வியாழன், 16 ஜனவரி, 2014

ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு நான்கு "சீட்' உறுதி:


 சட்டசபையில், தற்போது கட்சிகளுக்கு உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு, நான்கு, "சீட்'களும், மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், தலா ஒரு சீட்டும் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., சேர்ந்தால், அந்தக் கட்சிக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை, விட்டுக் கொடுக்க, தி.மு.க., தரப்பு தயாராக உள்ளது.

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது, ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள, ஆறு பேரின் பதவிக் காலம், ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. அதனால், அடுத்த மாதம், 7ம் தேதி, புதிய எம்.பி.,க்களை தேர்வு செய்ய, தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபையில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியையும் சேர்த்து, அ.தி.மு.க., கூட்டணிக்கு, 150 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஒரு வெத்து பதவிக்கு இம்புட்டு கூட்டல் கழித்தல் கணக்கா ?
அத்துடன், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரின் ஆதரவும் உள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை தேர்வு செய்ய, தலா, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. அதனால், ஆளுங்கட்சி சார்பில், நான்கு எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. மீதமுள்ள இரு இடங்களை கைப்பற்ற, ஆளும் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.,க்கள் பலம் இல்லை. மார்க்சிஸ்டுக்கு, 10 மற்றும் இந்திய கம்யூனிஸ்டுக்கு, எட்டு என, 18 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், இந்தக் கட்சிகள் ஆதரவு அளித்தால், மற்றொரு எம்.பி., தேர்வு செய்யப்படலாம். கடந்த, சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்த, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தற்போதும், அதே கூட்டணியில் நீடிப்பதால், மார்க்சிஸ்ட் கம்யூ.,வுக்கு, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை, அ.தி.மு.க., விட்டுத் தரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த, ராஜ்யசபா தேர்தலின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர், டி.ராஜாவுக்கு, அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்தது. அதனால், அவர் வெற்றி பெற்றார். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு, இம்முறை வாய்ப்பு தரப்படலாம் என, நம்பப்படுகிறது. அப்படி தரப்பட்டால், லோக்சபா தேர்தலிலும், அ.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான கூட்டணி மலரும் என்பதும் தெளிவாகும்.

அதே நேரத்தில், ஆறாவது, ராஜ்யசபா எம்.பி., பதவியை, எந்த ஒரு கட்சியும், தனிப்பட்ட செல்வாக்கில் பெற முடியாது. ஏனெனில், தி.மு.க.,வில், 23 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். தே.மு.தி.க.,விலோ, பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேர் போக, மீதி, 21 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த ராஜ்யசபா தேர்தலின் போது, கனிமொழி எம்.பி.,யாக வேண்டும் என்பதற்காக, தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ம.க., புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சிகளின் ஆதரவை தி.மு.க., நாடியது. அதில், தே.மு.தி.க.,வும், பா.ம.க.,வும், ஆதரவு தர மறுத்து விட்டன. தே.மு.தி.க., வேட்பாளரை நிறுத்தியது. ஆனாலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்ததால், கனிமொழி வெற்றி பெற்றார்.

தற்போது, லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக, தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா சீட்டை விட்டுக் கொடுக்க, தி.மு.க., தரப்பு தயாராக உள்ளது. அப்படி விட்டுக் கொடுத்தால், தி.மு.க.,வுக்கு, 23, தே.மு.தி.க.,வுக்கு, 21 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளதால், அந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. அதேநேரத்தில், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற விரும்பவில்லை என்றாலும், ஆறாவது சீட்டுக்கு, போட்டியிட தி.மு.க., தயாராக உள்ளது. காரணம், தி.மு.க.,வுக்கு, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சிகள் ஆதரவு அளிப்பதே. காங்கிரஸ், பா.ம.க., கடைசி நேரத்தில், தி.மு.க.,வை ஆதரிக்க முன்வந்தால், தி.மு.க.,வுக்கு நிச்சயம், ஒரு எம்.பி., பதவி கிடைத்து விடும். அதனால் தான், ராஜ்யசபா எம்.பி., பதவியை காரணம் காட்டி, தே.மு.தி.க.,வை, தங்கள் கூட்டணிக்கு இழுக்க, தி.மு.க., பேரம் பேசி வருகிறது. ராஜ்யசபா தேர்தலின் போது, கட்சிகள் தெரிவிக்கும் ஆதரவு, லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாகும் என்பதால், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.


அ.தி.மு.க.,வில் யாருக்கு:

ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு, நான்கு எம்.பி., சீட்டுகள் கிடைப்பது உறுதியாகியுள்ளதால், அந்த எம்.பி., பதவிகளைப் பெற, ஏற்கனவே வாய்ப்பு பெற்றவர்களும், இதுவரை வாய்ப்பு கிடைக்காதவர்களும் முயற்சித்து வருகின்றனர்.

நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: