லண்டன், நவ.7 (டிஎன்எஸ்) விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு பிரிவினர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறி வெளிநாடுகளில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் பிரபாகரன் தப்பி விட்டதாக ஒரு தரப்பினர் கூறி வந்தனர். இந்நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு பிரிவினர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறி வெளிநாடுகளில் பிரசாரம் செய்து வருகின்றனர். இலங்கையில் விடுதலைப்புலிகள் போரில் தோற்று விட்டாலும் வெளிநாடுகளில் செயல்பட்டு வந்த அந்த அமைப்பு இன்னும் அப்படியே உள்ளது. ஆனால் அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டு சில பிரிவுகளாக செயல்படுகின்றனர்.
இதில் ஒரு பிரிவு நெடியவன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இவர் நார்வே நாட்டில் இருந்து அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பினர் இப்போது விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விடுதலைப்புலிகள் தீவிரமாக செயல்பட்டு வந்த போது வெளிநாடுகளில் வசித்து வந்த இலங்கை தமிழர்கள் தானாக முன் வந்து ஏராமாளமாக நிதி கொடுத்தார்கள்.
விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு நிதி திரட்டுவது நின்று போனது. இப்போது மீண்டும் நிதி திரட்டும் பணி தொடங்கி உள்ளது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என கூறி இலங்கை தமிழரிடம் நிதி கேட்கின்றனர். நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நெடியவன் பேசும் போது இறுதி கட்ட போரில் பிரபாகரன் 2 ஆயிரம் வீரர்களுடன் படகில் தப்பி விட்டார். தற்போது அவர் வெளிநாட்டில் ரகசிய இடத்தில் 12 ஆயிரம் விடு தலைப்புலிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார் என்று கூறினார்.
ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்வதை சிலர் நம்ப மறுக்கின்றனர். எனவே முன்பு போல அதிக அளவில் நிதி திரளவில்லை. ஏற்கனவே இலங்கை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டப்பட்டது. ஆனால் அந்த உதவி சரியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையவில்லை. இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நெடியவன் எதையும் செய்யவில்லை என்று ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக