வியாழன், 25 ஏப்ரல், 2013

வீடுகளில் இனி "சோலார்' கட்டாயம் : மாநகராட்சிகளில் முதற்கட்டமாக அமல்

மதுரை:"வீடுகளில் "சோலார் எனர்ஜி' பயன்படுத்தினால் மட்டுமே,
கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும்,' என்ற நடைமுறையை தமிழகத்தில் அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டை சமாளிக்க, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகிறது. பிற மாநிலங்களில் இருப்பதைப் போல், சுயமின் உற்பத்தி தமிழகத்தில் இல்லை. முழுக்க அரசை நம்பியிருப்பதால், மின்தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.வடமாநிலங்களில், வீடுகள், விவசாயம், அலுவலகங்களில் தனியார் "சோலார்' பயன்பாடு உள்ளது. தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் வகையில் சோலார் பயன்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில், மின்தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டுமானால், "சோலார்' பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது.


அதை கருத்தில் கொண்டு, கட்டடங்களுக்கான அனுமதியில், "சோலார்' பயன்பாட்டை கட்டாயப்படுத்த முடிவுசெய்துள்ளனர். முதற்கட்டமாக அனைத்து மாநகராட்சிகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி, கட்டட அனுமதி பெற, "சோலார் வாட்டர் ஹீட்டர்' பொருத்தியிருக்க வேண்டும்.

ஆனால், நடைமுறையை யாரும் பின்பற்றுவதில்லை. புதிய நடைமுறைப்படி, வாட்டர் ஹீட்டருக்கு மட்டும் இருந்த சோலார் பயன்பாட்டை, கட்டாய "சோலார் என்ர்ஜி'யாக மாற்ற உள்ளனர். அதன் படி, லைட் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு சோலார் கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். அதற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும். "இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுமாறு,' அனைத்து மாநகராட்சிகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டடங்களுக்கு வரும் இந்த புதிய நடைமுறை, நாளடைவில், முன்பு அனுமதி பெற்ற கட்டடங்களிலும் விரிவுபடுத்தப்படும்.

அதிகாரி ஒருவர் கூறும்போது, " புதிய நடைமுறை குறித்த தேதியை அரசு விரைவில் அறிவிக்கும்,' என்றார்dinamalar.com

கருத்துகள் இல்லை: