புதன், 15 ஜனவரி, 2014

சன் நியுஸ் தொலைக்காட்சியில் - விவாத மேடை நிகழ்ச்சியில் - கவிஞர் கலி. பூங்குன்றன்.


சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. திமுக ஆட்சியில், அந்த கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து, தீட்சிதர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அதிலே அவர்கள் வெற்றி பெற முடியவில்லை. எம்.ஜி.ஆர் முதல்வராகவும், அறநிலையத் துறை அமைச்சராக ஆர்.எம்.வீரப்பனும் இருந்த போதே சிதம்பரம் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 1987ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்போதே தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்கு சென்றார்கள்.


இதன்பின், திமுக ஆட்சியில், 2009ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதியன்று நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு சரியானது’ என்று கூறியிருந்தார். தீட்சிதர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, நீதிபதிகள் கே.ரவிராஜ பாண்டியன், டி.ராஜா ஆகியோர் விசாரித்தனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘பொது தீட்சிதர்களோ அல்லது அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை கட்டவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. செயல் அதிகாரி நியமனத்தில் தலையிட்டால், அது பாரம்பரியம்மிக்க கோயிலை காக்கும் கடமையிலிருந்து நீதிமன்றம் தவறியது போலாகும்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்கள். இதை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில்தான் தற்போது தீட்சிதர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 இந்த வழக்கு கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதே, தமிழக அரசு வீண் கால தாமதம் செய்யாமல், மூத்த வக்கீல்களை கொண்டு சிறப்பாக வாதாட வேண்டும் என்ற நானும், தி.க. சார்பில் வீரமணியும் அறிக்கை விடுத்தோம்.  தமிழக அரசு தகுதிமிக்க மூத்த வக்கீலை கொண்டு, திடமாகவும் உரிய முறையிலும் வாதாடாவிட்டால் தீட்சதர்கள் பக்கம் ஒருதலையாக தீர்ப்பு சொல்ல வேண்டி வரும் என்று நீதிபதிகளே அதிமுக அரசை எச்சரித்திருப்பதாகவும் செய்தி வந்தது. மேலும், டிசம்பர் 3ல் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு வக்கீல் 15 நிமிடங்கள் மட்டுமே சம்பிரதாயத்துக்காக வாதாடினார் என்றும் செய்தி வந்தது.

 இந்த பிரச்னையில் அதிமுக அரசு அக்கறை காட்டாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கனவே எடுத்த முடிவுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இப்படியொரு தீர்ப்பு அரசுக்கு எதிராகவும், தீட்சிதர்களுக்கு ஆதரவாகவும் வந்ததற்கு முழுமுதல் காரணம், தமிழக அரசின் மெத்தனமும், அக்கறையின்மையும், அலட்சியமும்தான் என்று நான் அதிமுக அரசை நேரடியாகவே குற்றம்சாட்டுகிறேன்.

கருத்துகள் இல்லை: