நியூயார்க்: "காமன்வெல்த் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்காக பல கோடி ரூபாயை செலவழிப்பதற்கு பதிலாக, நாட்டில் வறுமையில் வாடும் மக்களின் மேம்பாட்டுக்கு அரசு செலவழிக்கலாம்' என, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான மணிசங்கர் அய்யர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் துவங்குவதற்கு முன்பாகவே, அதைப் பற்றி கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். தற்போது அவர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, காமன்வெல்த் போட்டிகள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், போட்டி ஏற்பாடுகள் குறித்து, மீண்டும் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டி:காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவு செய்துள்ளது. இவ்வளவு பணம் செலவழித்தும், அரசுக்கு கெட்ட பெயர் தான் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற போட்டிகளுக்காக செலவழிப்பதற்கு பதில், வறுமையில் வாடும் மக்களின் மேம்பாட்டுக்காக அந்த பணத்தை செலவழிக்கலாம்.விளையாட்டுப் போட்டிகள் நடந்த மைதானங்கள் காலியாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காலியாக இருந்த மைதானங்களில், காமன்வெல்த் போட்டிகளுக்காக பணியாற்றிய தொழிலாளர்களின் குழந்தைகளை அமர வைத்திருக்கலாமே.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாட்டில் இருந்த குறைகளால், நாட்டின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 63 ஆண்டுகளில், இதுபோல் வேறு எந்த நிகழ்ச்சியிலும் நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது இல்லை.போட்டிகளுக்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும் அதனால் பயன் கிடைக்கவில்லை. மாறாக கெட்ட பெயர் தான் ஏற்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாடாக இருப்பதை விட, விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நாடாக இருப்பது தான் நல்லது.நம் நாட்டில் 95 சதவீத இளைஞர்களுக்கு, முறையான விளையாட்டு வசதி கிடைப்பது இல்லை. சீனாவில் உள்ள இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் விளையாட்டுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகின்றன. அவர்கள் முதலில் விளையாட்டு வீரர்களை உருவாக்கினர். அதன்பின் தான், விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர்.இவ்வாறு மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக