சனி, 18 ஜனவரி, 2014

தே.மு.தி.க., வந்தால் திருச்சி சிவா ராஜ்யசபா போட்டியில் இருந்து வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது

சென்னை: அடுத்த மாதம், 7ம்தேதி, ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு, நான்கு; அ.தி.மு.க., ஆதரவில், கம்யூ., கட்சிக்கு ஒன்று உறுதியாக வாய்ப்பு உள்ளது. ஆறாவது 'சீட்'டை தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., தலைமை தயாராக இருந்தது.லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்திய போது, ராஜ்யசபா 'சீட்' தருவதாக பேரம் பேசப்பட்டது. ஆனால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எந்த பதிலையும் தெரிவிக்காமல், மவுனம் காத்து வருகிறார். மேலும், சில நாள் பயணமாக, மலேசியாவுக்கும் சென்று விட்டார். இந்நிலையில், விஜயகாந்திற்கு, 'செக்' வைக்கும் வகையில், 'ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., சார்பில், திருச்சி சிவா போட்டியிடுகிறார்' என்ற அறிவிப்பை, கருணாநிதி நேற்று வெளியிட்டார். இதனால், தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணி மலருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வந்தால், திருச்சி சிவா,போட்டியில் இருந்து வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது. மீறி போட்டி என்று வந்து விட்டாலும் சிவா வெற்றி உறுதி.
மூன்றாவது முறையாக போட்டி: >தமிழகத்தின் சார்பில் 6 பேரை தேர்வு செய்வதற்கான ராஜ்யசபா தேர்தல் பிப்., 7 ல் நடக்கிறது. இதில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளராக, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் திருச்சி சிவா, நேற்று அறிவிக்கப்பட்டார்.இவர் 1954 மே 15 ல் திருச்சியில் பிறந்தார். எம்.ஏ., (ஆங்கிலம்) படித்துள்ளார். 1976ல் மாணவராக இருந்த சிவா, நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, சிறை சென்றவர். 1978ல் தி.மு.க., மாணவரணி உறுப்பினரானார். 1982ல் இளைஞரணி உறுப்பினராக சேர்ந்த இவர், 1983 -- 93 வரை அதன் துணைத் தலைவராக பதவி வகித் தார். சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழும் இவர், 1996ல் புதுக்கோட்டை லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று, முதன்முறையாக எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டார். பின் 2000 - - 2002 தி.மு.க., சார்பில் முதன்முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார். பின் 2007ல் மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆன இவரது பதவிக்காலம் 2013 ஜூலை 24ல் முடிந்தது. தற்போது 3வது முறையாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார். dinamalar.com

கருத்துகள் இல்லை: