சென்னை, அக்.29: "ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல ஜெயலலிதாவும் கருணாநிதியும்' என்று கூறியிருப்பதன் மூலம் மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்னமும் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி காட்டமாக கூறியுள்ளார்.இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அமைச்சரவை மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று திமுக ஆட்சியில் கடைப்பிடித்த முறையைச் செய்தியாளர்களிடம் வைகோ வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.நான் அப்போது செய்ததையும், இப்போது சொன்னதையும் அவர் நினைவூட்டிய போதிலும், என்னையும் ஜெயலலிதாவையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கூறி ஆத்திரத்தைக் கக்கியிருக்கிறார் என்பதையும் மறந்துவிடக் கூடாது.திமுகவுக்கு ஆற்றிய பணிக்காக மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக்கி அருகிலேயே வைத்திருந்து பாராட்டிய நானும், கடைசி நிமிடம் வரை காத்திருக்க வைத்து கைவிட்ட ஜெயலலிதாவும் வைகோவுக்கு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத் தெரிகிறார்கள் என்றால் அவர் இன்னமும் திருந்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.பூனை இளைத்தால் எலிகூட மச்சான் முறை கொண்டாடும் என்பது பழமொழி அல்லவா? என்று கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக