திங்கள், 22 மே, 2017

எண்பதுகளில் ஈழத்தமிழர்கள் மீது தமிழக மக்களுக்கு இருந்த நேசம் இப்போது இல்லை

vinayaga.murugan. பேஸ்புக்கில் எங்கு பார்த்தாலும் பிரபாகரனை திட்டி பதிவுகள். இந்த பதிவுகளை பெரும்பாலும் திமுக நண்பர்கள்தான் எழுதுகிறார்கள். வருத்தமாக இருந்தாலும் கடந்த சில வருடங்களாக இந்த தமிழ் தேசிய ஆட்கள் தொடர்ந்து கொடுத்த தொல்லை பொறுக்க முடியாமல்தான் பொறுமை இழந்து இப்போது பிரபாகரனை திட்டி தீர்க்கிறார்கள். இதைத்தான் அவர்களும் எதிர்பார்த்தார்கள். இப்படி சண்டை மூட்டிவிடுவதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் நினைவேந்தலுக்கு கூடிய இருபது பேர் (ஜல்லிக்கட்டுக்கு கூடிய கூட்டம் இல்லையென்றாலும் இந்த வருடம் கூட்டம் கம்மிதான் இல்லையா தோழர்? ) களை காவல்துறை கைது செய்துள்ளது. இப்போது கூட எடப்பாடியை அல்லது மோடியை எதிர்த்து குரல் கொடுக்காமல் வேனில் ஏறும்போது கூட கருணாநிதி ஒழிக என்று குரல் கொடுக்கிறார்கள் பாருங்க.அந்த நேர்மைதான் அவர்களிடம் பிடித்துள்ளது.
திமுகவின் ஆட்சியில் கும்பகோணம் மயிலாடுதுறை, வேதாரண்யம் முழுக்க விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்தார்கள். வீட்டுக்கு ஒருவர் பிரபாகரன் படத்தை வைத்திருப்பார். எங்கள் ஊர்களிலிருந்து டீசல் முதல் சர்க்கரை வரை விசைப்படகுகளுக்கு செல்லும். பதிலுக்கு அவர்கள் தரும் கள்ளத்துப்பாக்கிகளை பரிசாக வாங்கி வருவார்கள். அதை வைத்து வேட்டைக்கு செல்வது அன்றைய இளைஞர்களிடம் ஒரு சாகசம். போரில் ஈடுபடவில்லை என்றாலும் போராளிகளுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் ஒருவித சாகச மனநிலையிலேயே அவர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள்.
இவ்வளவு ஏன் ராஜீவ்காந்தி கொலையை கூட ஒருசிலர் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்ததுபோல பேசியது எல்லாம் ஆச்சர்யமாகவும், திகைப்பாகவும் இருந்தது. அந்தளவு விடுதலைப்புலிகள் சுதந்திரமாக இங்கு செயல்பட்டார்கள். நினைத்த நேரத்தில் தமிழகத்துக்கு வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். ராஜீவ்காந்தி இறந்தபோது எங்கள் ஊருக்கு சனியன் பிடித்ததுபோல மத்திய ரிசர்வ் படை வந்து இறங்கியது.
சாலைகளில் சென்றுக்கொண்டிருந்தவர்கள், தேநீர்கடைகளில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் அடி உதை. எங்கள் தெருவில் ஒரு ஜோசியரின் வீடு இருந்தது. ஒருத்தர் சாலையோரமாக இருந்த சிமெண்ட் குப்பைத்தொட்டியை இழுத்துவந்து அவர் வீட்டு முன்பு போட்டு சென்றுவிட்டார். சாலையில் வரும் போலீஸ் வாகனத்தை மறிக்க அந்த ஏற்பாடு. யார் தொட்டியை இழுத்து போட்டது என்று தெரியாததால் அந்த ஜோசியரை அடித்து காவல்நிலையத்துக்கு இழுத்துச்சென்றார்கள். அவரின் மனைவி போலீஸ் ஜீப் பின்னால் அழுதுக்கொண்டு ஓடியது நினைவுக்கு வருகிறது. அதைத்தொடர்ந்து அதிமுகவினர் செய்த அரசியலில் எல்லாம் தலைகீழாக மாறியது. ஒருபக்கம் துரோகிகள் என்று வெளிமாநில மக்களிடம் திட்டு. மறுப்பக்கம் அதிமுகவினரே இவர்கள்தான் ராஜீவை கொலைசெய்தார்கள் என்று போஸ்டர் அடித்து ஊர் ஊராக ஒட்டினார்கள். திமுக கறை வேட்டியுடன் சாலையில் செல்ல பயந்து ஆண்கள் எல்லாரும் அச்சத்துடன் உறைந்துப்போய் வீடுகளில் முடங்கிகிடந்த நாட்கள் அவை. சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கைது செய்தார்கள். வேதாரண்யம் பக்கத்து ஊர்ல இருந்து வர்றேன் என்று சொல்ல கூட அஞ்சினார்கள். ராஜீவ்காந்தி உடல்சிதறி ஆடை விலகி கிடந்த புகைப்படத்தை மக்களிடம் காட்டி அனுதாப அலையில் ஜெயித்தார்கள். ஜெயித்த பிறகு சட்டசபையில் யார் ராஜீவ்காந்தி என்று கேட்டார்கள். அதெல்லாம் ஒருகாலம். காலம் எப்போதும் முன்னோக்கி ஓடும். இன்று தமிழ்தேசிய ஆட்களில் பலருக்கு இருபது முப்பது வயது. இந்த சம்பவம் நடக்கும்போது அவர்கள் பால்குடித்துக் கொண்டிருந்திருப்பார்கள். அப்போது பால்குடித்தவர்கள் எல்லாம் இப்போது ஈழத்தை பற்றி பேசுவது சிரிப்பாக இருக்கிறது. ஆனால் இதெல்லாம் உசுப்பிவிடப்பட்ட கூட்டம்தான்.
இப்போது தமிழகத்தின் பிரச்சினை ஈழம் இல்லை. ஈழப்பிரச்சினை சொல்லி ஓட்டுக்கேட்டால் ஓட்டு விழும் என்பதெல்லாம் எப்போதோ முடிந்துப்போன கதை. எண்பதுகளில் ஈழத்தமிழர்கள் மீது தமிழக மக்களுக்கு இருந்த நேசம் இப்போது இல்லை என்று உறுதியாக சொல்லமுடியும். இங்கேயே ஆயிரம் பிரச்சினைகள். ஏடிஎம் மூடி கிடக்கின்றன. ஆற்றில் தண்ணி இல்லை. வேலைவாய்ப்புகள் அருகிவிட்டன. அவனவன் பிரச்சினைகளை கவனிக்கவே நேரமில்லாமல் ஓடுகிறார்கள். ஈழத்தமிழர்களையாவது ஏதாவது உலக நாடுகள் வரவேற்று விசா தருகிறார்கள். இங்கேயே இருப்பவர்களின் நிலைமை அதைவிட மோசமாக இருக்கிறது. ஈழத்தமிழர்களும் எங்கள் பிரச்சினையில் தலையிடுங்க என்று யாரையும் கேட்பதில்லை. இடையில் சிலர்தான் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களை ஏமாற்றி அவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு இங்குள்ள சொற்ப இளைஞர்களை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களும் நல்ல வேலை கிடைத்தால், ஏதாவது திரைப்பட இயக்குநர் வாய்ப்பு வந்தால் இவர்களை விட்டு விலகிச்சென்றுவிடுவார்கள்.

கருத்துகள் இல்லை: