வெள்ளி, 17 ஜனவரி, 2014

விதிகளை மீறி TATA, AMBANI கம்பெனிகளுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு அம்பலம்


புதுடெல்லி,
விதிகளை மீறி பரிந்துரை செய்யப்படாத டாடா, அம்பானி கம்பெனிகளுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டது அம்பலத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற 11 கம்பெனிகளின் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
ஒதுக்கீடு ரத்துக்காக வழக்கு
நிலக்கரி சுரங்கங்களை விதிகளை மீறி பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் மத்திய அரசு கஜானாவுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே முறைகேடாக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளை ரத்து செய்யுமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கேள்வி
இந்த வழக்கு நேற்று முன்தினம் (புதன்கிழமை) நீதிபதி ஆர்.எஸ். லோதா, மதன் பி. லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசிடம், ‘‘ மத்திய மின்சார ஆணையம், எரிசக்தித்துறை அமைச்சகம் ஆகியவற்றினால் சிபாரிசு செய்யப்படாத 11 கம்பெனிகளுக்கு எவ்வாறு சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டது?’’ என கேள்வி எழுப்பினர்.மேலும், ‘‘ சுரங்க ஒதுக்கீடு தேர்வுக்குழு, விதிமுறைகளை பின்பற்ற வில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. 28 கம்பெனிகளுக்கு சிபாரிசுகள் செய்யப்பட்ட நிலையில், 20 சிபாரிசுகளை தேர்வுக்குழு ஏற்றுள்ளது. 8 பரிந்துரைகளை நிராகரித்துள்ளது. 11 கம்பெனிகளின் பெயர்களை புதிதாக சேர்த்துள்ளது. இதைச் செய்தது எப்படி? எந்த அடிப்படையில், 8 கம்பெனிகளுக்கு பரிந்துரை நிராகரிக்கப்பட்டது? பரிந்துரை செய்யப்படாத 11 கம்பெனிகளை ஒதுக்கீடுக்கு தேர்வு செய்தது எப்படி? இதை ஆராய்ந்து சொல்லுங்கள்’’ என்று மத்திய அரசின் தலைமை வக்கீலான அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதியிடம் கூறினர்.
பரிந்துரைக்கப்படாத கம்பெனிகள்
இந்த நிலையில் மத்திய மின்சார ஆணையம், எரிசக்தித்துறை அமைச்சகம் ஆகியவற்றினால் சிபாரிசு செய்யப்படாமல் சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்ட 11 கம்பெனிகளின் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.
இதில் டாடா மின் நிறுவனம், அனில் திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் எரிசக்தி நிறுவனம், பால்கோ, எஸ்கேஎஸ் இஸ்பத் அன்ட் பவர், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ், கிரீன் இன்பிராஸ்டிரக்ஜர், விசா பவர், வந்தனா வித்யுத், ஜி.வி.கே., ககன் ஸ்பாஞ்ச் அயர்ன், லான்கோ குரூப் லிமிடெட் ஆகிய 11 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித்துறை மந்திரி பதவி வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் பதவிக்காலத்தில் விதிகளை மீறி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட கம்பெனிகள்
மத்திய மின்சார ஆணையம், எரிசக்தித்துறை அமைச்சகம் ஆகியவற்றினால் சிபாரிசு செய்யப்பட்டு, தேர்வுக்குழுவினால் நிராகரிக்கப்பட்ட 8 கம்பெனிகளின் பட்டியலும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தப் பட்டியலில் ராஷ்மி சிமெண்ட், டிஆர்என் எனர்ஜி, மைத்தான் பவர், மகாவீர் குளோபல் கோ, ரோசா பவர் கோ, பூஷண் எனர்ஜி, லாங்கோ அமர்கந்தக், வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
61 கம்பெனி ஒதுக்கீடு ரத்து?
இதற்கிடையே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதியைப் பெறாத 61 கம்பெனிகளின் சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கம்பெனிகளுக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீசு அனுப்பி உள்ளது.இந்தப் பட்டியலில் டாடா ஸ்டீல், ஆர்செலார் மிட்டல், ஹிண்டால்கோ, ஜிண்டால் ஸ்டீல் அன்ட் பவர், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எஸ்ஸார் பவர், அதானி பவர், டாடா பவர், ஜிவிகே பவர், அல்ட்ராடெக் சிமெண்ட், ரிலையன்ஸ் எனர்ஜி, ஸ்டெர்லைட் எனர்ஜி, ஜேபி அசோசியேட்ஸ் உள்ளிட்ட கம்பெனிகள் இடம்பெற்றுள்ளன.dailythanthi.com

கருத்துகள் இல்லை: