சனி, 17 ஏப்ரல், 2021

தேர்தல் EVM இயந்திரங்களில் ஹேக் ? ஒட்டு இயந்திரங்கள் மாற்றப்படுகிறது? சென்னை கோயம்புத்தூர் திருவள்ளூர் மர்மங்கள் .. 31 மர்ம ஆசாமிகள் கைவரிசை?

May be an image of text

ஸ்டோரேஜ் அறைகளில் ஒரே மாதிரி நடக்கும் 'மர்ம' சம்பவம்.. ஹேக் செய்ய முயற்சி.. ஸ்டாலின் பகீர் புகார்
Vigneshkumar - tamil.oneindia.com :  சென்னை: மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டோரேஜ் ரூம்களை ஊடுருவ நடக்கும் முயற்சிகளை நிறுத்தக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஐம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்து பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் இது ஜனநாயகத்தைத் தூக்கில் தொங்க விடுவதற்குச் சமம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமைத் தேர்தல் ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார்,

ஸ்டாலின் கடிதம் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6இல் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடியிலும் உள்ள கன்ட்ரோல் யூனிட்ஸ், பேலட் யூனிட்ஸ் ஆகியவை "சுவிட்ச் ஆஃப்" (பேட்டரிகளை எடுக்காமல்- செயலற்ற வடிவில் (Dead Mode) வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்) செய்யப்பட்டு, விவிபிஏடி இயந்திரங்களில் இருந்த பேட்டரிகளும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

பாதுகாப்பு அறை அதன்பிறகு அப்படி சீலிடப்பட்ட கன்ரோல் யூனிட், பேலட் யூனிட். விவிபிஏடி எல்லாம் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு (Strong Room) எடுத்துச் செல்லப்பட்டன. 7.4.2021 அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட அந்தப் பணிகளை எங்கள் முகவர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்தார்கள். இதன்பிறகு கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபிஏடி உள்ள அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. அந்த பாதுகாப்பு அறைகளின் கதவுகளும், ஜன்னல்களும் முழுவதுமாக மூடப்பட்டு - யாரும் உள்ளே நுழையாதவாறு சவுக்கு கட்டைகளால் அடைக்கப்பட்டுள்ளது



தேர்தல் அதிகாரியின் பொறுப்பு தேர்தல் அதிகாரியும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை இருக்கும் வளாகப் பாதுகாப்பினை ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் உள் வட்ட பாதுகாப்பு வளையம் வரை மேற்பார்வையிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. பிரிவு VIII- தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோரின் மேற்பார்வைப்பணி:

பார்வையிட வேண்டும் "தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்பு அறையின் "உள்வட்ட பாதுகாப்பு வளையம்" வரை ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் பார்வையிட்டு, லாக் புக் மற்றும் வீடியோகிராபிகளை ஆய்வு செய்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு- அந்த இடத்தில் உள்ள கள நிலவரம் குறித்து ஒவ்வொரு நாளும் அறிக்கை அனுப்ப வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் "பாதுகாப்பு அறைகள்" இருந்தால்- இதே பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியே செய்ய வேண்டும். மாவட்ட தலைநகருக்கு வெளியே உள்ள பாதுகாப்பு அறைகளை மாவட்டத் தேர்தல் அதிகாரி அடிக்கடி பார்வையிட வேண்டும். குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு நாளுக்கு ஒரு முறையாவது பார்வையிட வேண்டும். காவல்துறை துணை ஆணையர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் தங்கள் மாவட்டத்திற்குள் உள்ள பாதுகாப்பு அறைகளின் கண்காணிப்பிற்கு தனிப்பட்ட முறையில் முழுப் பொறுப்பாகும். பாதுகாப்பு அறையின் காவல் குறித்து அளிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை முழுவதுமாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் அவர்களுடையது" என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

மர்ம சம்பவங்கள் தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட அறிவுரைகள் எல்லாம் இருந்தும், மாநிலம் முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்று நம்பப்படும் பல "பாதுகாப்பு அறை வளாகங்களில்" மேற்கண்ட அறிவுரைகள் எதுவுமே முற்றிலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை..யாருக்கும் தெரியாத வகையில்- இரவு நேரங்களில்- மூடப்பட்ட வாகனங்கள் போன்ற கன்டெய்னர்கள் மர்மமான முறையில்- ஒரே மாதிரியாக-ஆங்காங்கு உள்ள பாதுகாப்பு அறைகள் இருக்கும் பல வளாகங்களுக்கு கொண்டு வரப்பட்ட கீழ்கண்ட சில குறிப்பிட்ட நிகழ்வுகளை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எங்கள் பிரதிநிதிகள் கண்காணித்து- போராட்டங்கள் நடத்திய பிறகு அந்த கண்டெய்னர்கள் போன்ற மூடப்பட்ட வாகனங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ஜிசிடி கல்லூரி வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறை வளாகத்திற்குள்- 13.4.2021 அன்று இரவு மூடப்பட்ட வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதையறிந்த எங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தொண்டர்களுடன் அங்கு சென்று இது குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார்கள். "அது பெண் காவலர்களுக்கான மொபைல் டைலட் வாகனம்" என்று கூறினார்கள். எங்கள் வேட்பாளர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அந்த வாகனம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் பல "ஒய் -பை" கனெக்ஷன்கள் அந்தப் பகுதியில் செயல்பாட்டில் இருந்துள்ளன என்பதையும் எங்கள் வேட்பாளர்கள் கவனித்துள்ளார்கள்.

திருவள்ளூர் திருவள்ளூரில் உள்ள பெருமாள்பட்டு ஸ்ரீ ராம் எஞ்சினியரிங் கல்லூரியில் பத்து சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த கல்லூரி வளாகத்திற்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில்-14.4.2021 அன்று நள்ளிரவு 2 மணியளவில் அதே மாதிரி மூடப்பட்ட வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதை எங்கள் கட்சி வேட்பாளர்கள் கண்டு பிடித்து- அதிகாரிகளிடம் ஆட்சேபணை தெரிவித்த பிறகு, அந்த வாகனம் அங்கிருந்து அகற்றப்பட்டது. அதாவது அந்த மூடப்பட்ட வாகனம் பெண் காவலர்களுக்காக கொண்டு வரப்பட்ட "மொபைல் டாய்லெட்" என்று அங்கும் ஒரே மாதிரியான பதில் சொல்லப்பட்டுள்ளது!

சென்னை லயோலா கல்லூரி சென்னை லயோலா கல்லூரியில் -எங்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரும், தி.மு.க. தலைவருமான திரு மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட பல சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு 100 மீட்டர் தொலைவில், அதே மாதிரி மூடப்பட்ட வாகனம் 15.4.2021 கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தவுடன்- அந்த வாகனம் உடனே அப்புறப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இங்கும் அதே மாதிரி "இந்த வாகனம் பெண் காவலர்களுக்காக கொண்டுவரப்பட்ட மொபைல் டாய்லெட்" என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அங்கு இருந்த பெண் காவலர்களிடம் விசாரித்ததில்- அவர்கள் யாரும் அந்த மொபைல் டாய்லெட்டை பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்கள். லயோலா கல்லூரி வளாகத்தில் அப்படி நிறுத்தப்பட்ட வாகனம் மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு அருகில் பல "ஒய்-பை" கனெக்ஷன்கள் செயல்பாட்டில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனங்களின் போட்டோக்களும், வீடியோ காட்சிகளும் தங்களின் பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளோம்.

மூடப்பட்ட வாகனம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் எல்லாம் போதுமான கழிப்பிட வசதிகள் உள்ள பிரபலக் கல்லூரிகளில்தான் இருக்கின்றன என்பதை தங்களுக்குத் தெரிவிப்பது பொருத்தமானது என்று நினைக்கிறோம். அப்படியிருக்கையில் "இப்படியொரு மூடப்பட்ட வாகனம்" மொபைல் டாய்லெட் எனக் கூறி ஏன் பாதுகாப்பு அறை வளாகங்களுக்குள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை அப்பட்டமாக மீறி கொண்டு வரப்படுகிறது என்பது தெரியவில்லை. தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தும்- இது போன்ற வாகனங்களை அனுமதித்து- தேர்தல் அதிகாரிகளும், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளும் தங்களின் கடமையிலிருந்து வேண்டுமென்றே தவறியிருக்கிறார்கள். மேலே பட்டியலிடப்பட்டுள்ள நிகழ்வுகள்- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருக்கும் பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பையே கேள்விக்குறியதாக்கியிருக்கிறது.

31 பேர் அத்துமீறி நுழைந்தனர் தடை விதிக்கப்பட்ட வாகனங்களை அனுமதியின்றி கொண்டு வந்த மேற்கண்ட நிகழ்வுகள் தவிர, பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அறைகளுக்கு பங்கம் விளைவிக்கும் கீழ்கண்ட அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன. ராமநாதபுரத்தில் உள்ள பாதுகாப்பு அறை வளாகத்திற்குள் மடிக்கணினியுடன் 31 பேர் அத்துமீறி நுழைந்துள்ளார்கள். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நெய்வெலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் "கணிணி நிபுணர்கள்" மூன்று பேருக்கு "தெரிவிக்கப்படாத காரணங்களுக்காக" நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு அந்த கட்டடத்திற்குள் சென்றிருக்கிறார்கள். திருவள்ளூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைக்கு பலர் "கணிணி கற்பிப்பவர்கள்" என்ற பெயரில் "வெளியில் சொல்லப்படாத" காரணங்களுக்காக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஹேக்கிங் முயற்சி மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்துமே மாநிலம் முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள "பாதுகாப்பு அறை" கட்டடங்களின் பாதுகாப்பும் - அந்த வளாரத்தில் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய அனைத்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளும், நடைமுறைகளும் மொத்தமாக தோல்வியடைந்து விட்டன என்பதைக் காட்டுகிறது. மூன்று அடுக்குப் பாதுகாப்புடன் வாக்கு பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மட்டுமின்றி - கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபிஏடி யூனிட் போன்றவற்றையும் தொழில் நுட்ப ரீதியாக- மின்னணுவியல் ரீதியாக பாதுகாப்பது மிகுந்த முக்கியமாகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்பிற்கு எந்த வடிவிலும் சந்தேகம் எழ அனுமதிக்கக் கூடாது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்யவோ, வை-பை அல்லது வேறு எந்த ஒரு வழியையும் பயன்படுத்தி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள பதிவுகளை சிதைக்கவோ, சூழ்ச்சி செய்து திருத்தவோ ஒரு சிறு துளி வாய்ப்பு கூட இருப்பதற்கு கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.

ஜனநாயக கட்டமைப்பே தகர்த்து விடும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சிதைக்கவோ, சூழ்ச்சி செய்து திருத்தவோ முடியாது என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகின்ற நிலையில், அவற்றிற்கு வழி அமைத்துக் கொடுக்கும் வகையில் நடைபெற்றுள்ள மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த முயற்சிகள்- தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வரும் கருத்தின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது. அப்படி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வதும், சூழ்ச்சி செய்து திருத்துவதும் நடைபெற்றால்- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பே தகர்த்து விடும்.

ஜனநாயகத்தில் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை மிக அழகாக வர்ணித்துள்ள சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மேற்கோளே நாங்கள் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். "ஒரு வாக்காளர், வாக்குச் சாவடிக்கு நடந்து சென்று, சிறிய பென்சில் ஒன்றின் மூலம் ஒரு துண்டு காகிதத்தில் ஒரு சிறிய குறியீடு செய்து வாக்களித்து ஜனநாயகத்திற்கு அவர் செலுத்தும் மரியாதையை- அந்த முக்கியத்துவத்தை எந்தவொரு முழக்கங்களும், பரந்து விரிந்த விவாதங்களும் குறைத்து விட முடியாது" என்றார். கொரோனா பெருந்தொற்றுள்ள இந்த சூழலில் இதை, "ஒரு வாக்காளர், வாக்குச் சாவடிக்கு நடந்து சென்று, முகக்கவசம் மற்றும் கையுறையுடன், பொத்தானை அழுத்தி அவர் விரும்பும் வேட்பாளரை தேர்வு செய்ய விரும்பத்தை தெரிவிப்பது" என்று கூறலாம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்வதன் மூலம் இந்த நடைமுறையில் எப்படிப்பட்ட குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பு உருவானாலும்- அது இந்த ஜனநாயகத்தை தூக்கில் தொங்க விடுவதற்கு சமம் ஆகும்

ஜனநாயகத்தின் இதயத் துடிப்பு ஒரு வழக்கில் மாண்பமை உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை தங்களின் மேலான பார்வைக்கு நினைவூட்ட விரும்புகிறோம். "ஜனநாயகமும்" "நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல்" இரண்டும் பிரிக்க முடியாது இரட்டைக் குழந்தைகள். இரண்டும் பிரிக்க முடியாத அளவிற்கு தொப்புள் கொடியால் இணைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புவோரின் துப்பாக்கிக் குண்டு (Bullet) அல்ல - சாதாரண மனிதனின் வாக்குச் சீட்டு தான் (Ballot) ஜனநாயகத்தின் இதயத் துடிப்பு. அந்த சாதாரண மனிதன் வாக்குச்சாவடிக்குச் செல்லும் வழி சுதந்திரமானதாகவும், தடையற்றதாகவும் இருக்க வேண்டும். வாக்காளர் ஒருவர் தனக்குப் பிடித்தவரை தேர்ந்தெடுக்க உள்ள சுதந்திரம்தான் "நேர்மையான மற்றும் சுதந்திரமான" தேர்தலின் அஸ்திவாரம்" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை நினைவுபடுத்துகிறோம். நேர்மையான தேர்தல் என்பது வாக்குப் பதிவுடன் முடிந்து விடுவதில்லை. வாக்கு எண்ணிக்கை முறையாக நிறைவு பெறும் வரையிலும் அது தொடருகிறது. அதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவான ஒவ்வொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய முழுக்கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. அதில் ஏதாவது தோல்வி ஏற்பட்டால் ஜனநாயகம் பாதை தவறி விடும்

நீதிமன்றம் கருத்து  : திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்த ரிட் மனு W.P.No.7698 of 2021-ல் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் கூறிய கீழ்கண்டவற்றை தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்: 24.3.2021 தேதியிட்ட உத்தரவில்: "பாரா.10: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைச்சுற்றி சிசிடிவி கேமிராக்கள் வைக்கப்பட வேண்டும் என்பதற்கு வலுவான காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளதால், எவ்வித குறைபாடுகளுக்கும் ஆட்படாத உறுதியான பாதுகாப்பு ஏற்பாட்டிற்காகவும், பாதுகாப்பு அறைகள் உள்ள பகுதிகளுக்கு வெளியாட்கள் போவதை தடுக்கவும் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறது. 31.3.2021 அன்றைய தீர்ப்பில்: "பாரா 19:....வாக்கு எண்ணும் அறை, வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்திருக்கும் பாதுகாப்பு அறை போன்றவற்றின் அருகில் மின்னணு உபகரணங்களை கொண்டு செல்வதை தேர்தல் ஆணைய விதி முறைகள் மற்றும் வழி காட்டுதல்களில் தடை செய்திருப்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தவிர, எலெக்ட்ரானிக் கருவிகள் மூலமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சிதைத்து விட முடியும் என்பதற்காக அல்ல" என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இறுதியில்- நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்பட்டது என்று சொல்வதை விட- அந்த நேர்மைத்தனமும், சுதந்திரமும் பிரதிபலித்தது என்பது செயலிலும் தெரிய வேண்டும்" என மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகளை தங்களின் முன்பு முன் வைக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை (கன்ட்ரோல் யூனிட்ஸ், பேலட் யூனிட்ஸ், விவிபிஏடி) கைமுறையாகவும், மின்னணுவியல் வாயிலாகவும் எவ்வித சேதாரங்களுக்கும், ஹேக்கிங்குகளுக்கும், சிதைத்தலுக்கும் உள்ளாகி விடாமல் முழுமையாக பாதுகாத்திட வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் அந்த இருக்கும் வளாகங்களில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது. பாதுகாப்பு அறைகளுக்கு அருகில் எந்த வகையான வாகனங்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது.

பாதுகாப்பு அறைகளைச் சுற்றிலும் உள்ள ஒய்-பை கனெக்ஷன்களை உடனடியாக செயலிழக்க வைக்க வேண்டும். வெளியாட்கள் வருவதையும்- அது போன்ற நபர்கள் நடமாடுவதையும் தடுக்க, பாதுகாப்பு அறைகள் இருக்கும் கட்டடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வேட்பாளர்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: