சனி, 27 ஏப்ரல், 2013

மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்களில் காத்திருக்கும் ஆபத்து

கோவையில் 4 பேரை பலி கொண்டுள்ள தீ விபத்துக்குப் பின்பாவது, மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்களில் உள்ள விதிமீறல்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.2004 ஜனவரி 23ல் ஸ்ரீரங்கத்தில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மாப்பிள்ளை உட்பட 50 பேர் பலியாயினர்; அதன் பின், கல்யாண மண்டபங்களின் விதிமீறல் பற்றி அதிரடி ஆய்வுகள் நடந்தன; அதே ஆண்டில், ஜூலை 16ல் கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், 93 மழலைகள் உயிரோடு கருகின; பள்ளிக் கட்டடங்களின் மீது பாய்ந்தது அரசின் அதிகாரம்; தாசில்தார் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் பஸ்சிலிருந்து குழந்தை விழுந்து இறந்த பின், பள்ளி வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது அரசு. யாராவது செத்தால்தான், சம்மந்தப்பட்ட விதிமீறல் கண்டு கொள்ளப்படும் என்பது தமிழகத்திற்கான நிரந்தர சாபக்கேடாகவே மாறிவிட்டது. வணிக வளாகங்கள், தியேட்டர்கள், டிபார்மென்டல் ஸ்டோர்கள், ஜவுளிக்கடைகள் போன்ற மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்களில் தீத்தடுப்பு வழிமுறைகள், அவசர வழி போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லாமல்


விதிகளை மீறி கட்டும்போது, அவற்றில் தீ விபத்து ஏற்பட்டால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும் என்று நுகர்வோர் அமைப்புகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றன; "தினமலர்' நாளிதழும் தொடர்ச்சியாக இந்த விதிமீறலை சுட்டிக்காட்டி வருகிறது. ஆனாலும், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவதும், அவற்றுக்கு சொத்து வரி, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு போன்றவற்றை அதிகாரிகள் வாரி வழங்குவதும் தொடர்கதையாகி வருகிறது. நேற்று முன் தினம் நடந்த தீ விபத்தில், நகருக்கு நடுவில் கட்டடம் இருந்தும், தீயணைப்பு வாகனங்கள் விரைவாக வந்தும், 4 பேர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதே விபத்து, பல ஆயிரம் மக்கள் கூடும் டிபார்ட்மென்டல், ஜவுளிக்கடை மற்றும் வணிக வளாக கட்டடங்களில் ஏற்பட்டிருந்தால், பல நூறு பேர் உயிரிழந்திருப்பது நிச்சயம். கோவையில் பெரும்பாலான பெரிய கடைகள், குறுகலான வீதிகளில்தான் அமைந்துள்ளன; அவற்றில் தீ விபத்து ஏற்பட்டால், முன் பகுதியில் மட்டுமே அனைவரும் வெளியேற வேண்டும். அப்பகுதியிலிருந்து மட்டுமே தீயணைப்பு வண்டிகளை இயக்க முடியும். இத்தகைய கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளைக் கற்பனை செய்யவே முடியவில்லை.

இதுபோன்ற கட்டடங்களைக் காப்பாற்றுவதில், மாநகராட்சியின் பங்கு மகத்தானது. சுத்தமாக அனுமதியே பெறாவிட்டாலும், அந்த கட்டடத்துக்கும் "100 சதவீத விதிமீறல் கட்டடம்' என்று பெயர் கொடுத்து சொத்து வரி விதிப்பது, இங்கு மட்டுமே. அனுமதியற்ற கட்டடத்துக்கு 1993ல், சதுர அடிக்கு 50 பைசா என்று விதிக்கப்பட்ட அபராதத்தை, 2003ல் 25 பைசாவாகக் குறைத்து, 25 பைசா செல்லாத நிலையிலும் 2013 வரையிலும் அதே அபராதத்தை வசூலித்து சாதனை படைத்து வருவதும் இந்த மாநகராட்சிதான். மகாராஷ்டிராவில் "தானே' கட்டட தீ விபத்தில், கவுன்சிலர், கார்ப்பரேஷன் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர்; கோவையிலோ, விதிமீறல் கட்டடங்களை கண்டு கொள்ளாததன் மூலமாகவே, மாநகராட்சி அதிகாரிகள் பலர் கோடீஸ்வரர்களாக உருமாறி விட்டனர். இதே மாநகராட்சியில் அன்சுல் மிஸ்ரா கமிஷனராக இருந்தபோதுதான், பல கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டது; பல கட்டடங்கள் இடிக்கப்பட்டன; அவர் சென்ற பின், இரு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்துக்குப் பின்பாவது, எல்.பி.ஏ., மற்றும் மாநகராட்சி அதிரடியில் இறங்குமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அது வரையிலும், பாதுகாப்பற்ற கட்டடங்களில் "ஷாப்பிங்' செய்வதைத் தவிர்ப்பது மட்டுமே, பொது மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாப்பதற்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

- நமது சிறப்பு நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: