான் தனது பணியினை தொடர்கிறார்
பிள்ளைகளை இந்தியராகத்தான் வளர்த்தார், விதவை ஆனாலும் இன்றுவரை எந்த சர்ச்சையிலும் சிக்கிகொள்ளாமல் ஒரு அசாதாரணமனா வாழ்வினை வாழ்கிறார், பாராட்டவேண்டிய விஷயம்
சர்வதேசம் குறிவைத்திருக்கும் குடும்பம் அது, சீக்கிய தீவிரவாதிகளின் ஆபத்தே இன்னும் அகலவில்லை. ஆனாலும் துணிந்து நிற்கின்றார், அஞ்சவில்லை. அஞ்சி ஓடவில்லை
சஞ்சய் விபத்து, இந்திரா மரணம், ராஜிவின் கொலை என எல்லா துயரையும் தாண்டி நிற்பது சாமன்யமல்ல, அதனால்தான் மேனாகவிற்கு கிடைக்கா பெரும் வாய்ப்பினை பாரதம் அவருக்கு கொடுத்திருக்கின்றது
இப்பொழுது அடிக்கடி உடல்நலமில்லாமல் சிக்குகின்றார், 70 வயது ஆகின்றது. நன்றாக தெரிகின்றது ஏதோ உடல்கோளாறு. ஆனாலும் இறுதிநொடிவரை இந்தியாவிற்கு உழைப்பேன் எனும் அந்த வைராக்கியம் நிச்சயம் சிலாகிக்க கூடியது.
ராஜிவ் காந்தி இந்த நாட்டில் மறக்க கூடியவர் அல்ல, அவரை பிடித்து புலிகள் கையில் கொடுத்தது நிச்சயம் விதி. எல்லா நாடும் இன்னொரு நாட்டில் யுத்தம் நடத்தும். அப்படியானால் புஷ் என்றோ ஈராக்கியரிடமும், இஸ்ரேலியர் பாலஸ்தீனரிடமும் தற்கொலை தாக்குதலில் செத்திருப்பார்கள், இதோ புடினிடனும் 3 குண்டு அனுப்பபட்டிருக்கவேண்டும்
மக்களுக்காக போராடும் எல்ல இயக்கத்திற்கும் அதன் எல்லை தெரியும், அந்த நினைப்பில்தான் புலிகளை யாரும் சந்தேகிக்கவில்லை, இல்லை என்றால் வரலாறு மாறி இருக்கும்
ராஜிவ் கொலைக்கு பின் புலிகளுக்கு கிடைத்ததுதான் 11 கப்பலும், இன்னபிற ஆயுதங்களும், கொல்லபட்ட கிட்டு கூட ஆயுதத்தோடுதான் சென்றான், ஆனால் உலகளாவிய தீவிரவாதம் அழிக்கபடும் பொழுது அதே 11 கப்பல்களும் மூழ்கடிக்கபட்டன‌
அவர்களை உருவாக்கியவர்களே அவர்களை அழித்தார்கள், கலைஞர் அல்ல‌
ராஜிவ் கொல்லபடுவதற்கு முன்பு 2 மாததத்திற்கு முன்பு அளித்தபேட்டிதான் அவரின் வாக்கு மூலம்
"தெற்காசியா , அரேபியா போன்ற பகுதிகளில் ஒரு வலுவான தலமை இருக்க கூடாது என்பது ஒரு கருப்பு சக்தியின் திட்டம். இலங்கையின் பண்டாரநாயக, பாகிஸ்தானின் பூட்டோ, ஜியா உல்ஹக், என் அன்னை இந்திரா காந்தி, வங்கத்து முஜிபுர் ரகுமான் இப்போது பந்தாட படும் சதாம் உசேன் என எல்லோரும் அவ்வரிசையே,
சதாம் உயிருக்கு மட்டுமல்ல என் உயிருக்கும் அந்த‌ கருப்பு சக்திகள் குறிவைத்திருப்பதை நான் அறிவேன்"
அவர் சொன்னதை கவனியுங்கள், பெரும் திட்டம் புரியும், அவ்வரிசைபடிதான் நடந்தது.
பெரும் விமானியாக, தொழிலதிபராக ஓஓ இவர்தான் இந்திராவின் மகனா? என உலகம் ஓரமாக பார்த்திருக்கவேண்டிய ராஜிவ்காந்தியினை பிடித்து வலுகட்டயாமக அமர்த்தி அவரை கொன்றொழித்தது அவரின் விதி
அதில் இந்திய நலமும் அடங்கி இருந்தது, ஈழத்து அமைதியும் அடங்கி இருந்தது என்பது விதியின் இன்னொரு முகம்
இந்த தேசத்தின் மிக துடிப்பான் அந்த பிரதமருக்கு, நவீன இந்தியாவின் அடித்தளத்திற்கு அஸ்திவாரமிட்ட அவரை நன்றியோடே நினைத்துகொள்ளலாம்
இன்று ஐ.டி தொழிலில் மிரட்டும் இந்தியாவினை அன்றே கனவு கண்டவர் அவர்.
இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவரின் பிறந்தநாள் இந்திய ஐ.டி தொழில் நாளாகத்தான் கொண்டாடபடவேண்டும்
இங்கு முடியாது, இந்த நாடு நினைவு கூற வேண்டியவர்களை எளிதாக கொண்டாடிவிடாது. ஆனால் ராஜிவ் நிச்சயம் இந்திய வரலாற்றில் தவிர்க்கமுடியாதவர்,
சுருக்கமாக சொன்னால் இந்தியாவின் ஜாண் கென்னடி அவர்தான். இருவருக்கும் துடிப்பு முதல் நாட்டுபற்று வரை ஏராள ஒற்றுமை உண்டு,
அண்டை குட்டி நாட்டில் தலையிட்டு தேடிகொண்ட மரணம் வரைக்கும் இருவருக்குமே ஒற்றுமை அதிகம்.
இன்று சிரியா போல வல்லரசுகள் குதற இருந்த இலங்கையினை அவர் 1986ல் காக்க சென்றார்,படுபாவிகளால் கொல்லபட்டார்
அவர் இல்லாத இலங்கை என்னாகும் என 2009ல் அனுபவபூர்வமாக கண்டது உலகம்....
ராஜிவ் இந்தியாவின் மிகபெரும் வரலாற்று தாக்கம்..
மே 21 இந்தியாவின் ஆன்மாவில் விழுந்த அடி என மன்மோகன் சொன்னது சாதாரண வார்த்தை அல்ல, ஆண்டுகள் 26 ஆனாலும் கடந்து போகாத வலி
இனி இன்னொரு இந்திய தலைவனை அப்படி சாக விடமாட்டோம் எனும் வைராக்கியம் ஒவ்வொரு இந்தியன் மனதிலும் வந்த நாள்
அவ்வகையில் இன்றும் இத்தேசம் ஒற்றுமையாக எழும்பி நிற்கின்றது, அதில்தான் போலி தமிழ்தேசியர்கள், எனும் தேசவிரோதிகளின் கொட்டம்
எல்லாம் அடங்கி கிடக்கின்றது..

கருத்துகள் இல்லை: