வியாழன், 10 அக்டோபர், 2013

தமிழ் கட்சிகள் பதவிக்காக கடும் இழுபறி ! ஒருவருக்கு ஒருவர் குழிபறிப்பு ! இவர்களை சமாளிக்கவே முதலமைச்சருக்கு நேரம் போய்விடும் !

வடக்கு முதலமைச்சர் சத்தியப்பிரமாணத்தின் பின் தமிழ்  கூட்டமைப்புக்குள் எழுந்திருக் கும்  எதிரொலிகள் – சாலையூரான்

தமிழ் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்த வடக்கு முதலமைச்சருக்கான சத்தியப்பிரமாணம் ஜனாதிபதிமுன் இப்போது நிறைவுக்கு வந்திருக்கிறது.
இந்த சத்தியப்பிரமாணம் தமிழ் மக்கள் எமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு நேர்மாறானதென்றும் இது அரசுடன் ஒருவகையான சோரம் போவதற்கான முயற்சியென்றும் தமிழ் கூட்டமைப்புக்குள்ளேயே வாதப்பிரதிவாதங்கள் எழுந்திருந்த நிலையில் வடக்கின் முதலமைச்சருக்கான சத்தியப்பிரமாணம் முடிவுக்கு வந்திருக்கிறது. எவ்வாறிருப்பினும் இந்த சத்தியப்பிரமாணத்தை அடுத்து அரசுத்தரப்பும் தமிழ் கூட்டமைப்பின் தலைவர்களும் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் மேலான கவனத்துக்குரியவை.
இன்று நாட்டில் இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவதற்கான ஒரு முயற்சியாக இந்த சத்தியப்பிரமாணத்தை ஜனாதிபதி முன் மேற்கொண்டதாக தனது விளக்கத்தை விக்கினேஸ்வரன் முன்வைத்திருக்கிறார்.

வடக்கு மக்கள் தனக்கு அளித்துள்ள பதவி, குறுகிய மற்றும் நீண்ட நோக்கில் பணியாற்ற ஆணை வழங்கியிருப்பதாகவும் அதனை அடைய கடந்த கால போராட்டங்கள், அரசியல் அணுகு முறைகளிலிருந்து பாடங்களை கற்று முன்னேற வேண்டியுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டிருக்கிறார். பிரச்சினைகளையும் அவற்றை தீர்ப்பதற்கான தமது அணுகு முறைகளையும் நேரடியாக வெளிப்படுத்தாது  அடுத்துவரும் தேர்தல்களுக்காகவும் மிச்சம் மீதிகளை வைத்துக்கொண்டு பேசும் தமிழ் கூட்டமைப்பினரின் வழமையான தந்திரோபாய பேச்சாக இதை எடுத்துக்கொண்டாலும் அரசுடன் முரண்பட்டுக்கொள்வதை தவிர்த்து ஒரு இணக்கமான போக்கை கொண்டிருக்க வேண்டுமென்பதில் விக்கினேஸ்வரன் சற்று அக்கறையாக இருப்பதாவே தென்படுகிறது.
பதிலுக்கு சம்பந்தனும் மத்தியில் அரசுடன் மோதிக்கொண்டு மக்களுக்கான பணிகளை முன்னெடுப்பது கடினமான ஒரு விடயமென்பதையும் இந்த சத்தியப்பிரமாணத் தையடுத்து கருத்து வெளியிடும்போது குறிப்பிட்டிருக்கிறார். இன்று மாகாண சபையை நடாத்துவதற்கு ஒரு அலுவலகக்கட்டிடம் கூட இல்லாத நிலையில் தாம் இருப்பதையும் சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
விக்னேஸ்வரனதும் சம்பந்தனதும் கருத்துக்களின் நோக்கில் இருவரும் கடந்த காலங்களில் தமது ஆட்சியின் கீழ் இருந்த  உள்ளாட்சி சபைகளுக்கு நேர்;ந்தவைகளை சரியான அனுபவமாக எடுத்துக்கொண்டிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.அரசு மீது அவநம்பிக்கையான கதைகளை தொடர்ந்தும் கூறிக்கொண்டிருப்பது தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு தமது கையாலேயே வலுச்சேர்க்;கும் முயற்சிகளாக தமது நடவடிக்கைகள் அமைந்துவிடலாம் என்ற அச்சம் இந்த நிலைப்பாட்டை நோக்கி தமிழ் கூட்டமைப்பினர் சிந்திக்க தூண்டியிருக்கலாம்.
சத்தியப்பிரமாணத்தை அடுத்து இடம்பெற்ற சந்திப்பில் அரசுடன் ஒத்துழைத்து செயற்பட தயாரென்றால் வடக்கின் அபிவிருத்தி மேம்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க தாம் தயார் என்ற ஒரு கருத்தையும் ஜனாதிபதி விக்கினேஸ்வரனுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.
இந்த நிகழ்வுகளிடையே ஏககாலத்தில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் வடக்கு மாகாண சபையின் எதிர்காலத்துக்காக முன்வைத்திருக்கும் கருத்தும் இவ்விடத்தில் கவனத்துக்குரியதாக இருக்கிறது.இச்சந்தர்ப்பத்தில் தேசிய நல்லிணக்கத்துக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே சிறந்த வழியென்பதை கொழும்பு தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதை சல்மான் குர்ஷித் அழுத்தியிருக்கிறார்.
அத்தோடு புதிய வடமாகாண அரசு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து காத்திரமான தீர்வுத்திட்டமொன்றை எட்டுமென்றும் சல்மான் குர்ஷித் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.தமிழ் கூட்டமைப்பின் இனவாதத்தை தூண்டும் பிரசாரங்களில் காத்திரமான கருத்து முரண்பாடுகளை கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்த பதவிப்பிரமாணத்தில்  அரசுடன் இணைந்து செயற்பட்டதைப் போன்று வடக்கு மக்களின் உண்மையான விடிவுக்காக உழைக்க முன்வருமாறு தமிழ் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
வடக்கு முதலமைச்சருக்கான இந்த நிகழ்வில் இருதரப்பிலிருந்தும் சாதகமான கருத்துக்கள் எட்டப்பட்டிருக்கின்ற போதும் முரணாக சிந்திக்கும் செயற்படும் போக்குகளும் ஆங்காங்கே முளைவிட்டிருப்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.சம்பந்தன்,சுமந்திரன்,விநாயக மூர்த்தி,சித்தார்த்தன் தவிர தமிழ் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் இந்த சத்தியபபிரமாண நிகழ்வில் கலந்துகொள்வதை தவிர்த்திருக்கிறார்கள்.
மலையக,தமிழ்,முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட  தென்னிலங்கை சிங்கள அமைச்சர்களும் கலந்து கொண்ட இந்த பதவிப்பிரமாண நிகழ்வை தமிழ் கூட்டமைப்பின் கூட்டுக்கட்சி தலைவர்கள் பகிஷ்கரித்திருப்பது கவனத்துக்குரிய விடயம்.கூடவே ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தமிழ் மக்கள் விக்கினேஸ்வரனுக்கு அமோக வெற்றியை வழங்கியிருப்பது மஹிந்தவை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவே அன்றி ஜனாதிபதியை காப்பாற்றுவதற்காக அல்லவென மஹிந்த முன் பதவியேற்புக்கு தனது கண்டனத்தை வெளியிட்டிருக்கிறது. இது புலம்பெயர் அமைப்புக்களின் மாறுபட்ட சிந்தனைக்கு ஓர் உதாரணம். இந்தச்சிந்தனை தமிழ் கூட்டமைப்புக்குள் எவ்வாறு தொழிற்படுமென்பது அடுத்த விடயம்.
இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு சென்ற மாவை எம்பி அங்கு தன்னை சந்தித்த ஊடகவியலாளர்களிடம் தமிழ் மக்களின் காணி பிரச்சினை பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.புதிய வடமாகாண சபை நிர்வாகம் இணக்கமாக அரசுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதாக கூறும் இச்சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கு மாவை கருத்துக்கூறுவது தமிழ் கூட்டமைப்புக்குள் தீர்வுகளை அணுகுவதில் இரண்டுபடும் போக்குகள் தலைதூக்குவதையே உணர்த்துகிறது. இதில் பிரதானமாக இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் கவனத்துக்குரியது.தென்னிலங்கை இனவாத சக்திகள் பலவும் இலங்கை விடயத்தில் இந்தியா கூடுதல் கரிசனை கொள்வதாக குற்றம் சாட்டும் ஒரு சூழலில் அதுவும் கொழும்பில் வடக்கு முதலமைச்சரின் சத்தியப்பிரமாணத்தையொட்டி இலங்கைக்கு இந்தியாவின் பிரசன்னம் இடம்பெற்றிருப்பது முக்கியமான ஒன்று.
நீண்ட காலத்தில் இலங்கை தமிழருக்கான இந்தியாவின் வேண்டுதலை இலங்கையும் உதாசீனம் செய்துவந்த நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கும் வடக்கு மாகாண சபை ஊடாக விடயங்களை இந்தியா கையாள விரும்புவதையே அதன் வெளியுறவு அமைச்சரின் சமகால விஜயம் சுட்டிநிற்கின்றது.
இந்தியா எதிர்கொள்ளும் இந்தச் சூழல் தமிழ் மக்களை பொறுத்தவரை மிகவும் சாதகமானது. ஆனால் தமிழ் கூட்டமைப்புக்குள் அரசுக்கெதிராக இனத்துவ நிலைப்பட்டு சிந்திக்கும் சக்திகள் அடுத்தடுத்த தேர்தல்களை இலக்கு வைத்து தமது வாக்கு வங்கிகளுக்காக வடமாகாண சபையை என்ன நிலையில் வைத்திருக்க விரும்புகின்றன என்பது இவ்விடத்தில் முக்கியமான விடயம்.கணிசமான வாக்குகளை பெற்ற போதும் போருக்குப்பிறகு தமிழ் கூட்டமைப்பினர் மக்களுக்கான அபிவிருத்தியை தொடர்ந்து நிராகரிப்பதாக தமிழ் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனத்தை இனிமேலாவது மனத்திலிருத்தி செயற்படுவார்களாயின் தமிழ் மக்கள் தமக்கான விமோசனத்தை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம். தமிழ் மக்களின் எதிர்காலம் தம்மிடத்திலிருப்பதை தமிழ் கூட்டமைப்பினர் உணர்ந்து செயற்பட வேண்டிய தருணம் இது. engaltheasam.com

கருத்துகள் இல்லை: