Kalaimathi - /tamil.filmibeat.com: சென்னை: நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காலை நடந்தது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி, விஜய், அஜித், கார்த்தி, தனுஷ், என டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் விவேக்
தன்னுடைய கருத்து நிறைந்த நகைச்சுவைக் காட்சிகளுக்காக, சின்னக் கலைவாணர் என்றும் அழைக்கப்படுகிறார் நடிகர் விவேக். சினிமாவில் சமுதாய அக்கறை சார்ந்த நகைச்சுவை காட்சிகளுக்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்
திரைத்துறையில் அவருடைய சாதனையை பாராட்டி மத்திய அரசு, நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. மரம் நடும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். 59 வயதான நடிகர் விவேக் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கின் இதயம் மற்றும் நுரையீரல் இயக்கத்தை சீர் செய்யும் வகையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் காலையில் வீட்டில் இருந்தபோது நடிகர் விவேக்கிற்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று தான் நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பதால் இன்று காலை உடல் சோர்வாய் இருந்துள்ளது.
அதோடு சிறிது காய்ச்சலும் இருந்துள்ளது. இதனால் வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் விவேக் இன்று உடற்பயிற்சி மேற்கொள்ளவில்லை என தெரிகிறது. மேலும் தான் இருக்கும் தெருவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் விவேக் இன்று நடை பயிற்சியும் மேற்கொள்ளவில்லை.
உடல் சோர்வுடன் இருந்த விவேக் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விவேக்கின் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நடிகர் விவேக்கிற்கு தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விவேக் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக