சென்னை,
அத்வானியை கொலை செய்ய முயற்சி, வேலூரில் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் மற்றும் சேலத்தில் பா.ஜனதா பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரின் கொலை வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 4 பேரையும் பிடிக்க தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சென்னை பெரியமேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பதுங்கி இருந்த போலீஸ் பக்ருதீனை நேற்று முன்தினம் மாலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்ற 3 தீவிரவாதிகளும் தமிழக எல்லைப்பகுதியான ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து புத்தூர் பகுதியை சுற்றி வளைத்து தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது நடவடிக்கைக்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி பன்னா இஸ்மாயில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தான். இதனை அடுத்து தீவிரவாதி பன்னா இஸ்மாயில் முதலில் புத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டான். தீவிரவாதிகள் தாக்கியதில் காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீவிரவாதி பன்னா இஸ்மாயில் உயிர் பிழைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த பன்னா இஸ்மாயிலின் உடலில் உள்ள குண்டை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டு இஸ்மாயின் கல்லீரம் மற்றும் குடலுக்கு இடையே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற 5 மணி அறுவை சிகிச்சையின் போது குண்டை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குண்டை அகற்றினால் பன்னா இஸ்மாயில் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவமனையின் உயர் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மற்றோரு தீவிரவாதி பிலாஸ் மாலிக்கை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக