வியாழன், 15 ஏப்ரல், 2021

திருமாவளவனின் அத்தனை முயற்சிகளையும் எள்ளி நகையாடும் மாரிசெல்வராஜின் கர்ணன் 95

Vallaththarasu Ramasamy: : கர்ணன் (2021) வன்முறைப் படம் இல்லை என்கிறார்கள். எனில் அதில் காட்டப்படும் கொலை மற்றும் அடிதடி யாருக்கான செய்தி?
1) தலித்களுக்கா? 2) ஆதிக்க சாதியினருக்கா? 3) காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரத்துக்கா? இதில் யாருக்கானது என்றாலும் அது ஓர் அர்த்தமற்ற, உணர்ச்சிவசப்பட்ட செய்தி மட்டுமே. ஒரு வகையில் ஆபத்தான செய்தியும் கூட.
நிஜத்தில் ஒரு காவல்துறை உயரதிகாரியை (ஆதிக்க சாதிக்காரன்) கர்ணன் மாதிரி ஒரு தலித் இந்தப் படத்தில் காட்டியது போல் கழுத்தறுத்துக் கொன்றிருந்தால் அந்த மொத்த கிராமத்தையும் அழித்திருப்பார்கள். கர்ணனையும் கொன்றிருப்பார்கள். அதுதான் இந்தக் கேடுகெட்ட சாதி வெறி சமூகத்தின் நிதர்சனம். அதிகாரம், பணம், ஆள் பலம் இந்த மூன்றுமே ஆதிக்க சாதிகளின் கையில் குவிந்து கிடக்கும் போது வேறென்ன நடக்கும்?
ஆனால் படத்தில் பத்தாண்டுகள் கழித்து நாயகன் விடுதலையாகி வருகிறாராம், அங்கே ஊரில் பேருந்து ஓடுகிறதாம். ஆக, கத்தி எடுத்தால்தான் வேலை நடக்கும் என தலித் இளைஞர்களைக் கொம்பு சீவி விடும் செய்திதானே இதில் விடுக்கப்படுகிறது?
அம்பேத்கர் ஏன் ஆயுதம் ஏந்தவில்லை? அவருக்கு இல்லாத மஹர் செல்வாக்கா? இத்தனைக்கும் ராணுவத்தில் பணிபுரிந்த பரம்பரையில் வந்தவர்கள் அவர்கள்.  


திருமாவளவன் 'அமைப்பாய்த் திரள்வோம்' எனக் கால் நூற்றாண்டு காலமாய் அத்தனை சிரமங்களுடன் தலித்களை முன்னேற்றப் பாதையில் நடக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஒரு நொடியில் அதை காலா, கபாலி, அசுரன், கர்ணன் என உடைத்து எறிகிறார்கள். எந்தச் சமூகப் பொறுப்புமின்றி அதைக் கொண்டாட இங்கே நூறு பேர்.
"தூக்குப் போட்டு சாவதற்குப் பதில் சண்டைப் போட்டுச் சாகட்டும்" என்று இதன் இன்னொரு வடிவத்தை மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்திலேயே கோடி காட்டி விட்டார்.
நாங்கள் சாவதற்கு வழி கேட்கவில்லை, மிஸ்டர் மாரி செல்வராஜ். வாழ வேண்டும்.
- வல்லத்தரசு

கருத்துகள் இல்லை: