செவ்வாய், 9 நவம்பர், 2010

விமானத்தில் வெடிபொருள் பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? தேடுதல் வேட்டை குறித்த பரபரப்பு

வாஷிங்டன் : விமானங்கள் மூலம் அமெரிக்காவின் முக்கிய நகரங்களைத் தகர்க்க திட்டமிடப்பட்ட பயங்கர சதி, ஆரம்ப கட்டத்திலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சமீபத்தில், ஏமனிலிருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் சக்திவாய்ந்த வெடிபொருள் பார்சல் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்தும், அந்த வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய மூன்று நாள் தேடுதல் வேட்டை குறித்தும் பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாத இறுதியில், ஏமன் நாட்டின் சானா நகரில் உள்ள, "யுனைடெட் பார்சல் சர்வீஸ்' மற்றும் "பெட்எக்ஸ் பார்சல் சர்வீஸ்' அலுவலகங்களுக்கு ஒரு இளம் பெண் வந்தார். தான் கையோடு கொண்டு வந்த பார்சல்களை அங்கு ஒப்படைத்த அந்த பெண், அவற்றை அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அனுப்பி வைக்கும்படி கூறினார். தனது பெயர், மொபைல் எண், முகவரியையும் அவர்களிடம் கொடுத்தார். (இவை எல்லாம் போலியானவை) அந்த பார்சல்களை அனுப்பி வைப்பதற்கான கட்டணங்களையும் கொடுத்துவிட்டு, சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார். அந்த பெண் கொடுத்த பார்சல்களில் தான், சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. கம்ப்யூட்டர் பிரின்டர் கருவியில் பயன்படுத்தப்படும், "டோனர் கேட்ரிட்ஜ்'க்குள், பவுடர் வடிவிலான சக்தி வாய்ந்த வெடிபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதில் மொபைல் போன், "சிப்' வைக்கப்பட்டு, அதனுடன், "ஒயர்' ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது. மொபைல் போனை இயக்கினால், அந்த பார்சலுக்குள் இருக்கும் வெடிபொருட்கள் வெடித்து, பயங்கர விளைவுகளை உண்டாக்கும். தொழிற்சாலை மற்றும் ராணுவ வட்டாரங்களில் மட்டுமே அந்த வெடிபொருள் பயன்படுத்தப்படும். இதற்கு, "பென்டா எரித்ரிட்டால் டிரைநைட்ரேட்' (பி.இ.டி.என்.,) என்று பெயர். அத்தனை எளிதில் இதை கண்டுபிடித்து விட முடியாது.

"பெட் எக்ஸ்' பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட வெடிபொருள் பார்சல், ஏமனில் நிறுத்தப்பட்டிருந்த கத்தார் ஏர்வேசுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டது. அடுத்த நாள், அந்த விமானம் ஏமனிலிருந்து கத்தாருக்கு புறப்பட்டுச் சென்றது. இதற்கு சற்று முன்னதாகவே, யுனைடெட் பார்சல் சர்வீசுக்கு சொந்தமான சரக்கு விமானத்தில், மற்றொரு வெடிபொருள் பார்சல் ஏற்றப்பட்டது. இந்த சரக்கு விமானம், ஏமனிலிருந்து ஜெர்மனி, பிரிட்டன் வழியாக அமெரிக்காவுக்கு செல்லும். இந்த இரண்டு விமானங்களிலும் வெடிபொருள் பார்சல் ஏற்றப்பட்டிருந்ததை, ஏமன் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. வெடிகுண்டு அடங்கிய பார்சல்களுடன் கத்தார் ஏர்வேஸ் பயணிகள் விமானம் கத்தாரில் தரை இறங்கியது. யுனைடெட் சரக்கு விமானம், ஜெர்மனியின் கூலின்ச் நகரில் தரை இறங்கியது. இந்த நேரத்தில் தான், சவுதி அரேபியாவின் உளவுத் துறை அதிகாரிகளுக்கு, ஏமனிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களில் வெடிபொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறித்த ரகசிய தகவல்கள் தெரியவந்தன. சிகாகோவில் உள்ள யூத வழிபாட்டு மையங்களை தகர்க்கும் நோக்கத்துடன் இந்த வெடிபொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தகவலும் அவர்களுக்கு தெரிந்தது. உடனடியாக இதை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு அவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பிரன்னன், இந்த தகவலை அதிபர் ஒபாமாவுக்கு தெரிவித்தார். ஒபாமாவுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது. அமெரிக்க அதிகாரிகள் முழு வீச்சில் களத்தில் இறங்கினர். எப்படியாவது அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டன. யூத வழிபாட்டு மையங்கள் மற்றும் யூத தலைவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பிரிட்டன் மற்றும் ஜெர்மன் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெர்மனின் கூலின்ச் நகரில் இருந்து பிரிட்டனுக்கு புறப்பட, யுனைடெட் பார்சல் சர்வீசுக்கு சொந்தமான சரக்கு விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தை நிறுத்துவதற்கான முயற்சியில் ஜெர்மன் அதிகாரிகள் களம் இறங்கினர். அதற்குள் அந்த விமானம் பிரிட்டனுக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. அடுத்த 90 நிமிடங்களில் அந்த விமானம், பிரிட்டனின் கிழக்கு மிட்லண்டில் தரை இறங்கியது. வெடிபொருள் பார்சல் இருப்பது தெரியாமலேயே அந்த விமானம், அதற்குள் 24 மணி நேரம் பயணித்து விட்டது. அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த தகவல்படி, பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள், மிட்லண்ட் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். விமானத்தில் இருந்த ஒவ்வொரு பொருட்களையும் தீவிரமாக சோதனையிட்டனர். அதே நேரத்தில், கத்தாரில் இருந்து மற்றொரு வெடிபொருள் பார்சலுடன் வந்த பயணிகள் விமானம், துபாயில் தரை இறங்கியது. தயாராக இருந்த அதிகாரிகள், விமானத்தை சோதனையிட்டனர். வெடிபொருள் பார்சல் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.ஆனால், மிட்லண்ட் நகருக்கு வந்த யுனைடெட் சரக்கு விமானத்தில், அதிகாரிகள் தொடர்ந்து சோதனையிட்டும் வெடிபொருள் பார்சலை கண்டுபிடிக்க முடியவில்லை.

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பிரென்னன் மறுபடியும் பிரிட்டன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, விமானத்தை சோதனையிடும்படி கூறினார். இதையடுத்து, இரண்டாவது முறையாக விமானம் அங்குலம், அங்குலமாக சோதனையிடப்பட்டது. விமானம் பிரிட்டனில் தரை இறங்கி 12 மணி நேரமாகி விட்டது. இருந்தபோதும், வெடிபொருள் பார்சலை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக, ஏமனில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அனைத்து பார்சல்களும் கீழே இறக்கப்பட்டு, அவை அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பல மணி நேர தேடுதல் வேட்டை, நீண்ட இடைவெளிக்கு பின் முடிவுக்கு வந்தது. ஒரு வழியாக வெடிபொருள் பார்சலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்த தகவல் அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பின் தான், அமெரிக்க உளவுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மூச்சே வந்தது. அக்டோபர் 27ம் தேதி துவங்கிய இந்த துரத்தல் வேட்டை, 29ம் தேதி தான் முடிவுக்கு வந்தது. இந்த மூன்று நாட்களும் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஏமன், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும், ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக கடந்தது. இந்த மூன்று நாட்களும் அவர்களின் தூக்கமும் தொலைந்து போனது.

அல்-குவைதா தலைமையிடமா ஏமன்: வளைகுடாவில் உள்ள ஏமன், அல்-குவைதா பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. வெடிபொருள் பார்சல்கள் ஏமன் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டதும், அமெரிக்காவில் பிறந்த அன்வர் அல் அவ்லாகி என்பவர் இதில் ஈடுபட்டுள்ளதும் தெரிந்தது. ஏற்கனவே, விமானத்தில் வெடிபொருள் வைத்த நைஜீரிய இளைஞரை அமெரிக்க போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த செயலுக்கு, ஏமனில் உள்ள அல்-குவைதா இயக்கம் பொறுப்பேற்றது. அதுபோல், துபாய் விமான வெடிபொருள் சம்பவத்தில் அல்-குவைதாவின் ஏமன் பிரிவுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால், ஏமன் நாட்டின் செயல்பாடுகளை அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக, அந்நாட்டு அதிகாரிகளின் முறையான ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது. ஏமன் அல்-குவைதா பிரிவினர், தனி, "ஆன்-லைன்' இதழ் துவங்கி, அதன்மூலம் புதிய ஆட்களை தேர்வு செய்தும் வருகின்றனர். ஏமனில் பயிற்சி பெற்று, அமெரிக்கா சென்று நாசவேலைகளில் ஈடுபடுபவர்களின் பேட்டிகளும் வெளியிடப்படுகின்றன.

அமெரிக்காவுக்கு உதவிய சவுதி உளவுத்துறை: துபாய் ஏர்போர்ட் பார்சல் வெடிபொருட்களை கண்டுபிடித்த சவுதி உளவுத் துறை, இதில் ஏமன் அல்-குவைதாவின் பங்களிப்பு உள்ளது என அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்தது. ஏற்கனவே சவுதியின் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பார்சல் வெடிபொருட்களில் கையாளப்பட்ட தொழில்நுட்பம்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைதேர்ந்த தொழில்நுட்பத்தில், வெள்ளைநிறப் பவுடரில் மின் ஒயர்களை கொண்டு, மொபைல் போன் சிம் கார்டுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டதும் சோதனையில் தெரியவந்துள்ளது. சவுதி மன்னராட்சியை எதிர்த்து, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஏமன் அல்-குவைதா இயக்கத்தினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: