புதன், 14 ஏப்ரல், 2021

ஸ்டாலினுக்கு எதிரான கொளத்தூர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் சைதை மனு பின்னணி!

ஸ்டாலினுக்கு எதிரான கொளத்தூர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் சைதை மனு பின்னணி!

 minnambalm :திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான கொளத்தூர் தேர்தல் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தூசு தட்டியிருக்கிறார் தற்போதைய சைதாப்பேடை அதிமுக வேட்பாளரான சைதை துரைசாமி.

ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிந்து மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், 2011ஆம் ஆண்டு ஸ்டாலினுக்கு எதிரான கொளத்தூர் தேர்தல் வழக்கில்தான் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார் சைதை துரைசாமி.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2011ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார் சைதை துரைசாமி. தேர்தலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

ஸ்டாலின் பெற்ற வெற்றி அதிகார துஷ்பிரயோகம் செய்து பெறப்பட்டது என்று கூறி சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். சுமார் ஆறு ஆண்டுகள் நடந்த அந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டாலினுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

2017இல் இந்தத் தீர்ப்பு வரும்போது ஸ்டாலின் மீண்டும் 2016 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூரில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிபெற்றார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் எந்த அசைவும் இல்லாமல் அப்படியே இருந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இதை பாஜக மோப்பம் பிடித்து, ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கைத் துரிதப்படுத்துமாறு மூன்றாவது நபர் ஒருவர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கச் செய்தது. சம்பந்தப்பட்டவர்தானே வலியுறுத்த வேண்டும் என்ற கேள்வி அப்போதே எழுந்ததன் அடிப்படையில்தான்...

இப்போது ஏப்ரல் 13ஆம் தேதி, ‘மென்ஷனிங் அப்ளிகேஷன்’ என்ற வகையில் சைதை துரைசாமி தரப்பில் ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரிக்க தேவையான முகாந்திரங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டி, வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் இந்த வழக்கை விரைவாக விசாரிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக வழக்கறிஞர்கள் தரப்பில் கேட்டபோது, “திமுக அடுத்து ஆட்சி அமைக்கப் போகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்துகொண்ட பாஜக, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற அவசரக் கோலத்தில் ஸ்டாலினுக்கு எதிராக எந்த வகையிலாவது ஒரு சட்டத் தடையை ஏற்படுத்திவிட முடியுமா என்று பறக்கிறது. ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை மீடியாக்களுக்கு செய்தியே தவிர, வேறு எந்த சட்ட ரீதியான முக்கியத்துவமும் இல்லை” என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: