வன்னியில் இறுதிக்கட்டப் போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்புக்கு அஞ்சி திருமணம் செய்துகொண்டவர்களிடையே இப்போது பிரச்சினைகள் தோன்றி அதிகளவு விவாகரத்துக்கள் நடைபெறுகின்றன.
இறுதிக்கட்டப் போர்க் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் போராட்டத்தில் இணைந்துகொள்ளவேண்டும் என்று விடுதலைப் புலிகள் இளைஞர், யுவதியரை கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்தனர்.
திருமணம் செய்த இளையோருக்கு இதில் விதிவிலக்களிக்கப்பட்டதால், கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக ஏராளமான இளைஞர், யுவதியர் அந்தக் காலப்பகுதியில் திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.
தமது பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக பெற்றோரே முன்வந்து சுமார் 15-16 வயதுகளுடைய இளைஞர், யுவதியரை திருமணம் செய்து வைத்தனர்.
திருமண வயதை எட்டாத நிலையில், நிர்ப்பந்தம் காரணமாக அப்போது திருமணம் செய்துகொண்ட இந்த இளையோரிடையே இப்போது பல்வேறுபட்ட பிரச்சினைகள் தோன்றி வருகின்றன. இது, விவாகரத்து வரையில் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
“திருமணம் செய்தவர்களை இயக்கத்தில் சேர்க்கமாட்டினம் எண்டு எங்கடை பிள்ளைகளின்ரை படிப்பையும் நிப்பாட்டிக் கலியாணம் கட்டிவைச்சம். இப்ப அவங்கடை வாழ்க்கையே கேள்விக்குறியாகீட்டுது” என்று வேதனையுடன் கூறினார், கிளிநொச்சி இராமநாதபுரத்தைச் சேர்ந்த விதவைத் தாயொருவர்.
“எனக்கு மூன்று பெண்கள். மூத்த மகளுக்கு 19 வயது. ஓ.எல். படிச்சுக்கொண்டிருகேக்கையே அவசரமாக்  கலியாணம் கட்டிவைச்சன். இப்ப மகளின்ர கணவர் லண்டனுக்குப் போகப் போறன், அம்மா அங்க நல்ல சீதனத்தோட பொம்பிளை பாத்திருக்கிறா எண்டு சொல்லிறார்” என்று வேதனையுடன் கூறிய அந்தத் தாய்,
“எழுத்தும் எழுதேல்லத்தானே. உங்கட பிள்ளையைக் கூட்டிக்கொண்டு போங்கோ எண்டு ஒரேயடியாச் சொல்லிப்போட்டார்” என்று மனம் பொறுமினார்.
“உயிர்தான் முக்கியம். காசு பெரிசில்லை” என்று கூறித் திருமணம் செய்துவைத்த ஆண் பிள்ளைகளின் பெற்றோரும், இப்போது சீதனம் கேட்டுத் துன்புறுத்துவதாக பல பெண் பிள்ளைகளின் குடும்பத்தினர் வேதனையுடன் கூறுகின்றனர்.
கணவனை இழந்தோர்
இறுதிப் போர்க் காலத்தில் இவ்வாறு திருமணம் செய்துவைக்கப்பட்ட சில இளைஞர்கள் இறந்து விட்டதால், பல இளம் பெண்கள் தனித்து விடப்பட்டுள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
திருமணம் செய்த மிகச் சொற்ப காலத்திலேயே தமது கணவன்மாரை இழந்துவிட்ட இந்தப் பெண்களில் சிலர் குழுந்தைகளுடன் வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் திண்டாடுகின்றனர். விடலைப் பருவத்தைச் சேர்ந்த இந்தப் பெண்கள் பல சமூகச் சீர்கேடுகளுக்கும் உள்ளாவதாகவும் தெரியவருகிறது.
போர் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு மக்கள் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகக் கூறப்பட்டாலும், போர்க் காலத்தில் கட்டாய ஆட்சேர்ப்புக்கு அஞ்சித் திருமணம் செய்துகொண்ட இந்த இளையோரின் பிரச்சினைகள் முடிவின்றித் தொடர்ந்து வருவதாக வன்னிப் பகுதியில் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர் வேதனையுடன் கூறினார்.