சனி, 13 நவம்பர், 2010

மதுக்கடைகளை அகற்ற வேண்டும்: திருமாவளவன்


தீவிர மது விலக்கை கொண்டு வரவேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முனைப்போடு உள்ளது. குடிசை பகுதிகளில் மதுக்கடைகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. எனவே குடிசைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என, திருமாவளவன் கூறியுள்ளார்.

தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், தீபாவளி அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் தலித் மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் ஆனந்தூர் அய்யனார் என்ற வாலிபர் ஜாதி வெறி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். பிரணபுரியில் சொல்வழகன் கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 26 இடங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 7 இடங்களிலும் அப்பாவி தலித்துகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பண்ருட்டி அருகே காட்டுபுலியூரில் கடந்த 6 மாதமாக தொடர் தாக்குதலுக்கு அப்பகுதி மக்கள் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

குடிசைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தீபாவளி பண்டிகை தினத்தில் மதுரை அருகே 50 குடிசைகள் சூறையாடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தலித் மக்கள் மீது ஜாதி வெறி கும்பல்கள் இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கருத்துகள் இல்லை: