சனி, 27 ஏப்ரல், 2013

15 கோடி செலவில் உதயம் NH4-

இயக்குனர் வெற்றிமாறன் தனுஷுக்காகவே ஒரு கதையை பல
வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்தார். தனுஷ் கால்ஷீட் கிடைக்காது என்று தெரிந்ததும் புதிய இயக்குனரான மணிமாறனை வைத்து தனது கதையை படமாக்கச் சொன்னார் வெற்றிமாறன்.அந்த வகையில் இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் உதயம் NH4. ஜி.வி.பிரகாஷ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து 15 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது உதயம் NH4.சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூரிலிருக்கும் நண்பன் வீட்டிற்கு படிக்க செல்கின்றனர் சித்தார்த்தும் அவரது நண்பர்களும். தமிழ்நாட்டில் சாதாரணமாக வாழ்ந்துவிட்டு பெங்களூரில் பார்ட்டி, டான்ஸ், மது என ஒரு புதிய உலகத்திற்குள் நுழைந்த ஃபீலிங்குடன் வாழ்ந்து வரும் சித்தார்த் தனது நண்பனின் காதலியான ஷ்ரிதா ஷெட்டியையே மடக்கிவிடுகிறார்.
சித்தார்த் அஷ்ரிதா ஷெட்டியோடு எஸ்கேப்பாக போலிஸ் அதிகாரியான மனோஜ் மேனன் கதைக்குள் நுழைகிறார். ’இன்னைக்கு 12 மணிக்குள்ள என் பொண்ண தேடி கண்டுபிடிக்கலன்னா, நாளைக்கு அவ மேஜர் ஆகிடுவா’ என்று கூறி அஷ்ரிதா ஷெட்டியின் தந்தையான அவினாஷ், மனோஜ் மேனனை ஏவி விடுகிறார்.

மனோஜ் மேனன் சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டி, சித்தார்த்தின் நண்பர்களை தேடி(துரத்தி) பிடிக்கிறாரா? இல்லை அவர்கள் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்துவிடுகிறார்களா? என்பதே உதயம் NH4-ல் நடக்கும் மீதிக் கதை.

வெற்றிமாறனின் கதையை குறைவில்லாமல் படமாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணிமாறன். 



பார்ட்டி, பப் என நன்றாக பழகி இருந்ததாலோ என்னவோ பப், பார்ட்டி என ஜாலியாக இருக்க பெங்களூர் வரும் இளைஞனின் கதாபாத்திரத்தில் சித்தார்த்தின் நடிப்பில் ஒரு அசட்டை தெரிகிறது. ஒரு வருடம் தமிழில் தான் நடிப்பேன் என்று கூறியிருந்த சித்தார்த் மேலும் ஒரு வருடத்திற்கு கால்ஷீட் தயார் செய்து கொண்டால் வீணாகாது.

நுனி நாக்கில் ஆங்கிலமும், அவ்வப்போது தமிழ் கலந்த ஆங்கிலம் பேசிவரும் அஷ்ரிதா ஷெட்டி அவ்வளவு வெள்ளந்தி பெண்ணாக இருக்கிறார். கர்நாடகாவின் முக்கிய அரசியல்வாதியின் பெண் அப்படி இருக்கலாமா? ஆனால் கொடுத்த வேலையை கியூட்டாக செய்து முடித்திருக்கிறார் அஷ்ரிதா ஷெட்டி.



திரைப்படத்திற்கு பாடல்கள் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். ’யாரோ இவன்’ பாடல் காதலர்களுக்கான காலர் டியூனாகவும், ‘ஓரக் கண்ணாலே’ பாடல் நண்பர்களுக்கான காலர் டியூனாகவும் பல நாட்கள் இருக்கும் என்பதில் சந்தேகமல்ல.

இளவட்டங்கள் ரசிக்கும் விதத்தில் கதையும், காட்சிகளும் வைக்கப்பட்டிருப்பது படத்திற்கு மற்றொரு பலம். எப்போதும் கடும் டிராஃபிக்கில் ஸ்லோவாக நகரும் காதல் கதையை NH4-ல் படுவேகமாக ஓடவிட்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: