டெல்லி: இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்காக முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் நான் பேசியது உண்மைதான். இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைக் கட்டணமாக ரூ. 60 கோடி பெற்றேன் என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் நீரா ராடியா ஒப்புக் கொண்டுள்ளாராம்.
கடந்த புதன்கிழமை நீரா ராடியாவை அழைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தியது அமலாக்கப் பிரிவு. அப்போது அவருக்கும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகள், பண பரிவர்த்தனைகள், ராஜாவுடன் ராடியாவுக்கு உள்ள தொடர்புகள் குறித்து அப்போது அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, டாடா டெலிசர்வீஸஸ் நிறுவனம் உள்பட 2 நிறுவனங்களுக்காக தான் அமைச்சர் ராஜாவுடன் பேசியதாக நீரா ராடியா தெரிவித்தார். மேலும் இரு வாடிக்கையாளர்களிடமிருந்து (தொலைத் தொடர்பு நிறுவனங்கள்) சட்டப்பூர்வமான ஆலோசனைக் கட்டணமாக ரூ. 60 கோடியைப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராஜாவுக்கும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கும், தனக்கும் இடையிலான தொடர்புகளையும் அவர் விளக்கிக் கூறியுள்ளார்.
வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் நீரா. இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளவர் இவர். விசாரணையின்போது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனது பங்கு குறித்து தனது கைப்பட எழுதிய 20 பக்க வாக்குமூலத்தையும் நீரா அதிகாரிகளிடம் கொடுத்தார்.
இதை பண மோசடிச் சட்டம் 50வது பிரிவின் கீழ் அதிகாரிகள் பதிவு செய்து கொண்டுள்ளனர். இதை கோர்ட்டில் சாட்சியமாகவும் தாக்கல் செய்ய அமலாக்கப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி மண்டல அமலாக்ப் பிரிவு துணை இயக்குநர் பிரபா காந்த் கூறுகையில், ராடியாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளோம். மேலும் சில ஆவணங்களைக் கேட்டுள்ளோம். தேவைப்படும்போது அவர் மீண்டும் அழைக்கப்படுவார் என்றார்.
இதற்கிடையே, தனது வாடிக்கையாளர்களான டாடா டெலிசர்வீஸஸ் மற்றும் யுனிடெக் வயர்லஸ் நிறுவனங்களுக்காக ராஜாவை, ராடியா நேரிலும் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக