வெள்ளி, 12 நவம்பர், 2010

கொழும்பில் நடக்கவிருக்கும் ‘சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு’ மீது விமர்சனங்களும் கண்டனங்களும்

இலங்கையில், நீர்கொழும்பு என்ற சிறுநகரத்தில் 1951ல் பிறந்த லெ.முருகபூபதி 1972ல் ‘மல்லிகை’ இதழில் வெளியான சிறுகதை மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1977ல் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய முருகபூபதி, நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், இ.மு.எ.சவின் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் செயற்பட்டவர். 1975ல் வெளியான ‘சுமையின் பங்காளிகள்’ என்ற இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. 2003ல் ‘பறவைகள்’ நாவலுக்காக முருகபூபதிக்கு சாகித்திய விருது கிடைத்தது. 1985ல் சோவியத் யூனியனின் அழைப்பின் பேரில் உலக இளைஞர் - மாணவர் விழாவிலும் பங்கேற்றவர். 1987ல் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த முருகபூபதி, தொடர்ந்து பல்துறை சார்ந்தும் எழுதிவருபவர். இதுவரை பதினெட்டு நூல்கள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு உதவும் அமைப்பை கடந்த 20 வருடங்களாக நடத்திவருகிறார். கடந்த பத்து வருடங்களாக அவுஸ்திரேலியாவில் ‘தமிழ் எழுத்தாளர் விழா’வையும் முன்னின்று நடத்திவருகிறார்.
எதிர்வரும் ஜனவரியில் கொழும்பில் நடக்கவிருக்கும் ‘சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு’ மீது விமர்சனங்களும் கண்டனங்களும் கிளம்பியிருக்கும் சூழ்நிலையில் அம்மாநாடு குறித்து மாநாட்டின் அமைப்பாளரான லெ.முருகபூபதியிடம் கேள்விகளை மின்னஞ்சலூடாக முன்வைத்தேன்.
ஷோபாசக்தி
09.10.2010
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை வடக்கிலோ கிழக்கிலோ அல்லது மலையகத்திலோ நடத்தாமல் நீங்கள் கொழும்பில் நடத்துவதன் காரணம் என்ன?
எமது மாநாட்டை நீங்கள் குறிப்பிடும் பிரதேசங்களில் நடத்துவதற்கு எமக்கும் விருப்பம் இருந்தது. எனினும் அதற்கான ஒழுங்குகளை செய்வதில் பல சிரமங்கள் நீடிக்கின்றன. முக்கியமாகப் போர் முடிந்து மக்களின் மீள்குடியேற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் காலப்பகுதியில், தென்பகுதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் படிப்படியாக தமது சொந்த நிலங்களிற்குத் திரும்பிக்கொண்டிருக்கையில் அப்பகுதிகளில் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்வதிலிருக்கும் சிரமங்களை நேரடியாகவே பார்த்தேன். நாம் கள ஆய்வு செய்தபின்பே இந்த முடிவுக்கு வந்தோம். மிகவும் முக்கியமான காரணம் வெளிநாடுகளிலிருந்து வருகை தரவிருப்பவர்களுக்கான, குறிப்பாக அப்பகுதிகளில் உறவினர்கள் எவரும் இல்லாத தமிழக மற்றும் மலேசியா, சிங்கப்பூர் பிரதிநிதிகளின் வசதிகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருந்தது. கொழும்பில் வாராந்தம் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் விழாக்கள் நடந்தவண்ணமிருக்கின்றன. எமது மாநாட்டை நான்கு நாட்களுக்கு கொழும்பில் நடத்துவது பலவிதத்திலும் வசதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமாகும். வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இட நெருக்கடிகளையும் பல்வேறு சிரமங்களையும் நாம் உட்பட வருகை தருபவர்களும் எதிர்நோக்க நேரிடும். வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்கு வெளிநாட்டவர்கள் செல்வதெனில சிலவேளை பாதுகாப்பு அமைச்சகத்தில் அனுமதிகளைப் பெறவேண்டியுமிருக்கும். எனினும் வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களில் கொழும்பு மாநாடு முடிந்ததும் இலக்கிய சந்திப்புகளையும் கருத்தரங்குகளையும் நடத்தும் யோசனை எம்மிடம் உண்டு. அவை இடத்துக்கிடம் ஒருநாள் நிகழ்வுகளாகவும் இலக்கியச் சந்திப்புகளாகவும் அமையலாம்.
இந்த மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்ன தொடர்புகளுள்ளன?
இதுதான் அண்மைக்காலங்களில் சிலரால் முன்வைக்கப்படும் விசித்திரமான கேள்வி. இந்தக் கேள்விக்கு இந்த மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவே எந்தவொரு தொடர்பும் கிடையாது என்பதே எனது ஆணித்தரமான பதில்.
இலங்கையிலிருக்கும் பல எழுத்தாளர்களின் நீண்ட கால விருப்பம்தான் இந்த எழுத்தாளர் மகாநாடு. கடந்த பதினைந்து வருடங்களில் நான் இலங்கைக்கு பல தடவைகள் சென்று வந்திருக்கின்றேன். பல இலக்கிய சந்திப்புகளில் இவ்வாறு ஒரு மாநாட்டை நடத்துவது குறித்து நானும் சக எழுத்தாள நண்பர்களும் ஆலோசனை நடத்தியிருக்கின்றோம். அவுஸ்திரேலியாவில் 2001ம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை வருடந்தோறும் முன்னின்று நடத்தி வருகின்றேன். இலங்கை, தமிழகம், உட்பட சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தெல்லாம் வருகைதந்த பல எழுத்தாளர்கள் அவுஸ்திரேலியா ஒன்று கூடலில் கலந்துகொண்டிருக்கிறார்கள். புதுவை இரத்தினதுரை, சேரன் உட்படப் பலரை விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றேன். ஆனால் அவர்களுக்கு வர விருப்பம் இருந்தும் வரமுடியாமல் போனது. ஷோபா உங்களைக்கூட அழைத்திருக்கிறேன்.. நினைவிருக்கிறதா? ஆனால் இலங்கையிலிருந்து எத்தனைபேரைத்தான் எம்மால் அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கமுடியும்? விமான டிக்கட்டுக்கான பணவசதி மற்றும் விஸா பிரச்சினைகள்… இப்படி எத்தனையோ இருக்கின்றன. அதனால் விடுமுறை காலத்திலாவது தாயகத்தில் அனைவரும் ஒன்று கூடலாம்தானே என்ற யோசனை உதித்தமையால்தான் இலங்கையைத் தெரிவுசெய்தோம். போர் முடிந்த பின்னர் இலட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் தனிப்பட்ட முறையில் இலங்கைக்குச் சென்று திரும்பியிருக்கின்றனர். அத்துடன் பல தமிழகப் படைப்பாளிகள், கலைஞர்கள் மட்டுமன்றி புகலிடத் தமிழ் எழுத்தாளர்களும் தனிப்பட்ட பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு சென்று திரும்பக்கூடிய சூழ்நிலை இருக்கும்போது எமது ஒன்றுகூடலிலும் அவர்களால் கலந்துகொள்ள முடியும்தானே என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது. உதாரணமாக தமிழகத்திலிருந்து பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ் உட்பட பல எழுத்தாளர்கள் அண்மையில் இலங்கைக்குச் சென்று திரும்பியுள்ளனர். அங்கு தமிழ் ஊடகங்களில் தமது நேர்காணல்களைப் பதிவு செய்துள்ளனர். இதற்கு எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லை. அதுபோன்று கலை, இலக்கிய, ஊடகக் குடும்

கருத்துகள் இல்லை: