செவ்வாய், 23 மே, 2017

பாகிஸ்தான் :எங்கள் ராணுவ நிலையை அழித்ததாக இந்திய ராணுவம் கூறுவது தவறு

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவ நிலையை தாக்கி அழித்ததாக இந்திய ராணுவம் கூறுவது தவறான தகவல் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.  இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறலை சாதகமாக பயன்படுத்தி பயங்கரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து ஊடுருவல் முயற்சியை முறியடித்து வருகிறது. இந்நிலையில், அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா செக்டாரில் இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குண்டு வீசி அழித்திருப்பதாக ராணுவம் தெரிவித்து, தாக்குதல் தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.


‘இந்திய ராணுவத்தின் கடுமையான தாக்குதலில் நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் சேதமடைந்தன. பதுங்கு குழிகள் முற்றிலும் நொறுங்கியது. எல்லையில் கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது’ என்றும் ராணுவ செய்தித் தொடர்பு அதிகாரி அசோக் நருலா தெரிவித்தார்.

ஆனால், பயங்கரவாத முகாம்களை அழித்ததாக இந்திய ராணுவம் கூறியதை பாகிஸ்தான் மறுத்துள்ளது. நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் நிலையை அழித்ததாக இந்தியா கூறுவது தவறான தகவல் என பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிப் கபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் இது பற்றி கூறுகையில், ‘பாகிஸ்தான் அரசுத் தரப்பில் இருந்து இதுபற்றி எந்த தகவலும் வரவில்லை. இதில் இந்தியா தற்பெருமை கொள்வதற்கு ஒன்றுமில்லை. இந்த பிரச்சினையை பொறுத்தவரை இருநாடுகளும் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்’ என்றார்.

‘காஷ்மீர் பிரச்சனைக்கு, சிம்லா ஒப்பந்தத்தின் மூலமாக மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடியும். பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிச் செல்லவில்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: