வியாழன், 18 மார்ச், 2021

அழகிரியின் அமைதி: திமுகவுக்கு சாதகமா?

அழகிரியின் அமைதி: திமுகவுக்கு சாதகமா?

 minnambalam :திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக எப்படியாவது அவரது அண்ணன் மு.க.அழகிரியை மீண்டும் அரசியல் களத்துக்குக் கொண்டு வந்து நிறுத்திட வேண்டுமென்று கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகவே பல முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் அழகிரி கடந்த தீபாவளியன்று தனது ஆதரவாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு செயல் வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட, அது மின்னம்பலத்தில் வெளியாகி பரபரப்பானது. சில முறை ஒத்திவைக்கப்பட்ட அந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3ஆம் தேதி பாண்டிகோவில் பகுதியில் உள்ள ஒரு பெரிய மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி தனது தம்பியும் திமுக தலைவருமான ஸ்டாலினை கடுமையான வார்த்தைகளால் சாடினார்.

“ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை வாங்கித் தந்ததே நான்தான். ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை. ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னிடம் கேட்டுத்தான் கலைஞர் அளித்தார். நான் எம்.பி பதவியோ, அமைச்சர் பதவியோ கேட்கவில்லை, அவராக கொடுத்தது. ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது. பிறந்த நாளுக்காக பொதுக்குழுவே வருக என கட்சியினர் போஸ்டர் அடித்ததில் என்ன தவறு? ஸ்டாலினுக்குக்கூட வருங்கால முதல்வரே வருக என போஸ்டர் அடிக்கிறார்கள். ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது.

ஏழு வருடமாக சும்மாதான் இருக்கிறேன். இப்போது என் ஆதரவாளர்கள் இங்கே நிறைய பேசியிருக்கிறார்கள். நான் நல்ல முடிவெடுப்பேன். அது நல்ல முடிவாகவோ அல்லது கெட்ட முடிவாகவோ கூட இருக்கலாம். எந்த முடிவாக இருந்தாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று அந்தக் கூட்டத்தில் பேசினார் அழகிரி.

ஜனவரி 3ஆம் தேதி முடிந்து பிப்ரவரி 3ஆம் தேதி முடிந்து, மார்ச் 3ஆம் தேதியும் முடிந்து இப்போது இப்போது மார்ச் 18ஆம் தேதி நடக்கிறது. சரியாக இரண்டரை மாதங்கள் ஆகியும் அழகிரியிடம் இருந்து திமுகவுக்கு எதிராகவோ மற்ற கட்சிகளுக்கு ஆதரவாகவோ எந்த நடவடிக்கையுமில்லை. இடையில் ரஜினி வருவார் என்ற அழகிரியின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போக அதன்பின் அமைதியாகவே இருக்கிறார்.

இதுகுறித்து அழகிரிக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்திலும், திமுக தரப்பிலும் பேசினோம்.

“அந்தக் கூட்டத்தில் பேசி முடித்த பிறகும்கூட அவசரப்பட்டு டென்ஷனாகி பேசிட்டேனோ என்றுதான் தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார் அழகிரி. கடந்த பிப்ரவரி மாதம் தந்தி தொலைக்காட்சியில் ஸ்டாலினிடம் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு வார்த்தையில் பதில் கேட்கப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, ராகுல் காந்தி ஆகியோர் பற்றியெல்லாம் பதில் சொன்ன ஸ்டாலினிடம், அழகிரி என்று கேட்கப்பட, ‘என் அண்ணன்’ என்று உடனடியாகப் பதில் சொன்னார் ஸ்டாலின். மறுநாள் முரசொலியிலும் ஸ்டாலினின் இந்தப் பதில் அழகிரியின் பெயர் விடுபடாமல் வெளியானது.

ஏற்கனவே அழகிரி பேசியதற்கு கட்சி சார்பில் யாரும் பதில்கூற வேண்டாம் என்று தடுத்துவிட்டிருந்த ஸ்டாலின், பிப்ரவரி மாதம் அழகிரியைத் தன் அண்ணன் என்று அழைத்தது இருவரது இடையேயான உறவில் அடுத்த கட்டத்தைக் காட்டியது.

அழகிரியோடு நெருக்கமான இருக்கும் பல சீனியர் திமுகவினரும், ‘கட்சிக்குத் தேர்தல் வேலை செய்யாம இருக்க முடியாதுண்ணே... நாங்க செய்யப் போறோம்’ என்று சொல்லி அழகிரியின் அனுமதி பெற்று தேர்தல் வேலைகளும் செய்து வருகின்றனர். ஸ்டாலின் சார்பில் கலைஞர் குடும்பத்தினர் அழகிரியிடம் பேசி, ‘திமுகவுக்கு எதிராக எந்த செயல்பாட்டிலும் இறங்க வேண்டாம். மறுபடியும் எல்லாரும் ஒன்ணாவோம். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதன் காரணமாகவே அழகிரி கடந்த இரண்டரை மாத காலமாக அமைதியாக இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கும் நிலையில், அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் தொடர்கின்றன” என்கிறார்கள்.

அதேநேரம் அழகிரிக்கு அதிமுக பாஜக தரப்பில் இருந்து தூது மேல் தூது சென்றுகொண்டிருக்கின்றன. அவை ஒரு கட்டத்தில் அழுத்தமாகவும், மிரட்டலாகவும் மாறவும் வாய்ப்பிருக்கின்றன. அந்த நிலையில் அழகிரி என்ன முடிவெடுக்கிறார் என்பது மதுரை அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பாக உள்ளது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: