ஞாயிறு, 21 மே, 2017

ஜெயலலிதா ,நடராஜன், ராஜீவ் காந்தி. .. எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்துக் கொண்டார்! சசிகலா - 41

விகடன் .எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி: :.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து திரும்பிய எம்.ஜி.ஆர், ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால், முன்பு போல ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. அதனால், எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடிக்க ஜெயலலிதா ஆசைப்பட்டார். அதற்கு நடராசன் தூபம் போட்டார். ஆனால் அந்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போயின. ஆனாலும் டெல்லியின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கான ஏற்பாடுகளை அருகில் இருந்தவர்களே செய்ய ஆரம்பித்தார்கள். ‘முதல்வர் ஆசை’ நிறைவேறாத நிலையில் கேபினெட்டுக்குள்ளாவது கால் பதித்துவிட காய்கள் நகர்த்தப்பட்டன. எப்படியாவது ஜெயலலிதா துணை முதல்வர் ஆகிவிட வேண்டும் என நினைத்தார் நடராசன். அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தொடர்ந்து இதை வலியுறுத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ‘‘வேலைப்பளுவால் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. உங்களுக்கு உறுதுணையாக ஒருவரை வைத்துக் கொள்ளுங்கள்’’ என கவர்னர் குரானா மூலம் மறைமுகமாக    எம்.ஜி.ஆரிடம் வலியுறுத்தினார் ராஜீவ் காந்தி.

‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், எத்தனை காலத்துக்கு உயிர் வாழ்வார்கள்’’ என டாக்டர்களை அணுகிக் கேட்க ஆரம்பித்தார்கள். இந்தநிலையில்  எம்.ஜி.ஆரின் உடல்நிலை மீண்டும் பாதிப்புக்கு ஆளானது. அதற்காக வெளிநாடு சென்றார்.அவருக்கு என்ன ஆகும் என்பதைத் தெரிந்துகொள்ள நடராசன் களமிறங்கினார். வெளிநாட்டில் இருக்கிற நண்பர்கள் மூலம், எம்.ஜி.ஆரின் உடல்நிலை பற்றிய தகவல்களைத் திரட்ட முயன்றார். கடைசியில் ‘‘எம்.ஜி.ஆருக்கு என்ன பயிற்சி கொடுத்தாலும் சரியாகப் பேச வராது’’ என்கிற தகவல் வந்து சேர்ந்தது.

இப்படியான காலகட்டத்தில்தான் ‘ஜெயலலிதாவைத் துணை முதல்வர் ஆக்க வேண்டும்’ என டெல்லியில் இருந்து பிரஷர் வந்தது. இதைச் சமாளிக்க உடனே எம்.ஜி.ஆர் டெல்லி சென்றார். ‘அமைச்சரவையில் ஜெயலலிதாவுக்கு இடம் தர வேண்டும்’ என்கிற மத்திய அரசின் மறைமுக மிரட்டலைக் கண்டு எம்.ஜி.ஆர் வெம்பினார். ‘ராஜீவ் காந்தியிடம் இருந்துதான் இப்படியான உத்தரவுகள் வருகிறதா... அல்லது அவரின் அலுவலகத்தில் இருக்கிற ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவர்கள் இதனைச் செய்கிறார்களா’ என்கிற குழப்பம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

 இந்த நிலையில்தான் நேரு சிலை திறப்பு விழாவில் சதி ஒன்று அரங்கேறியது. சென்னை கிண்டி கத்திபாராவில் நேருவுக்குச் சிலை அமைத்து, திறப்பு விழாவுக்குத் தேதி குறித்திருந்தார்கள். சிலையை, பிரதமர் ராஜீவ் காந்திதான் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜெயலலிதாவையும் மேடையேற்றிவிட முயன்றார் நடராசன். ராஜீவ் காந்தியிடம் செல்வாக்கோடு இருக்கும் ஜெயலலிதா, ராஜீவ் காந்தி பங்கேற்கும் கூட்டத்திலும் தான் இருக்க வேண்டும் என நினைத்தார்.
எனவே, ‘நேரு சிலை திறப்பு விழாவில் என்னையும் சேர்க்க வேண்டும்’ என ஜெயலலிதா வலியுறுத்தினார். அந்த விழாவில் பங்கேற்பதன் மூலம் ராஜீவ் காந்தியிடம் தன் செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் நோக்கமாக இருந்தது. அந்த விழாவில், புரட்சியாளர் அருணா ஆஸப் அலியை, சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர் தேர்வு செய்திருந்தார். ‘அவருக்குப் பதிலாகத் தன்னைச் சேர்க்க வேண்டும்’ என எம்.ஜி.ஆரிடம் வாதிட்டார் ஜெயலலிதா

இப்படியொரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டால், அது தனக்குத் தலைவலி ஆகிவிடும் என நினைத்தார் எம்.ஜி.ஆர். ராஜீவ் காந்தியோடு ஜெயலலிதா ரொம்ப நெருக்கம் ஆகிவிடக் கூடாது என்பதால், விழாவில் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் வாய்ப்பு தரவில்லை. விழா வி.ஐ.பி-க்கள் பட்டியலில் ஜெயலலிதாவைச் சேர்த்தே ஆக வேண்டும் என டெல்லி அடம் பிடித்தது. விழாவில் பங்கேற்கும் ராஜீவ் காந்தியின் உரையை முன்பே தயாரிக்க ஆரம்பித்தார்கள். அதில் ‘தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஜெயலலிதா’ என்பது போல ஜெயலலிதாவைப் புகழ்ந்து ஒரு பாரா எழுதப்பட்டு இருந்தது. ‘மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ராமசந்திரன் அவர்களே’ என்றுதான் பிரதமர் உரை எழுதப்படுவது வழக்கம். ஆனால் தயாரிக்கப்பட்ட உரையில் ‘மாண்புமிகு தமிழக முதல்வர்’ மிஸ்ஸிங். இந்த விஷயங்களை எல்லாம் எம்.ஜி.ஆர் மோப்பம் பிடித்தார்.

டெல்லியில் இருந்து எம்.ஜி.ஆருக்கு போன். ஆனால் இந்த முறை எம்.ஜி.ஆர் சட்டை செய்யவில்லை. ஆர்.எம்.வீரப்பனைக் களமிறக்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குச் செல்வாக்கு இல்லை என்பதை ராஜீவ் காந்திக்குக் காட்டுவதற்காக மறைமுகமான வேலைகளில் ஆர்.எம்.வீரப்பன் இறங்கினார். விழாவில் ஜெயலலிதா பேசும் சூழல் வந்தால், அதை எதிர்கொள்ள ஏற்பாடுகளைச் செய்தார். எம்.ஜி.ஆரின் மனவருத்தம் ராஜீவ் காந்தியிடம் பக்குவமாகச் சொல்லப்பட்டது. அதன்பின்,  ‘எம்.ஜி.ஆரின் விருப்பத்துக்கேற்ப சிலை திறப்பு விழாவில் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார்’ என்கிற உறுதிமொழி தரப்பட்டது. தலைநகர் தந்த வாக்குறுதியால் எம்.ஜி.ஆர் நிம்மதி அடைந்தார். ஆனாலும் நிம்மதி நீடிக்கவில்லை.

விழாவுக்கான அழைப்பிதழ்கள் ரெடி ஆனபோது அதில் ஜெயலலிதாவின் பெயர் இடம்பெற்றிருந்து. தமிழக அரசின் பொதுத்துறையின் மேற்பார்வையில்தான் அழைப்பிதழ்களைச் செய்தித் துறை அச்சடித்தது. விசாரித்தபோதுதான் இரண்டு வகையான அழைப்பிதழ்கள் தயாரானது தெரியவந்தது. அரசு போட்ட உத்தரவைத் தாண்டி போயஸ் கார்டன் ஒரு உத்தரவைப் போட... இன்னொரு அழைப்பிதழ் ரெடி செய்துவிட்டார்கள். இந்த வேலையைப் பார்த்தவர்கள் யார் என விசாரணையில் இறங்கினார்கள். எல்லோரின் விரல்களும் நடராசனைக் கைகாட்டின. அப்போது செய்தித் துறையில்தான் நடராசன் இருந்தார்.  எம்.ஜி.ஆரைப் பகைத்துக் கொண்டு, ஜெயலலிதாவின் கட்டளைகளை நிறை
வேற்றினார் நடராசன்.< /> நேரு சிலையைத் திறந்து வைத்து ராஜீவ் காந்தி பேசினார். ‘தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆர்.’ என சொல்லாமல் ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ என்றார். அந்த மேடையிலேயே அவர்  எம்.ஜி.ஆரிடம் சொன்னார். ‘Mr. MGR, You are so sick. Handover the responsibility to some other person, or make somebody as Deputy Chief Minister and take rest’ என்றார்.

‘துணை முதல்வரை நியமித்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்’ என ராஜீவ் காந்தி சொன்னபடியே எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்துக்கொண்டார். எம்.ஜி.ஆர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி, இந்த நேரு சிலை திறப்பு விழாதான்! 1987 டிசம்பர் 21-ம் தேதி நேரு சிலை திறப்பு விழா நடந்தது. டிசம்பர் 24-ம் தேதி  எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தார்.  விகடன்

கருத்துகள் இல்லை: