ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கவிஞர் சல்மா: முஸ்லீம் மதத்தில் பிறந்தவள் கடவுள் மறுப்புப் பற்றிப் பேசுவதை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.


கேள்வி : இஸ்லாமியப் பெண்களுக்கான அடையாளம் மட்டும்தானே உங்கள் கவிதைகளில் உள்ளது?
பதில் : எனக்குத் தெரிந்த எத்தனையோ இந்துக் குடும்பங்களில் என்னைப் போன்று அடக்கிவைக்கப்படும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். வீட்டிலிருந்து வெளியில் வராமல் எவ்வளவே பேர் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இந்து-முஸ்லீம் என்ற வேறுபாடில்லாமல் பெண்களுக்கான சிரமம் என்பது ஒன்றாகவே இருக்கிறது.

இதை என் இந்துத் தோழிகள் மூலமாக அனுபவப்பூர்வமாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். அப்போதுதான் எல்லாப் பெண்களுக்குமான பிரச்சினையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். ‘இஸ்லாமியப் பெண்’ என்ற தனிப்பட்ட அடையாளம் எனக்கு வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். என் தனிப்பட்ட அடையாளம் மட்டும்தான் என் கவிதைகளில் இருக்கிறது என்றால் எல்லாத்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கவிதைகளாக அவை இருந்திருக்காது. ஜாதி மத வேறுபாடுகளைத் தாண்டிய, எல்லாப் பெண்களின் அனுபவமாகத்தான் என் கவிதைகளைப் பார்க்கிறேன்.
கேள்வி : மதம் என்பது ஒரு வாழ்க்கை முறைதான். இஸ்லாமிய மத ஈடுபாடு உங்களுக்கு உண்டா?
பதில் : ஆரம்பத்தில் மதத்தின் மீது ஆழமான நம்பிக்கை எனக்கிருந்தது. பின்பு ருஷ்ய இலக்கியம், மார்க்சியம், லெனின் பற்றி நிறைய வாசிக்க ஆரம்பித்த பின்பு எனது 16, 17 வயதுகளில் மதத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது. அந்த நம்பிக்கை இல்லை என்று காட்டிக்கொண்டதாலேயே நிறையப் பிரச்சினைகளை எதிர்கொண்டேன்.
குரான் ஓதுவதற்கான போட்டியில் பள்ளிவாசலில் நிறையப் பரிசுகள் எல்லாம் பெற்றுள்ளேன். அப்படியான ஒருத்தி திடீரென்று தொழுகை செய்வதை நிறுத்திவிட்டவுடன் வீட்டில் கடுமையான எதிர்ப்பு தானாகவே வருகிறது. மற்ற விஷயங்களில் என்னை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள்கூட என்னைப் பற்றி அதிகக் கவலைகொள்ளத் தொடங்கினர். யாருக்காகவும் என்னை இதுவரை மாற்றிக்கொண்டதில்லை. ஒரு நம்பிக்கை போய்விட்டது. அதை மனதின்றிப் பிறருக்காகச் செய்வதில் விருப்பமில்லை. அப்போது பல நாள் வெறுமனே நின்றுகொண்டு இருந்திருக்கிறேன். அம்மா பிடிவாதமாகத் தொழச் சொல்லி அழுவார்கள். காலப்போக்கில் அவர்களுக்கும் சலிப்பு வந்து விட்டுவிட்டார்கள். இப்போது இங்குள்ள எல்லோருக்கும் நான் ஒரு ‘காஃபிர்’. அதாவது இந்து. ஆனால் ஆரம்பத்தில் பெரிதாகப் பேசப்படும் விஷயங்கள் பின்னால் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. சென்னைக்கு வந்து லண்டன் TTN என்ற தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்திருந்தேன். சென்னைக்கு வந்தால் முஸ்லீமாக என்னை அடையாளம் காட்டவேண்டிய அவசியம் கிடையாது. பேட்டி கொடுத்தபோது ஃபுர்கா அணியாது சாதாரணமாகப் பேசிவிட்டு வந்தேன். அந்தப் பேட்டி ஐரோப்பாக் கண்டத்தில் மட்டும்தான் தெரியும் என்றார்கள். ஆனால் சவூதி முழுக்கவும் அந்த ஒளிபரப்புத் தெரிந்திருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து சென்று சவூதியில் வேலை பார்ப்பவர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து, பதிவுசெய்து அதை எங்கள் ஊருக்கு (துவரங்குறிச்சி) அனுப்பி வைத்துவிட்டார்கள். ஊர் முழுக்கப் பரவி, நான் ஏதோ தவறு செய்துவிட்டதுபோல எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டார்கள். வீட்டிலிருந்து வெளியில் தலைகாட்ட முடியவில்லை. அதனால் எனக்கு ஏற்பட்ட மன வருத்தத்தைச் சொல்வது சிரமம்.

ஒவ்வொருவரும் கேட்ட கற்பனையான கேள்விகளை நினைத்தே பார்க்க முடியாது. உதாரணத்திற்கு, “ஒரு ஆண் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறாய், அவன் உன் கையைப் பிடித்து இழுத்தால் நீ என்ன செய்ய முடியும்?” அதற்கு “தெருவில் நான் போகும்போது எவனாவது கையைப் பிடித்து இழுத்தால் என்ன செய்வது” என்று நான் சொல்லி கேள்வி கேட்பவர்களை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அப்போது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். ஹமீதுகூட சேர்ந்துதான் இப்படி ஆகிவிட்டாள். இனி அவனைப் பார்க்க அனுமதிக்கக்கூடாது என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினார்கள். முஸ்லீம் மதத்தில் பிறந்தவள் கடவுள் மறுப்புப் பற்றிப் பேசுவதை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

இப்படியான கேள்விகளுக்குப் பதில் சொல்லி சக்தியை வீணாக்க வேண்டாம் என்று தொடர்ந்து பத்து நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தேன். வீட்டிற்குள்ளும் கடுமையான பிரச்சினை வந்தது. “இனிமேல் எந்தப் பேட்டியும் கொடுக்கக்கூடாது” என்று அப்பா, அம்மாவிலிருந்து கணவர்வரை எல்லோருமே சொன்னார்கள். தீராத அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் வருத்தம் கொண்டார்கள். அவர்களிடம் “இனிமேல் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்” என்று சொல்லி சமாதானப்படுத்தினேன். அந்த விஷயம் ஆரம்பத்தில் பரபரப்பாக இருந்ததே தவிர, இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆனந்தவிகடன், தினமணி என்று பல பேட்டிகள் வந்து எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.
கேள்வி : உள்ளூர் ஜமாத்தாரிடமிருந்து ஏதும் எதிர்ப்பு வரவில்லையா?
பதில் : இல்லை. அதற்கு முக்கியக் காரணம் இதுவரை முஸ்லீம் சமூகத்தைப் பற்றி எதையும் எழுதவில்லை. அதைப் பற்றிய விமர்சனம் எனக்கு இருந்தாலும் அதை எழுத்தாக்கப் பயமாக இருக்கிறது. விமர்சனபூர்வமான கருத்துக்களைச் சொல்ல இங்கு இடமேயில்லை. சிறுபான்மையினர் மதமான இஸ்லாமை அந்த மதத்தில் பிறந்த ஒருவராலேயே விமர்சனம் செய்ய முடியாது. அப்படிச் செய்யும்போது நம்மைத் தண்டிக்க வேண்டும் என்று யோசிக்கத் தொடங்குவார்கள். உண்மையிலேயே என்ன சொல்ல வருகிறோம் என்பதைக்கூடப் பார்க்கமாட்டார்கள். அதில் அக்கறையும் இருக்காது.

சமீபத்தில் இலங்கை சென்றிருந்தபோதுகூட நான் பேசிய விஷயம் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. முற்போக்கு இலக்கிய அமைப்பு சார்பாக ஒரு சந்திப்புக்கு டொமினிக் ஜீவா ஏற்பாடு செய்திருந்தார். நானும் அம்பையும் அந்தக் கூட்டத்திற்க சென்றோம். குரானில் பெண்களக்கு சாதகமாக உள்ள விஷயங்களையும் பாதகமாக உள்ளதாகச் சொல்லப்படுகிற விஷயங்கள் பற்றியும் பேசலாம் என்றேன். ஒரு சம்பவ நிகழ்விற்கு சாட்சி வைக்கவேண்டும் என்றால் அந்தச் சாட்சி பெண்ணாக இருந்தால் இரண்டு பெண்கள் தேவை என்றும் ஆணாக இருந்தால் ஒருவர் மட்டுமே போதுமானது என்றும் குரானில் வருகிறது. முல்லாக்கள் ஹஜரத்துகள் போன்ற மதத் தலைவர்கள் இதை மட்டும்தான் அளவுகோலாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவார்கள். தங்களுக்கு சாதகமாக உள்ள மேலோட்டமான விஷயங்களை மட்டுமே கணக்கில் கொள்வார்கள். அதே விஷயத்தில் பெண்களுக்குச் சாதகமானவையும் குரானில் இருக்கும். எட்டுவிதமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அதில் உள்ள ஒரே விஷயத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். இதேபோலத்தான் பெண்களைத் “தலாக்” செய்வதிலும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான முறை இருக்கிறது.

இதைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசி விவாதத்தை உருவாக்கினால்தான் ‘இஸ்லாம்’ குறித்த தவறான அபிப்பிராயங்கள் மற்றவர்களுக்கு உருவாகாது என்று அந்தக் கூட்டத்தில் சொன்னேன். உடனே, அங்கிருந்த முஸ்லீம் எழுத்தாளர் ஒருவர் – அங்கு அவர் முக்கியமான கவிஞராம் – “இஸ்லாம் ஒரு முழுமையடைந்த ஒரு மதம். குரானும் முழுமையடைந்த வேதம். அதைப்பற்றி இங்கு யாரும் பேசக்கூடாது. விவாதிப்பது என்ற வார்த்தையே சொல்லக்கூடாது. நீங்கள் பேசியது தவறு” என்று மிக் கடுமையான கோபத்துடன் பேசினார்.

தமிழகத்திலிருந்து எங்களை இலஙகைக்கு அழைத்திருந்தவர்கள் “Muslim Women’s Research and Action Forum” என்ற அமைப்பை நடத்தும் ஐந்து முஸ்லீம் பெண்கள். முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள். அவர்களுக்குக் கொஞ்சம் தர்மசங்கடமாகிவிட்டது. இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தவேண்டாம் என்று சொல்லி முடிவுக்குக் கொண்டுவந்தார்கள். எதிராகப் பேசியவர்களின் குணம் தெரிந்து அப்படிச் செய்தார்கள். எதிராகப் பேசிய அந்தக் கவிஞர் என் தம்பியுடம் என்னைப் பற்றித் தவறாகப் பேசியிருக்கிறார். “இதை நான் சாதாரணமாக விடமாட்டேன்” என்றும் மிரட்டல் தொனியில் சொல்லியிருக்கிறார்.
கேள்வி : இஸ்லாமிய மத ரீதியான நம்பிக்கை தமிழகத்தைவிட இலங்கையில் அதிகமாக உள்ளதோ?
பதில் : இலங்கையில் நம் ஊரில் இருப்பதைவிடத் தீவிரமாகவே உள்ளது. தாங்கள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்திக்கொள்ள மிகுந்த ஆர்வமாக உள்ளார்கள். அதற்கு முக்கியமான காரணம் அவர்களது வாழ்க்கைநிலை. தமிழ் முஸ்லீம் என்ற அடையாளத்தை விரும்பியே வகுத்துக்கொள்கிறார்கள்.

“நான் தமிழனல்ல. முஸ்லீம். புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவர்கள் வேறு ஆட்கள். அவர்கள் சுதந்திரத்திற்காக அவர்கள்தான் போராடுகிறார்கள். நாங்கள் போராடவில்லை” என்பதை சிங்கள ராணுவத்திற்கும் அரசிற்கும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் புலிகளினால் அதிகமான கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதனால் தங்களைத் தனிச் சமூகமாகக் காட்டிக்கொண்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள். புலிகளின் மீதான வெறுப்பை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. மத அடையாளத்தைக் காட்டிக்கொண்டு தங்களின் உயிரையும் சொத்தையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இனப்பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பெல்லாம் பெண்கள் வெளியில் செல்லும்போது ஃபுர்கா அணிந்து செல்லமாட்டார்களாம். ஆனால் இப்பாதெல்லாம் ஃபுர்கா அணியாமல் முஸ்லீம் பெண்கள் வெளியில் செல்வதே இல்லை. அதனால் தனி ஒரு இனமாகக் காட்டிக் கொள்கிறார்கள். வீட்டிற்குள் இருக்கும்போது எப்படியிருந்தாலும் வெளியில் வரும்போது முஸ்லீம் என்ற அடையாளத்துடன்தான் வருகிறார்கள். “தமிழர்களல்ல நாங்கள். முஸ்லீம்கள்” என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் தாய்மொழி தமிழ்தான். “புலிகள்மீது எங்களுக்குச் சிறிதளவும் நம்பிக்கையில்லை. அவர்களிமிடருந்து தனித்து நிற்கவே விரும்புகிறோம்” என்பதே அவர்கள் நிலை.

நான் அங்கு இருந்த சமயத்தில்கூட கிளிநொச்சியில் கலவரம் நடந்தது. அதைக்கூட உதாரணமாகக் காட்டி அவர்கள் எப்போதுமே இப்படித்தான் நம்மை அவமானப்படுத்துகிறார்கள் என்று கோபமாகச் சொன்னார்கள். புலிகளின் தலைமை முஸ்லீம்களுடன் சமாதானத்தை விரும்பினாலும்கூட மாவட்டப் பிரதிநிதிகளின் முஸ்லீம் வெறுப்பு அதைச் சாதிக்கவிடாது என்றே பெரும்பான்மையோர் சொன்னார்கள். ஒரு சில விஷயங்களை அவர்கள் சொன்னபோது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
கேள்வி : தமிழகத்திலுள்ள முஸ்லீம் சமூகத்திற்கும் இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகத்திற்கும் இடையே என்னவிதமான வேறுபாடுகளை உணர்ந்தீர்கள்?
பதில் : அங்குள்ளவர்கள் கலாச்சாரரீதியாக மிகுந்த சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். நம்முடைய கலாச்சாரம் எல்லாப் பெண்களுக்கும் ஒருவித மனத்தடையை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் வீட்டில் இருக்கும்வரை முஸ்லீம்கள் என்ற அடையாளத்தைப் பார்க்க முடியவேயில்லை. முஸ்லீம் பெண்கள் இந்த அளவிற்குச் சுதந்திரமாக இருப்பதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. உடைகளிலிருந்து பேசுவதுவரை நிறைய வித்தியாசத்தைப் பார்த்தேன். பெண்களுக்கு நல்ல கல்வி கிடைத்திருக்கிறது. வேலைக்குச் செல்கிறார்கள். இப்படிப் பல விஷயங்கள் அங்கு சாத்தியமாகி இருக்கிறது. தமிழகத்தில் அந்த அளவிற்கு இல்லை என்பதை உணர்ந்தேன்
சல்மாவின் முழு பேட்டியை யும் படிக்க அவரது இணையத்தை பார்க்கவும்  poetsalma.com

கருத்துகள் இல்லை: