ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஸ்பெக்ட்ரம்; இது ஆரிய-திராவிட யுத்தம்:கலைஞர் பேச்சு



வேலூர் மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முதல்வர் கருணாநிதி,   ’’ ராசா பற்றி பாராளுமன்றத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். கூச்சல் போடுவற்கு பாராளுமன்றம் சந்தை அல்ல. அது கூடி பேசும் இடம்.

ராசா ராஜினாமா செய்தால் பாராளுமன்றம் அமைதியாக நடக்கும் என்றதால் ஜனநாயக முறையில் ராஜினாமா செய்தார். அதன்பிறகு குழு விசாரணை வேண்டும் என்றார்கள்.
முந்த்ரா ஊழலில் மத்திய மந்திரி கிருஷ்ணமாச்சாரிக்கு தொடர்பு என குற்றம் சாட்டப்பட்டது. காங்கிரஸ் அறிவுரையை ஏற்று அவர் ராஜினாமா செய்தார். அதோடு கூச்சல்-குழப்பம் நின்று விட்டது. விமர்சனம் இல்லை. தமிழ்நாட்டில் பத்திரிகைகளில் எழுத கை ஓடவில்லை.

ராசா விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்தபிறகும் ஸ்பெக்ட்ரம் பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுவதற்கு ராஜா தலித். ஆச்சாரிக்கு ஒரு நியாயம்?, தலித்துக்கு ஒரு நியாயமா?, இது சமதர்மமா?.

எனது அரசில் உமாசங்கர் மீது புகார் வந்ததும் விளக்கம் கேட்டோம்.

கம்யூனிஸ்டும், அ.தி.மு.க.வும் சேர்ந்து உமாசங்கர் தலித் என்ற காரணத்தால் அவரை கருணாநிதி ஒழிக்க பார்க்கிறார் என்றார்கள். அவரை ஒழிக்கவில்லை. விலக்கி வைத்தோம். பின்னர் அவருக்கு மீண்டும் பணி வழங்கியது கருணாநிதிதான்.

இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா?. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரணை முடிவில் அதற்கு ஏற்ப திமுக முடிவு செய்யும். இந்த அளவுக்கு வெறியாட்டம் போடுகிறார்கள். இதில் எத்தனை லட்சம் கோடி ஊழல் என்பதை நிரூபிக்க முடியுமா.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 10 ஆண்டுகளாக நடக்கிறது. இன்னும் தீர்ப்பு கூறப்படவில்லை. இன்னும் எத்தனை வாய்தா வாங்குவார்களோ தெரியவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க இருந்தும் அதை வாய்தா வாங்கி இழுத்தடிக்கிறார்கள்.

1972-ம் ஆண்டு பெரியார் சொன்னார், இப்போது நடப்பது ஆரிய, திராவிட யுத்தம் என்றார். இப்போது அரசியல் ரீதியாக இந்த போராட்டம் நடக்கிறது. அதை சமாளிக்கும் பொறுப்பு நமது தோளுக்கு இருக்கிறது.

திராவிட ஆட்சியில், அதிகாரத்தில் வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்க, எதிர்கால சமுதாயத்தை காக்க, நாம் வைத்திருப்பது ஒட்டு மீசை இல்லை என்பதை நிரூபிக்க, தமிழ்நாட்டில் இன்னும் ஓரணியில் திரள தி.மு.க. கை உயர்த்தி உள்ளது. அதில் நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கைகோர்த்து எழுச்சிபெற்று ஆரிய சூழ்ச்சியை ஒழிப்போம்’’என்று பேசினார்

கருத்துகள் இல்லை: