புதன், 10 நவம்பர், 2010

தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

தலித் மக்கள் மீது சாதி வெறியர்களின் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விழுப்புரம் அருகே அனாங்கூர் கிராமத்தில் தீபாவளியன்று சாதி வெறியர்கள் தலித் மக்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். குடிபோதையில் சேரிக்குள் புகுந்த சாதி வெறிபிடித்த சமூக விரோதிகள் உருட்டுக்கட்டை, வீச்சரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் கண்ணில்பட்டவர்களையெல்லாம் தாக்கியுள்ளனர்.

குடிசைகளுக்குள் புகுந்து தட்டு முட்டுச் சாமான்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் 14 வயது தலித் பள்ளி மாணவன் அய்யனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். மேலும் பலர் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதைப் போலவே அதே மாவட்டத்தில் சொர்ணாவூர் கிராமத்தில் சொல்வழகன் என்ற தலித் இளைஞனை குடிபோதையிலிருந்த சாதிவெறியர்கள் கழிஞ்சிக்குப்பம் என்னுமிடத்தில் வழிமறித்துத் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். அத்தாக்குதலில் தலித் இளைஞர்கள் பலர் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான கிராமங்களில் சாதிவெறியர்களால் தலித் மக்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பரவலாக இத்தகைய சாதிவெறித் தாக்குதல் நடந்துள்ளது.

சென்னை, அசோக் நகர் பகுதியிலும் குடிபோதையில் இருந்த சாதிவெறியர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கொடியைப் பார்த்துவிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகளை உருட்டுக்கட்டைகளால் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவங்களில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வலியுறுத்தியும், சேரிப் பகுதிகளை ஒட்டியுள்ள அரசு மதுபானக் கடைகளை அப்புறப்படுத்த வலியுறுத்தியும் வரும் 11.11.2010 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: