வியாழன், 27 ஜூன், 2019

மக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு

/tamil.indianexpress.com : தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு (2018) மே மாதம் 22 -ந் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. மேலும் ஆலைக்கு வழங்கிய குடிநீர் இணைப்பு, மின் இணைப்பையும் துண்டித்தது.
ஆலையை முடிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஆலையை மூடி முத்திரையிட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உத்தரவு என்பது தவறானது எனவும் ஆலையால் மாசு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக எந்தவிதமான ஆதாரபூர்வமான தகவல்களும் அரசிடம் இல்லை.


தங்கள் நிறுவனத்திற்கு எதிராக அரசு தரப்பில் கூறும் குற்றச்சாட்டுக்கள் என்பது முற்றிலும் தவறானது எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுவதாகவும் ஆலைக்கு அனுமதி அளித்த போது விதிக்கப்பட்ட விதிமுறைகளை ஆலை நிர்வாகம் கடைபிடித்து வருவதாகவும். தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையை மூடுவதற்கு உத்தரவிடுவதற்கு முன்னர் தங்கள் தரப்பில் எந்த விளக்கமும் அரசு பெறவில்லை ஒருதலை பட்சமாக அரசு செயல்பட்டுள்ளது. எனவே ஆலையை மூடி சீல் வைத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சட்ட விரோதமானது எனவும் அதனை ரத்து செய்ய வேண்டும். ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் இடைக் காலமாக ஆலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் அதற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே. ஆலை மாசு காரணமாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் வந்துள்ளது. மாசு காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் உயிரினங்கள் உட்கொள்ள உகந்ததற்றதாக ஆகிவிட்டது. ஆலை மூடிய பின்னர் நிலத்தடி நீரின் தரம் மேம்பட்டு, காற்று மாசு குறைந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் தூத்துக்குடியில் மாசு குறைந்துள்ளது.1994ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை அனுமதிக்க கோரிய போது, கொள்கை அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல், காற்று, தண்ணீர் மாசு அடையும் வகையில் ஆலைக்குள் கழிவுகளை தேக்கி வைத்ததால் 2013ஆம் ஆண்டு விஷ வாயு கசிவு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஏற்படுத்திய மாசுவை அரசோ, நீதிமன்றமோ கண்மூடி வேடிக்கை பார்க்க கூடாது. எனவே நிரந்தரமாக ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டு இருந்தது. இதனையடுத்து உத்தரவிட்டிருந்த நீதிபதிகள், தமிழக அரசின் பதில் மனு குறித்து ஸ்டெர்லைட் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் பிரதான வழக்கில் இறுதி விசாரணை ஜூன் 27 ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் தரப்பில் செய்த பதில் மனுவுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் விளக்கமளித்து விளக்க பதில் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும், கடந்த 2011 ஆம் ஆண்டு நீரி எனும் தேசிய சுற்றுசுழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், நடத்திய ஆய்வில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசுழல் பாதிப்பு இல்லை என அறிக்கை அளித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச உருக்காலைகளுக்கு இணையாக தூத்துக்குடி நகரின் சுற்றுசுழல் மேம்பாட்டுக்கு 500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் ஆலையை இயக்குவதற்கான ஒப்புதலை புதுப்பித்த தமிழக அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் நெருக்கடிக்கு பணிந்து 2018-19 ஆம் ஆண்டிற்கான ஆலையை இயக்குவதற்கான ஒப்புதலை வழங்க மறுத்து ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க 1.55 லட்சம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எந்த ஆவண, ஆதாரங்களும் இல்லாமல் கொள்கை முடிவென கூறி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது வருத்தமளிக்கும் வைகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆலையை மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும், ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடந்தாண்டு மே-22 ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சுடு சம்பவத்திற்கு பிறகு, மக்களை சமாதானப்படுத்துவதற்கா ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியில் இருந்து 35 கிராமங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு காற்று மற்றும் தண்ணீர் மாசு குறைந்துள்ளதாக கூற எந்த ஆதாரம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள் நோக்கம் கற்பிக்கும் வகையில் சிப்காட்டில் உள்ள மற்ற தொழிற்சாலைகள் தூத்துக்குடி மாசுக்கு காரணமல்ல என மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது தவறானது என அந்த விளக்க பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது

கருத்துகள் இல்லை: