திங்கள், 2 அக்டோபர், 2017

பார்பனீயத்தை உலககெங்கும் பரப்பும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ..


Selvendhrian denmark :இலங்கை தமிழரிடையே பகுத்தறிவு சுயமரியாதை கருத்துக்கள் திராவிட கருத்துக்கள் மிகவும் செல்வாக்கு இழந்து காணப்படுகிறது.
ஐம்பதுகளில் இருந்த முற்போக்கு நிலைமைகள் இன்று காணமல் போய்விட்டது. படுவேகமாக பார்ப்பனீயத்தின் வேர்கள் ஆழமாக வேருன்றுவது போல தோன்றுகிறது
இன்றைய யாழ்மையவாதம் என்று கூறப்படும் கருத்து உண்மையில் பார்ப்பனீயத்தின் மறுவடிவம்தான்.
பார்ப்பனர்களின் ஆதிக்கம் இலங்கையில் ஒருபோதும் மேலோங்கி இருந்ததில்லை.  ஆனால் யாழ்மையவாதம் எனப்படுவது பார்பனீயத்தின் இலங்கை வெர்ஷன் என்றுதான் கூறவேண்டும் .
இலங்கை தமிழர் பகுதிகளில் கண்ணுக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் எதாவது ஒரு கோவில் இருந்தே தீரும் இந்த கோவில் கலாச்சாரத்தை ஒட்டியே அங்குள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் தங்கள் கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டுள்ளன. அங்கு இந்துக்கள் மட்டும் அல்லாது கிறிஸ்தவர்களும் ஜாதியை பேணுவதில் தங்கள் பங்கை முன்னிறுத்தியே வந்துள்ளார்கள்.
யாழ்ப்பாண கலாச்சாரத்தை கந்தபுராண கலாசாரம் என்று சமுகத்தின் மேல் தட்டு மக்கள் ( Jaffna Elites ) எப்பொழுதும் பெருமையோடு கூறுவர்.
இந்த யாழ் / கந்த புராண கலாசாரம் என்ற சொற்களில் குறிப்பிடப்படுவது உண்மையில் ஒரு ஜாதி கட்டமைப்பை இறுக்கமாக வைத்திருக்கும் தந்திரம்தான்
மிகவும் அதிகமாக முருகன் ஆலயங்கள் உள்ளன. இவை சரித்திர ரீதியாக எல்லா ஜாதினராலும் பூசிக்கப்பட்டு வந்தன .
ஆனால் தற்போது இக்கோவில்கள் எல்லாம் மிக வேகமாக வைதீக ஆகம முறைகளுக்கு மாறிக்கொண்டு இருக்கின்றன.

பெரும்பாலான கோவில்களில் இந்திய பார்ப்பனர்களின் பூசை ஆரம்பமானது சுமார் நூறு வருடங்களுக்கு முன்பிருந்துதான். ஆறுமுக நாவலரின் கைக்கரியம். அவர் விதைத்த ஜாதி விதை கந்தபுராண கலாசாரம் போன்ற பித்தலாட்ட கோட்பாடுகள் இலங்கை தமிழர்களை ஒரு ஜாதியை பற்றிகொண்டு இருக்கும் மக்கள் கூட்டமாக மாற்றிவிட்டது.
அவரின் சிறுவர் கல்வி புத்தகங்கள் வரிக்கு வரி உயர்குடி இந்து வெள்ளாள பரம்பரை என்ற சொற் பிரயோகங்கள் நிறைந்து காணப்படும்.
காலஞ்சென்ற ஸ்ரீமா பண்டாரநாயகா  அம்மையாரின் புண்ணியத்தில்தான் அப்புத்தகங்கள் பள்ளிகளை விட்டு அகன்றன. இருந்தாலும் அவற்றின் தாக்கம்தான் இன்னும் இருக்கிறது.  
இந்த யாழ் தமிழர்கள் புலம்பெயர் நாடுகளிளுக்கும் தங்கள் பார்ப்பனீய யாழ்மையவாதத்தை கொண்டு செல்கின்றனர்.
யாழ்ப்பாண கோவில்கள் இல்லாத ஐரோப்பிய அமெரிக்க ஆஸ்திரேலியா நகரங்களே இல்லை என்ற நிலை உருவாக்கி விட்டது.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் , ஏறக்குறைய அத்தனை புலம்பெயர் கோவில்களும் புலிகளின் முகாம்கள் அல்லது ஆதரவு தளமாக பயன்பட்டவையே.
இளைய தலைமுறைக்கு தமிழரின் அடையாளம் இருத்தல் வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்குவதாக கருத்தப்படும் இக்கோவில்கள் பார்ப்பனீயத்தை பாதுகாப்பதுவும் அதன் மூலம் மக்கள் பணத்தை சுரண்டும் கருமத்தையும் செய்கின்றன.
பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் திராவிட கருத்துக்களை வெறுக்கிறார்களோ அவர்களுக்கு சற்றும் குறையாத அளவு இந்த நியோ பார்ப்பனர்கள் அதாவது புலம்பெயர் யாழ்மையவாதிகள் திராவிட பகுத்தறிவு சுயமரியாதை கருத்துக்களை வெறுக்கின்றனர்.
காரணம் மிகவும் எளிது.  கந்தபுராண கலாச்சாரம் என்று கூறிகொள்ளும் யாழ்மையவாதம் தனது ஜாதிய கட்டுமானங்கள் அழிந்து போவதை ஏற்றுகொள்ளும் மனோ நிலையில் இல்லை. எப்படியாவது ஜாதிகள் கலப்பதை தடுக்கவேண்டும் எதிர்காலத்தில் அது நிலைக்கவேண்டும் என்ற வேலைத்திட்டம்தான் கோவில் கட்டுவது.
இதே நோக்கத்திற்காகவும் இவர்கள் செய்யும் மற்றொரு வேலைத்திட்டம் ஊர் சங்கங்கள் அமைப்பது , இதுவும் கூட புலிகளால் ஊக்கப்படுத்தப்பட்டதுதான் . அவர்கள் தங்கள் வசூல் வேட்டைக்கும் மக்களை வேவு பார்க்கும் நோக்கத்திற்கும் இவற்றை ஆதரித்தார்கள்.
புலிகள் காட்சிக்கு அப்பாற்பட்டுவிட்ட இன்றைய சூழ்நிலையில் வெறும் குடும்ப ஜாதி கட்டு மானங்களை காப்பதற்கு இவை பயன்படும் என்று நம்புகின்றனர்.
இந்த யாழ்மையவாதிகளின் காசில் அரசியல் பார்க்கும் தமிழக பிரமுகர்களும் சில ஊடகங்களும் அவர்களின் வேலைத்திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் உருவாகும் திராவிட பகுத்தறிவு சுயமரியாதை கருத்துக்கள் ஈழத்தமிழரை எட்டி விடக்கூடாது என்பதுதான் அவர்களின் ஒரே அஜெண்டா.
வைகோ சீமான் நெடுமா தமிழருவி போன்றவர்களை விட விகடன் குழுமம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

திராவிட அமைப்புக்களை கட்சிகளை புலிகள் பயன்படுத்தினார்கள் ஆனால் அவர்களுக்கு ஒருபோதும் நன்றி உடையவர்களாக புலிகள் இருக்கவில்லை,  மாறாக தமிழ் தேசியம் மட்டும் பேசும் தமிழக அரசியல்வாதிகளையும் புரோக்கர்களையுமே புலிகள்  பணம் கொடுத்து வளர்த்து விட்டார்கள்.
இந்த புலிகளின் அல்லது புலம்பெயர் புலி விசுவாசிகள் எல்லோரும் திராவிட  பகுத்தறிவு சுயமரியாதை கருத்துக்களை அடியோடு வெறுத்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காலை வாரினார்கள் . திமுகவை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்தி விட்டு திமுகவுக்கு எதிராக வைகோ போன்ற புரோக்கர்களை வளர்த்து ஜெயலலிதாவுக்கு பெரிதும் உதவி செய்தனர்.  கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பது போல் ஜெயலலிதாவை புலிகளுக்கு பிடித்து போனதில் வியப்பில்லை,  இரு சக்திகளும் பார்ப்பனீய ஆதரவாளர்கள்தான்

ஜெயலலிதா பதவிக்கு வரும்போதெல்லாம் ஈழத்தமிழர்க்கு எதிரான கருத்துக்களை அள்ளி வீசுவார். தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு மேல்படிப்புக்கு கலைஞர் அரசு கொடுத்த சீட்டுகளையும் தட்டி பறித்தார் தன்னால் முடிந்த மட்டும் நெருக்கடியே கொடுத்தார் .
ஆனாலும் அகதி முகாம் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும்  எப்போதும் அதிமுகவையே ஆதரிப்பார்கள் .
புலம்பெயர் யாழ்மையவாதிகளின் வேலை திட்டம் மிக திறமையான தமிழக ஏஜெண்டுகள் மூலம் அதை செய்திருந்தார்கள் ..
இதில் அவர்கள் கூறும் காரணம் மிகவும் வேதனையானது ..
அதிமுக எங்களை வெளிப்படையாக ஆதரிக்காவிட்டாலும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாம் காசு கொடுத்து பல விடயங்களை செய்துவிடலாம் என்றார்கள்.
அகதி முகாம்களில் இருப்பவர்கள் பலரும் வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் மூலம் ஏதாவது ஒரு  வெளிநாட்டுக்கு சென்றுவிடலாம் எனற நம்பிக்கையில் இருப்பவர்கள் ..
அதிமுக ஆட்சி இருக்கும் போதெல்லாம் அரசின் பல மட்டங்களிலும் லஞ்சத்தின் மூலம் பல வேலைகள் சுலபமாக நடக்கும் என்று வெள்ளந்தியாக கூறுகிறார்கள்.   
இழப்பதற்கு ஏதுமற்ற இந்த அகதி முகாம் மக்களும் கூட புலம்பெயர் யாழ்மையவாத தாலிபான்களால் ஏமாற்ற படுபவர்கள்தான்  ...செல்வேந்திரன் டென்மார்க்

கருத்துகள் இல்லை: