வியாழன், 18 மார்ச், 2021

புதுவை காங்-தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் யார்? காங்கிரசுக்கு 15, தி.மு.க.வுக்கு 13, சி பி ஐ விசிக தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது

காங்-தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் யார்? புதுவை அரசியலில் குழப்பம்
maalaimalar : புதுவையில் முதல்வராக இருந்த நாராயணசாமி போட்டியிடாததால் காங்-தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் யார்? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. <
நாராயணசாமி
புதுச்சேரி:புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து தேர்தலை சந்திக்கிறது.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் விலகி பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரசில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. கவர்னர் கிரண்பேடியின் முட்டுக் கட்டையால் தேர்தலின் போது அறிவித்த திட்டங்களை காங்கிரசால் நிறைவேற்ற முடியவில்லை.

இந்த காரணங்களால் காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது எனக்கூறி கூட்டணியில் உள்ள தி.மு.க. அதிக தொகுதிகளை கேட்டு வந்தது.

அதோடு கூட்டணிக்கு தி.மு.க.வே தலைமை தாங்கும் என்றும், யார் அதிகமாக எம்.எல்.ஏ.க்களை பெறுபவரே முதல்- அமைச்சர் என வலியுறுத்தினர்.

இதனால் தொகுதி பங்கீடை இறுதி செய்ய நீண்ட இழுபறி நிலவியது. இறுதியில் காங்கிரசுக்கு 15, தி.மு.க.வுக்கு 13, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற 9 தொகுதிகளை விட கூடுதலாக 4 தொகுதிகளை தி.மு.க. பெற்றுள்ளது.

கூட்டணியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் நாராயணசாமி இடம்பெறவில்லை.

அவரது தொகுதியான நெல்லித்தோப்பு தி.மு.க. வுக்கு ஒதுக்கப்பட்டது. 5 மாநில தேர்தல்களில் தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் முதல்வராக இருந்தவர்கள் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

ஆனால், புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி மட்டும் போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தனர். தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏ.வாக போட்டியிடாத நாராயணசாமி முதல்- அமைச்சர் ஆனார்.

தற்போது மாநில தலைவராக ஏ.வி.சுப்ரமணியன் உள்ளார். ஆனால். இவர் முதல்- அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை.

காங்கிரசை பொறுத்த வரை வழக்கமாக தேர்தலுக்கு பிறகுதான் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெற்றவர்கள் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்படுவார்கள். அதுபோன்ற நிலைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ரங்கசாமி தலைமை தாங்குகிறார். இவரையும் கூட்டணியின் முதல்- அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி முதல்-அமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என பா.ஜனதா அறிவித்துள்ளது.

ஆனால், என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய கூட்டத்தில் ரங்கசாமிதான் முதல்- அமைச்சர் என தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவிக்காதது புதுவை அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: