செவ்வாய், 14 ஜனவரி, 2014

உலகிலேயே மிகப்பெரிய கோயில் அங்கோர்வாட்!! கம்போடிய கலைக்கோயில்கள்- (பகுதி-5/6)


மாத்தளைசோமு, அவுஸ்திரேலியா

விமா­னத்­தி­லி­ருந்து   இறங்கி விமான நிலை­யத்தைப் பார்த்தேன். சிறிய விமான நிலையம். ஆனால் கம்­போ­டிய மன்­னர்­களின் வர­லாற்றை நினைவு கூரும் வித­மாகக் கட்­டப்­பட்­டி­ருந்­தது. விமான நிலை­யத்­திற்குள் நுழையும் வாசலில் ஒரு கம்­போ­டிய இளம் பெண் பய­ணி­களை இரு கரம் குவித்து வர­வேற்றுக் கொண்­டி­ருந்தாள். அது எனக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது. எத்­த­னையோ நாடு­களின் விமான நிலை­யத்­திற்குப் போயி­ருக்­கிறேன்.
அங்­கெல்லாம் இப்­படி ஒரு வர­வேற்பு  இல்லை. அவ­ளுக்குப் பதில் வணக்கம் செய்து விட்டு குடி­வ­ரவு அதி­கா­ரி­யிடம் 20 யு.எஸ். டொலர் கொடுத்து விசாவைப் பெற்­றுக்­கொண்டு நடந்த போது எதிர்ப்­பட கைத்­தொ­லை­பேசி விற்கும் கடை தெரிந்­தது. அந்தக் கடைக்குள் நுழைந்து புதிய ‘சிம்­கார்ட்டை’ வாங்­கினேன். சிம்மை விற்ற கம்­போ­டிய இளம் பெண் என் கைப்­பே­சியில் சிம்மைப் பொருத்தி கைப்­பே­சியை என்­னிடம் கொடுத்­து­விட்டு இரு­ கை ­கூப்பி வணக்கம் தெரி­வித்தாள்.
இது எனக்கு மட்­டு­மல்ல அந்தக் கடையில் வர்த்­தகம் செய்யும் எல்­லோ­ருக்கும் என்­பதைப் பார்த்தேன். மறு­ப­டியும் எனக்குள் ஆச்சரியம் செய்த உத­விக்கு நன்றி கூட சொல்லத் தயங்­கு­கிற இக்­கா­லத்தில் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இப்படி ஒரு மரி­யா­தையா?

விமான நிலை­யத்­திற்கு வெளியே வந்து ஏற்­க­னவே முன் பதிவு செய்த தங்கும் விடு­திக்கு எப்­படி போவது என்று யோசித்த போது எனது பெயர் எழு­திய  ஒரு அட்­டையைப்  பிடித்துக் கொண்டு  கம்­போ­டிய இளைஞன்   நிற்­பதைக் கண்டு அவனை நோக்கிப் போனேன். அவ­னிடம் என் பெயரைச் சொன்­னதும் கையி­லி­ருந்து  அட்­டையை  மடக்கி வைத்துக் கொண்டு  என்னைப்  பார்த்துக்  கும்­பிட்டு வணக்கம் செய்தான். பிறகு எனது சூட்­கேஸை வாங்கிக் கொண்டு நடந்தான்.
டாக்ஸி கொண்டு  வந்­தி­ருப்­பானோ  என்று யோசித்த போது தமிழ் நாட்டில் ஓடும் ஆட்டோ போல் ஆனால் சற்று வித்­தி­யா­ச­மான ஆட்­டோவில் ஏறச் சொன்னான். நான் ஆட்­டோவில் ஏறி­யதும் அவனே ஓட்­டினான். இரு பக்­கமும் திறந்து இருந்­ததால் வெளியே வெயில் அடித்த போது காற்று வந்து தழுவி உட­லுக்கே அது இத­மாக இருந்­தது. மெல்­லமாய் பேச்சுக் கொடுத்தேன் “அங்கோர் வாட்டை இன்று பார்க்க முடி­யுமா?”
“பார்க்­கலாம் ஆனால் உடனே போக வேண்டும்”
“முடியும்” என்றேன்.
ஆட்டோ வேக­மாக ஓடி விடு­திக்குச் சென்­றது. விடு­தியின் வர­வேற்பு அறைக்குப் போய் எனது கட­வுச்­சீட்டைக் கொடுத்தேன் விடுதிப் பணி­யாளன் தங்கும் அறை சாவியை என்­னிடம் கொடுத்து விட்டு ‘இரு­கை­கூப்பி’ வணக்கம் செய்தான். பதில் வணக்கம் செய்து யோசித்தேன். இரு கை கூப்பி வணக்கம் செய்­வது தமி­ழர்­களின் பண்­பாட்டுக் கூறு­களில் ஒன்று. இது கெமர் மன்­னர்கள் ஆண்ட போது மக்­க­ளி­டையே பர­வி­யி­ருக்க வேண்டும்.
அதனை இன்றும் கம்­போ­டி­யர்கள் பின்­பற்­று­கி­றார்கள். ஆனால் நாக­ரிகச் சூழலில் சிக்கி ஆங்­கில மோகத்தில் நட­மா­டு­கிற தமி­ழர்­களில் பலர் இந்த வணக்க முறை­யையே மறந்து விட்­டார்கள். ஆட்டோ சியாம்­ரிப்பைத் தாண்டி இரு­பக்கமும்  இறப்பர் மரங்­களைப் போல உயர்ந்த காட்டு மரங்கள் நிற்கும்  பாதையில் ஓடி­யது. ஆயி­ரக்­க­ணக்­கான பய­ணிகள் தினமும் வந்து போனாலும் குப்­பை­களை எங்கும் பார்க்க முடி­ய­வில்லை.
இரு­பது நிமிட ஓட்­டத்­திற்குப் பிறகு ஆட்டோ அங்கோர்வாட்டைப் பார்க்க நுழைவுச் சீட்டு வாங்க வேண்­டிய இடத்தில் நின்­றது. வண்­டி­யி­லி­ருந்து இறங்­கிய ஆட்டோ ரிக் ஷா ஓட்டி என்னைப் பார்த்து ‘டிக்கட் வாங்­குங்கள்’ என்­றான்.
“நீதானே டிக்கட் தேவை­யில்லை என்­றாயே” என்றேன் சற்று கோபம் வந்­தது போல்,
“நாளைய டிக்­கட்டை இன்று வாங்­கினால் தான் அங்கோர்வாட்டை இன்று பார்க்க முடியும்.
20 யு.எஸ்.டொலர் கொடுத்து நுழை­வுச்­சீட்டை வாங்­கினேன். அப்­போது தான் மாலையில் அங்கோர் வாட்டைப் பார்க்க நுழை­வுச்­சீட்டு தேவை­யில்­லை­யென்­றாலும் மறுநாள் சீட்டை வாங்கச் சொன்ன மர்மம் புரிந்­தது. ஒரு நாள் சீட்டு வாங்­கி­னாலும், மூன்று நாள் சீட்டு வாங்­கி­னாலும் வாங்­கு­ப­வர்­களின் போட்­டோவைப் பிடித்து அதை சீட்டில் அச்­சிட்டுக் கொடுக்­கி­றார்கள். பாது­காப்­புக்­ க­ருதி இதனைச் செய்­தி­ருக்­கலாம்.
எனது படத்­தோடு அச்­சி­டப்­பட்ட நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு ஆட்­டோவில் ஏறு முன் ஆட்டோ ஓட்­டு­ப­வனின் பெயரைக் கேட்டேன். அவன் சான் யான் என்றான். நான் உடனே உன்னை யான் என்று அழைக்­கவா? என்று கேட்டேன். அதற்கு எப்­படி வேண்­டு­மானால் அழைத்துக் கொள் உன்னைப் போல் ஆயிரம் பய­ணி­களைப் பார்க்­கிறேன் என்­பது போல் புன்­ன­கைத்தான்.
ஆட்டோ மறு­ப­டியும் ஓடி­யது. போகிற வழியில் ஆட்­டோவை நிறுத்தி நுழை­வுச்­சீட்டை வாங்கி என் படத்­தையும் திக­தி­யையும் பார்த்து விட்டு, போகலாம் என்­றார்கள் பாது­கா­வ­லர்கள். அவர்­களை மீறி நுழை­வுச்­சீட்டு இல்­லாமல் எவரும் போக முடி­யாது.
ஆட்­டோவை யான் மரங்­களின் நிழல் விழும் இடத்தில் நிறுத்­தினான்.   மாலை மங்­கி­யதால் வெளிச்சம் குறை­வாக இருந்­தது. நூற்­றுக்­க­ணக்­கான பய­ணிகள் அங்கு வரு­வதும் போவ­து­மாக இருந்­தார்கள். நான் ஆட்­டோவை விட்டு இறங்­கிய போது யான் பெட்­டிக்குள் குளுமைப் படுத்­தப்­பட்­டி­ருந்த தண்ணீர்ப் போத்­தலை என்­னிடம் தந்து விட்டு அதோ அங்கோர் வாட் சுற்றிப் பார்த்து விட்டு இந்த இடத்­திற்கு வாருங்கள் என்றான். யான் சொன்ன திசை வழியே பார்த்தேன். என் கண்­களால் நம்ப முடி­ய­வில்லை உல­கி­லேேய மிகப் பெரிய இந்துக் கோயில் கம்­பீ­ர­மாக தெரிந்­தது.
நீண்ட சதுர வடிவில் அமைக்­கப்­பட்ட கோயி­லுக்கு ஐந்து கோபு­ரங்கள் இருக்­கின்­றன. (வழக்­க­மாக இந்து கோயில்­களில் நான்கு திசை­க­ளுக்­காக நான்கு கோபு­ரங்கள் இருக்கும்) ஆனால் இந்த ஐந்து கோபு­ரங்­க­ளையும் முக்­கி­ய­மான ஒரு கோணத்தில் இருந்து தான் முழு­மை­யாகப் பார்க்க முடியும். ஐந்து கோபு­ரங்­களில் ஒரு கோபுரம் மட்டும் 213 மீற்றர் உய­ரத்தில் இருக்­கி­றது. மற்ற நான்கும் அதற்கு கீழே இருக்­கின்­றன. கோபுரம் சிறுத்து கூர்மை வடி­வத்தில் கட்­டப்­பட்­டுள்­ளது.
காஞ்­சியை ஆண்ட பல்­ல­வர்கள் கட்­டிய கோயிலின் கோபு­ரமும் இதே­வ­டிவ­மைப்பில் தான் உள்­ளது. அங்கோர்வார்ட் கோபுர மாதி­ரியை வைத்தே மலே­ஷி­யாவில் கோலா­லம்­பூரில் கட்­டப்­பட்­டுள்ள இரட்டைக் கோபுரம் ஒரு தமிழ் வர்த்­த­கரால் கட்­டப்­பட்­டுள்­ள­தாகச் சொல்­லப்­ப­டு­கி­றது.
அங்கோர்வாட் கோயிலை 500 ஏக்­கரில் 1.5 கிலோ மீற்றர் கிழக்கு மேற்­காக 1.3 கிலோ மீற்றர் வடக்கு தெற்­காக ஒரு நீள் சதுர பரப்­ப­ளவு நிலத்தில் கட்­டு­வித்தான் இரண்டாம் சூரி­ய­வர்மன். கோயிலின் பாது­காப்பு அரண்­க­ளாகக் கிட்டத்தட்ட 5.5 கிலோ  மீற்றர்  சுற்­ற­ள­விற்கு  சிகப்புக் கப்பிக் கற்­களால்  நீண்ட சுவர்கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. கோயிலின்  மேற்கு கோபுர   நுழை­வாயில் யானை­களும் வண்­டி­களும் போகக் கூடிய அள­விற்கு 2.30 மீற்றர் அக­ல­மா­னது.
கோபு­ரத்தின் வலப்­பக்­கத்தில் எட்டு கைக­ளோடு விஷ்ணு சிலை ஒரே கல்லில் 3.25 மீற்றர் உய­ரத்தில் செதுக்­கப்­பட்டுக் கம்­பீ­ர­மாக நிற்­கி­றது. கோயி­லுக்கு முன்னால் நடந்து போக 250 மீற்றர் நடை பாதை அந்த நடை பாதையின் நுழைவில் பாம்பின் முகமும் அதன் நீண்ட வாலும் கல்­லி­லேயே செய்­யப்­பட்­டுள்­ளது. நடை பாதையின் இரு பக்­கமும் தண்ணீர் நிரம்­பிய அகழி உண்டு.
அது 200 மீற்றர் அக­லமும், 5.5 கிலோ மீற்றர் சுற்­ற­ளவும் கொண்­டது. கோயிலின் உள்ளே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நடந்த போது மகா­பா­ரதக் குரு­ஷேத்­திரப் போர், கிருஷ்­ணரின் வாழ்க்கைக் காட்­சிகள் கைலாய மலையை அசைக்கும் இராவணன், வாலியும் சுக்­ரீ­வனும் மோதும் சண்டை, எறுமை மாட்டில் அமர்ந்தி­ருக்கும் எமன், காளை மாட்டில் இருக்கும் சிவன், மயிலில் இருக்கும் ஸ்கந்த மூர்த்தி, சிவனை வணங்கும் விஷ்ணு,
இந்­திர உருவம், சிவ நடனம், கோழிச்­சண்டை, பாற் கடலில் அமுதம் கடை­வது, அனுமான் சீதைக்குக் கணை­யாழி கொடுப்­பது, மூன்று தலை யானையில் இருக்கும் இந்­திரன், சிங்­கத்தில் அமர்ந்­தி­ருக்கும் சக்தி ஆகி­ய­ன­வற்றை அந்த நான்குப் பக்கச் சுவர்­களில் அற்­பு­தமாய்ச் செதுக்­கி­யி­ருக்­கி­றார்கள். இரண்டாம் சூரி­ய­வர்மன் படை­யோடு யுத்­தத்­திற்குப் போவதும் செதுக்­கப்­பட்­டுள்­ளது. இவற்­றோடு ஆங்­காங்கே அப்­ஸரா நட­னப்­பெண்­களின் உரு­வங்கள் செதுக்­கப்­பட்­டுள்­ளன.
மொத்­த­மாக 1500 அப்ஸரா நடனப் பெண்­களின் உரு­வங்கள் செதுக்­கப்­பட்­டுள்­ளன.
அந்த நட­னப்­பெண்­களின் சிற்பங்களை உற்றுப் பார்த்தேன். உயிருள்ள நடனப் பெண்­களைப் போல் இருந்­தார்கள். ஒரு கெமர் நாட்டுக் கவிஞன் 17ஆம் நூற்­றாண்டில் ஆயி­ரக்­க­ணக்­கான உரு­வங்கள் பார்ப்­பவர் மனதில் கிளர்ச்­சியைக் கொடுக்கும். கண்கள் இவற்றைப் பார்ப்­பதால் எப்­போதும் களைப்­ப­டை­யாது. அது ஒரு நாளும் சலிப்புத்தராது. இந்தச் சிலைகள் மனிதனின் கை களால் செதுக்கப்படவில்லை. அவை கடவுளால் உயிருள்ள சிலைகளாகச் செதுக்கப்பட்டுள்ளன என்று சொன்னது அப்போது என் நினைவுக்கு வந்தது.


கம்போடிய கலைக்கோயில்கள்- (பகுதி-5): அங்கோர்வாட் என்பது புனிதக் கோயில் ‘கம்போடியக் கலைக் கோயில்கள்’
அங்கோர்வாட் கோயிலை அதன் அழகை எழுத்­துக்­களால் எழுதிக் காட்­டு­வதை விட அதை நேரில் பார்த்தால் உணர முடியும். சுவை­யான மாம்­ப­ழத்­தையும் அழ­கான மல­ரையும் பட­மாகப் பார்த்தால் இனிய உணர்வு வருமா என்ன? ஆயிரம் அங்கோர்வாட் படங்கள் அவற்றை நேரில் பார்க்­கின்ற உணர்வை அளிக்­குமா? மறு­ப­டியும்  மறு­ப­டியும்  அங்கோர்வாட்டைப்  பார்க்க வேண்­டு­மென்ற எண்ணம்  எனக்குள் எழுந்­தது.
அப்­போது பிராங்க் வின்சென்ட் என்­பவர் எழு­தி­யது நினை­வுக்கு வந்­தது. அவர்  ‘’Sights and Scenes in South East’ என்ற புத்­த­கத்­தில் பொது­வாகக் கண்­ணுக்குத் தோன்றும் இக்­கோ­யிலின் அழகும்  விசித்­தி­ரமும் மனதில் பதியும் போது அதன் கம்­பீரம் வியப்­பாக இருக்கும். இதனைப் பார்த்­தால்தான்  இதன் மதிப்பை  உணர்ந்து  கொள்ள முடியும் என்று எழு­தி­யி­ருக்­கிறார்.
அதனை அவர் எழு­திய ஆண்டு 1872. அதற்­குப்­  பி­றகு  50 வரு­டத்தில் ஹெலன் சர்ச்சில் கென்டீ என்­பவர் ஒரு சொர்க்­கத்தில் பிடி­பட்­டது போன்ற உணர்வும் பிர­மிப்பும் இல்­லாமல் எவரும் மொத்­தமாய்க் கரு­திப்­பார்க்கும் ஒன்­றல்ல. இது மனதில் ஆழமாய் பதியும் அற்­பு­த­மான கட்­டடம் என்று எழு­தி­யி­ருக்­கிறார். 1863 இல் Henri Mouhot என்­பவர் அங்கோர்வாட்டைப் பற்றி லண்­ட­னிலும் பாரி­ஸிலும் புத்­த­கங்கள் எழுதி வெளி­யிட்ட பிறகே அதன் புகழ் மேலைத்­தே­ய­மெங்கும் பர­வி­யது.

அங்கோர்வாட்­டுக்குத் தெற்கே 1700 மீற்றர் தூரத்தில் 12 ஆம் நூற்­றாண்டின் தொடக்­கத்தில் ஏழா­வது ஜெய­வர்­மனால் கட்­டப்­பட்ட அங்கோர் தொம் (Anghor Thom) என்ற பழம் பெரும் நக­ரத்தைப் பார்த்தேன். 360 ஏக்கர் பரப்­ப­ளவில் அரண்­மனை அமைச்­சர்கள், தள­ப­திகள், சமய குரு­மார்கள் ஆகியோர் தங்கும் வீடுகள் என்­ப­ன­வற்றைக் கட்டி வைத்தான். நக­ருக்கு ஐந்து நுழை­வா­யில்கள் இருந்­தன.
அவை­யெல்லாம் நக­ரத்தைச் சுற்­றி­யுள்ள அக­ழியின் மீது போடப்­பட்ட நீண்ட பாலங்­களைக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அப்­பா­லத்தின் ஒரு பக்கம் வாசுகி என அழைக்­கப்­படும் ஏழு தலை­கொண்ட பாம்பின் ஒரு பகு­தியை 54 அசு­ரர்கள் இழுத்துக் கொண்­டி­ருப்­பது போலும் பாலத்தின் மறு பக்கம் பாம்பின் மறு பகு­தியை 54 தேவர்­களும் இழுத்துக் கொண்­டி­ருப்­பது போலவும் தொடர் கற்­சி­லைகள் வடித்­தி­ருப்­பது அற்­பு­த­மான காட்­சி­யாகும்.
உள்ளே நுழையும் வாயிலில் 75 அடி உய­ரத்தில் கோபுரம் அமைக்­கப்­பட்டு அதன் மேல் பகு­தியில் நான்கு திசை­க­ளையும் பார்க்கும் வித­மாக 20 அடி உய­ரத்தில் செதுக்­கப்­பட்­டுள்ள ஏழாம் ஜெய­வர்­மனின் பாரிய நான்கு சிலைகள் கம்­பீ­ர­மாக உள்­ளன. அந்தச் சிலை­களின் முகங்­களும் கண்­களும் மெல்­லிய புன்­ன­கையை உதிர்ப்­பது போல் மெல்லத் திறந்­தி­ருக்கும் உத­டு­களும் சிற்­பியின் கைவண்­ணத்தைக் காட்­டு­கின்­றன.
ஏழாம் ஜெய­வர்­மனின் அரண்­ம­னையும் வீடு­களும் மரங்­க­ளினால் எழுப்­பப்­பட்­டி­ருந்­ததால் அவை­யெல்லாம் காலப் போக்கில் அழிந்து அவை­யி­ருந்த அடை­யா­ள­மாக கற்­க­ளினால் எழுப்­பப்­பட்ட அடித்­தளம் இன்­றைக்கும் இருக்­கின்­றது. மன்னர் குடும்பம் குளித்து மகிழ்ந்த பெரிய நீச்சல் குளம் நீர் வற்­றிய நிலையில் காட்­சி­ய­ளிக்­கி­றது.
மன்னர் தனது படை­களைப் பார்­வை­யி­டவும் கலா­சார நிகழ்ச்­சி­களைக் காணவும் யானைகள் தாங்கும் பீடம் (Terrace of Elephants) என்ற மேடை பிர­மாண்­ட­மா­ன­தாக எழுப்­பப்­பட்­டுள்­ளது. கற்­களால் கட்­டப்­பட்ட இந்த மேடையை யானை­களும் அரக்­கர்­களும் தாங்கிப் பிடிப்­பது போன்ற சிற்­பங்கள் செதுக்­கப்­பட்­டுள்­ளன.
இதனைப் பார்­வை­யிட உள்ள நடை பாதையின் தொடக்­கத்தில் ஒன்­பது தலை நாகம் ஒரு விசி­றியைப் போல் தனது முகத்தை வைத்து நிற்க அதன் நீண்ட வாலை தேவர்­களும் அரக்­கர்­களும் இழுப்­பது போன்ற தொடர்ச் சிற்­பங்கள் இருக்­கின்­றன. மேலும் அந்த நடை­பா­தையின் இடது வலது என இரு பக்­கமும் புராணக் கதை­களில் இருந்து 108 காட்­சிகள் செதுக்­கப்­பட்­டுள்­ளன.

அங்கோர் தொம் நடுவே ஏழாம் ஜெய­வர்­மனால்  Bayon என்று அழைக்­கப்­படும் பிர­மாண்­ட­மான அரச கோயில் (State Temple) கட்­டப்­பட்­டுள்­ளது. அது தொடக்­கத்தில் இந்து கோயி­லாகக் கட்டத் தொடங்­கிய போதும் அது புத்தர் கோயி­லாக முடிந்­தி­ருப்­பதன்  அடை­யா­ள­மாக 54 கோபு­ரங்­களில்  (இன்று இருப்­பது 37 தான்) அவ­லோ­கீ­டீஸ்­வரா (Avlokitesvara)- தமிழில் அவ­லோ­கிதர், சமஸ்­கி­ரு­தத்தில் Avalokitesvar தாய்­மொ­ழியில் Lokesvara என அழைக்­கப்­படும் புத்­தரின் முகம் 54 கோபு­ரங்­களில் 200க்கும் மேற்­பட்ட பெரிய முக­மாக செதுக்­கப்­பட்­டுள்­ளன.
அந்த முகங்கள் புத்­தரைப் பிர­தி­ப­லித்­தாலும் சில ஆய்­வா­ளர்கள் ஏழாம் ஜெய­வர்­மனை நினைவு படுத்­து­வ­தாகக் கூறி­யி­ருக்­கின்­றனர். இந்த உரு­வங்­களின் அக­ல­மான நெற்றி, வருந்­து­வது போன்ற கண்கள், அகன்ற மூக்­குத்­து­வாரம், தடித்த உத­டுகள், சுருள் முடி­யோடு காணப்­படும் புன்­னகை அங்­கோரின் புன்­னகை (Smile of Angor) எனப் புக­ழப்­பட்­டுள்­ளது.
அவ­லோ­கீ­டீஸ்­வரா வழி­பாட்டில் புத்த சம­யமும் இந்து சம­யமும் கலந்­தி­ருக்­கின்­றது. ஜப்­பா­னியக் கல்­வி­யாளர் சூஹி­கோ­சாகா தமிழ் நாட்டில் திரு­நெல்­வேலி மாவட்­டத்தின் அம்­பா சமுத்­தி­ரத்தில் உள்ள பொதிகை மலையில் அசோக மன்னர் காலத்தில் அவ­லோ­கீ­டீஸ்­வரா வழி­பாடு இருந்­த­தாகக் குறிப்­பி­டு­கிறார். சீனப் புத்த மதத்­து­றவி மதுரா வந்து எழு­தியக் குறிப்பில் அவ­லோ­கீ­டீஸ்­வரா வழி­பாட்டைப் பற்­றியும் குறிப்­பி­டு­கிறார். இந்த வழி­பாடு 12 ஆம் நூற்­றாண்டு வரை இருந்­த­தா­கவும் அதற்குப் பிறகு நடந்த இஸ்­லா­மிய படை­யெ­டுப்பால் புத்த மடா­லயம் சிதைக்­கப்­பட்டு மறைந்­த­தாகத் தெரி­கி­றது.
அங்கோர்ப் பேர­ரசைத் தொடர்ந்து ஆண்ட மன்­னர்­களால் பிர­மாண்­ட­மான பல கோயில்­களைக் கட்­டிய போதும் அவற்றில் சில கோயில்கள் மட்­டுமே ஒரே மன்­னரால் கட்­டப்­பட்­டுள்­ளது. ஏனை­யவை ஒரு மன்­னரால் தொடங்­கப்­பட்டு அவ­ருக்குப் பிறகு பத­வி­யேற்ற வேறு மன்­னரால் முடிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் புகழ்­பெற்ற அங்கோர்வாட் இரண்டாம் சூரியவர்­மனால் கட்­டப்­பட்­டது. இதற்கு எடுத்துக் கொண்ட ஆண்­டுகள் முப்­பது ஆகும்.
Taprohm
ஏழாம் ஜெய­வர்­மனும் இந்­தி­ர­வர்­மனும் கட்­டிய Taprohm என்ற கோயில் பக்கம் சென்றேன். பிர­மாண்­ட­மான கோயில் இன்று சிதி­ல­ம­டைந்­துள்­ளது. இதன் உண்­மை­யான பெயர் ரஜ­வி­கார (Raja Vihara)(அரச மடா­லயம் அல்­லது அரச கோயில்) இதற்குச் சொந்­த­மாக 3140 கிரா­மங்கள் இருந்­தன.
அக்­கி­ரா­மங்­களில் இருந்த 76,365 மக்கள் அந்தக் கோயி­லையும் 18 பெரிய குரு­மார்­க­ளையும் 2740 அலு­வ­லர்­க­ளையும் 2202 உத­வி­யா­ளர்­க­ளையும் 615 நடனப் பெண்­ம­ணி­க­ளையும் கவ­னிக்க வேண்­டுமாம். சமஸ்­கி­ருத மொழியில் எழு­த­பட்ட கல்­வெட்டு இந்த விப­ரங்­களைத் தரு­கி­றது. இன்றும் அக்­கல்­வெட்டு இருக்­கி­றது.
இன்று அந்த ஆலயம் பிர­மாண்­ட­மான ஆல­மரம், அத்­தி­மரம், இல­வ­மரம் ஆகி­ய­வற்றின் வேர்­களில் சிக்­கி­யி­ருக்­கின்­றன. இதனைக் கவித்­து­வ­மாகச் சொல்­வ­தானால் வேர்­களின் அர­வ­ணைப்பில் வேந்தன் கட்­டிய கோயில் இருக்­கின்­றது எனலாம். ஆனால் இந்த மர வேர்கள் எவ்­வாறு இங்கு வந்­தன? பறந்து திரியும் பற­வை­களின் எச்­சங்­க­ளி­லி­ருந்து விழுந்த விதைகள் முளைத்து மர­மாகி இக்­கோ­யிலை தம் வசப்­ப­டுத்தி விட்­ட­தாகச் சொல்­லப்­ப­டு­கின்­றது.
இங்கு வரும் பய­ணிகள் மரங்­க­ளுக்­குள்ளும் மர வேர்­க­ளுக்­குள்ளும் சிக்­கி­யி­ருக்கும் இந்தக் கோயிலைப் படம் பிடிக்க மறப்­ப­தே­யில்லை. இது போன்ற ஒரு காட்­சியை உலகில் வேறு எங்கும் பார்க்க முடி­யாது என படம் பிடித்துக் கொண்­டி­ருந்த ஒரு அமெ­ரிக்கன் சொன்னான். இன்று இந்த கோயிலை இந்­திய அர­சாங்கம் பாது­காக்கும் பணி­களை ஐ.நா.வின் புரா­தனச் சின்­னங்கள் பாது­காப்புத் திட்­டத்தின் கீழ் செய்து வரு­கின்­றது.
இரண்­டா­வது உத­யா­தித்த வர்­மனால் கட்­டப்­பட்ட  Kbalspean என்ற மலைக் கோயில் முக்­கி­ய­மா­னது. மலையின் பெயர் குலன் மலை. இந்த மலையில் இருந்து சீயாம்ரிப் ­நதி ஊற்­றெ­டுத்து அங்கோர் நக­ரத்தின் வழியே ஓடி டோன்­விசாப் (Tonle sap) பெருங்­கு­ளத்தில் சேரு­கி­றது. அதன் உப நதி­யாக அந்த மலையின் இன்­னொரு பகு­தியில் இருந்து Kbalspean என்ற உப­நதி விழு­கி­றது. அது நீர் வீழ்ச்­சி­யாக இருப்­ப­தாலும் கற்­பா­றை­களின் மேல் விழுந்து வெண்மை நிறத்தில் ஓடு­வ­தாலும் மன்­னனின் பார்வை பட்டு புனித தல­மா­கி­யது.
நீர் விழு­கிற கற்­பா­றை­களில் பாற் ­கடலில் பள்ளி கொண்­டுள்ள விஷ்­ணுவின் சயனக் கோலம், தாம­ரைப்­பூவில் அமர்ந்­தி­ருக்கும் பிரமா, சிவன், ஆகி­யவை மிக அற்­பு­த­மாகச் செதுக்­கப்­பட்­டுள்­ளன. அநே­க­மாக இதனைச் செதுக்­கிய சிற்­பிகள் மேலி­ருந்து வரும் நீரில் நனைந்து கொண்டே செதுக்­கி­யி­ருக்க வேண்டும். இறை உரு­வங்­களைத் தொட்டு வரும் இந்நீர் புனித நீராகக் கரு­தப்­ப­டு­கி­றது.
1968இல் இந்த நீர்ப்பரப்பில் சிறு சிறு லிங்கங்கள் நதிப் படுக்கைப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்தனர். அந்த லிங்கங்கள் ஆயிரம் எனக் கணக்கிடப்பட்டதால் இந்த நதிக்கு  ‘ஆயிரம் லிங்க நதி’ என பெயர் வைத்தனர். இதன் பழைய சமஸ்கிருதப் பெயர் சகஸ்ர லிங்கம். (சகஸ்ரம் என்றால் ஆயிரம் ஆகும்) இவற்றை மலை உச்சியில் ஏறி பார்வையிட குறைந்தது 90 நிமிடம் ஆகும். குறுகலான படிக்கட்டுக்களில் மேலே ஏறுவது இக்கால மனிதர்களுக்கு கஷ்டமாகவே இருக்கும்.
இங்கு மட்டுமல்ல அங்கோரில் உள்ள பல கோயில்களின் படிக்கட்டுகள் குறு கலாக செங்குத்தாக இருக்கின்றன. அவற் றில் அந்தக் காலத்தில் மனிதர் கள் ஏறி -இறங்கியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய மனிதர்கள் தட்டு தடுமாறித்தான் ஏறுகிறார் கள்.
(தொடரும்)
கம்போடிய கலைக்கோயில்கள்- (பகுதி-1…2…3…4) ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை: