ஞாயிறு, 28 நவம்பர், 2010

Ratan Tata ராடியாவின் தொலைபேசி பேச்சு கசிவு-சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார் டாடா

Ratan Tataடெல்லி: நீரா ராடியாவுடன் தான் பேசியது மீடியாக்களில் கசிந்ததற்கு டாடா குழும தலைவர் ரத்தன் டாடா கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். இதை தடுத்து நிறுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டை அவர் அணுகவுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நீரா ராடியாவடன் முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி, பத்திரிக்கையாளர்கள் பர்கா, வீர் சங்வி உள்ளிட்டோர் பேசிய ஆடியோ பேச்சு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல ரத்தன் டாடாவும், ராடியாவும் பேசியதும் அம்பலமாகியுள்ளது. இது ரத்தன் டாடாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது தனிப்பட்ட உரிமைகளை மீறும் செயலாக அவர் கருதுகிறார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

டாடா குழுமத்தின் டாடா டெலிசர்வீஸஸ் நிறுவனத்திற்காக மக்கள் தொடர்புப் பணிகளையும் நீரா கவனித்து வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் டாடா நிறுவனமும் பங்கேற்றது நினைவிருக்கலாம்.

இந்த விவகாரம் குறித்து டாடா தரப்பில் கூறுகையில், ராடியாவின் தொலைபேசிப் பேச்சுக்களை ஸ்பெக்ட்ரம் விசாரணைக்கான கோணத்தில் மட்டுமே வருமான வரித்துறை பதிவு செய்துள்ளது. ஆனால் இந்தப் பேச்சுக்கள் எப்படி மீடியாக்களுக்குப் போனது என்று தெரியில்லை. இது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

அரசியல் சட்டத்தின் 32வது பிரிவின்படி, ஒரு தனி நபரின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதை நமது சட்டம் தடை செய்கிறது. எனது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது போல அமைந்துள்ளது நானும் ராடியாவும் பேசிய தொலைபேசி பேச்சுக்களை மீடியாக்கள் வெளியிடுவது என்று கொதிப்புடன் கூறியுள்ளாராம் ரத்தன்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வி்சாரணைக்கு குறுக்கே நான் ஒருபோதும் நிற்கவில்லை, நிற்க முயலவும் இல்லை என்பதை உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்த ரத்தன் விரும்புகிறார். இதற்காகவும் அவர் உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்யவுள்ள மனுவில், விசாரணைக்காக தானும், ராடியாவும் பேசியதை வருமான வரித்துறையினர் பதிவு செய்திருக்கின்றனர். விசாரணைக்காக பதிவு செய்யப்பட்டது என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே அந்தப் பேச்சின் பதிவை கேட்க வேண்டும். அதேசமயம், இதை மீடியாக்கள் மூலம் வெளியிடுவது தனிப்பட்ட ஒருவரின் உரிமைகளில் தலையிடுவது போலாகும்.

மேலும் பேச்சின் சில பகுதிகள் மிகவும் தனிப்பட்டவையாகும். அவற்றை பகிரங்கமாக மீடியாக்கள் வெளியிடுவது கடும் குற்றமாகும். பொதுமக்களை குழப்பும் வகையிலும், டாடா குழுமம் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையிலுமே இவ்வாறு ஆடியோ பதிவு கசிய விடப்பட்டிருக்கிறது.

எனவே இந்த ஆடியோப் பதிவு எப்படி வெளியானது, யாரால் திருடப்பட்டது, யார் இதை கசிய விட்டது என்பதை கண்டறிந்து அவர்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ரத்தன் கோரவுள்ளார் என்று ரத்தன் தரப்பு கூறுகிறது.

ராடியாவுக்கும், மற்றவர்களுக்கும் இடையிலான தொடர்புகளை அறிவதற்காக, அவரது தொலைபேசி பேச்சுக்களை வருமான வரித்துறை கடந்த 2008ம் ஆண்டு ஒட்டுக் கேட்க ஆரம்பித்து பதிவு செய்தது.

இதில் அவர் ராஜா, கனிமொழி, ரத்தன் டாடா உள்ளிட்டோருடன் பேசிய பேச்சுக்கள் பதிவு செய்யப்பட்டன. இவைதான் சமீபத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடியோ பதிவுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியையும் வருமான வரித்துறை வாங்கியுள்ளது.

முதலில் கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி உள்துறையின் அனுமதியை வருமான வரித்துறை வாங்கியது. அப்போது 120 நாட்களுக்கு ராடியாவின் பேச்சுக்களை ஒட்டுக்கேட்க அனுமதி பெறப்பட்டது. பின்னர் அதே அளவிலான காலகட்டத்திற்கு ஒட்டுக் கேட்க 2009ம் ஆண்டு மே 11ம் தேதி வருமான வரித்துறை அனுமதி வாங்கி பதிவு செய்து வந்தது.

ராடியாவின் 5851 தொலைபேசி அழைப்புகளை வருமான வரித்துறை பதிவு செய்துள்ளது. இவற்றை சிபிஐயிடம் 2009ம் ஆண்டுநவம்பர் 26ம் தேதி அது ஒப்படைத்தது. இவற்றில் பல பேச்சுக்கள் மிகவும் தனிப்பட்டவையாகும். ஆனால் அவையும் கூட சமீபத்தில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஸ்பெக்ட்ரம் சம்பந்தப்படாத பேச்சுக்களும் கூட வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை: