பீகாரில் கிடைத்த படுதோல்வி, மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்காமல் இருக்க காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றத் திட்டமிட்டுள்ளார் ராகுல் காந்தி.
கட்சியின் முக்கியப் பதவிகளுக்கு நியமன முறையை ஒழித்துவிட்டு தேர்தல் மூலம் மட்டுமே நிர்வாகிகளை தேர்வு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக இளைஞர் காங்கிரஸ், இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பில் இப்போது நடைமுறையில் உள்ள நியமனப் பதவிகளை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடிய ராகுல் காந்தி, கட்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பின் (என்.எஸ்.யு.ஐ.) தலைவர் வினய் தோமர் கூறும்போது, என்.எஸ்.யு.ஐ., இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் பல்வேறு நியமன பதவிகள் உள்ளன, அதில் மாற்றங்கள் கொண்டு வர ராகுல் விரும்புகிறார் என்றார்.
"அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர்களே அரசியலில் நுழைய முடியும் என்ற நிலை இப்போது உள்ளது. நானே இதற்கு சிறந்த உதாரணம். ஆனால், இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். சாமானிய மக்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம்," என்று ராகுல் காந்தி பேசியதாக வினய் தோமர் தெரிவித்தார்.
குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் புதிய நிர்வாகிகள் நியமனம் உடனடியாக இருக்கும் என்றார் அவர்.
இப்போதைக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை-ராகுல்:
இந் நிலையில் தனக்கு பிரதமர் பதவி மீது இப்போதைக்கு ஆசையில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம், வதோதராவில் மாணவ, மாணவிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியலில் பிரதமர் பதவி மட்டும்தான் சிறந்த பணியா?. அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. நாட்டுக்குச் சேவை செய்வதே எனது குறிக்கோள்.
இப்போதைக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை. கட்சியில் எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை திறம்பட மேற்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அரசியலில் நுழைவதற்கு குறைந்தபட்ச, அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. உடல்சார்ந்த வயதைக் காட்டிலும் மனமுதிர்ச்சி வயதே முக்கியம்.
குஜராத்தில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகி வருகின்றனர். ஏழைகள் பரம ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். குஜராத்தைப் போலவே உத்தரப் பிரதேசத்திலும் ஊழல் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக