செவ்வாய், 30 நவம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் 119 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படுமா?


செல்போன் சேவை அளிக்க வகை செய்யும் `2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து, இதுபற்றி மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், `2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
`2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான லைசென்சு பெற்ற நிறுவனங்களில் சில, அந்த லைசென்சை கூடுதல் தொகைக்கு வேறு நிறுவனங்களுக்கு விற்று லாபம் சம்பாதித்தாகவும் தெரிய வந்துள்ளது. 
தகுதியற்ற பல நிறுவனங்கள் லைசென்சு பெற்றதாகவும் விசாரணையில் கண்டு அறியப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வருவாய் இழப்பை ஈடுகட்ட, குறைவான தொகைக்கு லைசென்சு பெற்ற சில நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் தொகையை கேட்டு பெறுவது பற்றியும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், ``உண்மையை மறைத்த குற்றத்துக்காக உங்களுக்கு வழங்கப்பட்ட லைசென்சை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' என்று கேட்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற 119 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீசு அனுப்ப இருக்கிறது.
இந்த தகவலை தெரிவித்த தொலைத் தொடர்புதுறை மந்திரி கபில் சிபல், இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க அந்த நிறுவனங்களுக்கு 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்றும் கூறினார். ஆனால் அந்த நிறுவனங்களின் பெயர்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.
இந்த 119 நிறுவனங்களில் 81 நிறுவனங்கள் தகுதியற்ற மற்றும் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிறுவனங்கள் என்ற பட்டியலில் வருவதாகவும், 38 நிறுவனங்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்யா நிறுவனங்கள் பட்டியலில் வருவதாகவும் கபில் சிபல் தெரிவித்தார்.

சில கம்பெனிகள் உண்மைகளை மறைத்து லைசென்சு பெற்று இருப்பதாக கருதுவதாகவும், தவறு செய்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அந்த நிறுவனங்களிடம் இருந்து வரும் பதில்களை ஆய்வு செய்த பிறகு, அவற்றுக்கு வழங்கப்பட்ட லைசென்சை ரத்து செய்வதா? அல்லது அபராதம் விதிப்பதா? என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: