புதுடெல்லி,
‘தெலுங்கானா’வுக்கு எதிராக டெல்லியில்
உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை மோசமானது. அவர்
குண்டுக்கட்டாக அகற்றப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி
மாநிலம் உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி
போர்க்கொடி உயர்த்தி உள்ளது. அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு
(வயது 63), டெல்லியில் உள்ள ஆந்திர பவன் முன்பாக கடந்த 7–ந் தேதி முதல்
காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தார்.நேற்று 5–வது நாளாக
உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவரை
அங்கிருந்து அகற்றி மருத்துவமனையில் சேர்க்க டெல்லி போலீசார் அதிரடியாக
முடிவு எடுத்தனர்.
கடும் எதிர்ப்பு
இந்தோ திபெத் போலீஸ் சூப்பிரண்டு
தலைமையில் 50 பேரைக் கொண்ட போலீஸ் படை, ஆம்புலன்சு சகிதம் ஆந்திர பவனுக்கு
பகல் 3 மணிக்கு விரைந்தது. அங்கிருந்து சந்திரபாபு நாயுடுவை அகற்ற
தெலுங்குதேசம் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆந்திரபவன்
பகுதியில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர
முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி படங்கள் தாங்கிய விளம்பரத் தட்டிகளை
அவர்கள் உடைத்து நொறுக்கினர். அவர்களின் உருவப்பொம்மைகளையும் எரித்தனர்.
குண்டுக்கட்டாக தூக்கினர்
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சந்திரபாபு
நாயுடுவை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி ஆம்புலன்சினுள் கொண்டு சென்றனர்.
ஆம்புலன்சு நேராக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை நோக்கி புறப்பட்டது.
ஆனால் ஆம்புலன்சை அங்கு இருந்து செல்லாமல் தடுக்கும் நோக்கத்துடன்
தொண்டர்கள் சாலையில் தடைகளை ஏற்படுத்தினர். பந்தலை அடித்து
நொறுக்கினர்.ஆனால் போலீசார் அந்த தடைகளை அகற்றி விட்டு, ஆம்புலன்சுக்கு வழி
ஏற்படுத்திக்கொடுத்தனர். ஆம்புலன்சை சந்திரபாபு நாயுடு கட்சி
எம்.பி.க்கள், உறவினர்கள் பின் தொடர்ந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
சந்திரபாபு நாயுடு, ராம் மனோகர் லோஹியா
மருத்துவமனையில் மிகவும் முக்கியமான நபர்களுக்கான அறை எண் 6–ல்
அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆனால்
அவர் குளுக்கோஸ் ஏற்ற சம்மதிக்கவில்லை. அங்கும் உண்ணாவிரதத்தைத்
தொடருகிறார். அவரது உடல் உறுப்புகளின் இயக்கம் சாதாரணமாக உள்ளது. உடலில்
நீர்ச்சத்து மட்டும் குறைந்துள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி
சந்திரபாபு நாயுடுபோன்று ஐதராபாத்தில்
உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்
ரெட்டியும், 5–வது நாளில் வலுக்கட்டாயமாக போலீசாரால் அகற்றப்பட்டு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது நினைவுகூரத்தகுந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக