nakkeeran :தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் 25 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு, குளச்சல் ஆகிய நான்கு தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை. இதில், விளவங்கோடு தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு மீண்டும் சீட் தரக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்....
இந்நிலையில், நக்கீரன் இணையதளத்துக்கு இதுகுறித்து பேட்டியளித்த விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி, "ஒரு பத்து பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதில், இரண்டு பேரின் முகம் மட்டும்தான் எனக்குத் தெரிகிறது. மீதமுள்ள அறியாத முகங்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
சிலரின் தூண்டுதல்களால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறவர்கள், கட்சி மேலிடம் தொகுதியை எனக்கு அறிவித்தவுடன் தானாகவே எழுந்து ஓடிவிடுவார்கள். காங்கிரஸ் கட்சியில் ஒரே பெண் எம்எல்ஏவாக செயல்பட்டதால், பெண் என்பதால் இதுபோன்ற பிரச்சனைகளை சிலர் செய்கின்றனர். தொகுதியில் சிறப்பாகச் செயல்பட்ட எனக்கு கண்டிப்பாகக் கட்சி மேலிடம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரும். மேலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தலைமையிடம் சமர்ப்பிப்பேன். உறுதியாகக் கூறுகிறேன், நான் வெற்றிபெறுவேன்" என்றார்.
இந்நிலையில், அறிவிக்கப்படாமல் இருந்த நான்கு தொகுதிகளுக்கும், தற்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ் தலைமை. அதில், விளவங்கோடு-விஜயதரணி, குளச்சல்- பிரின்ஸ், மயிலாடுதுறை- ராஜகுமார், வேளச்சேரி- ஹசன் உள்ளிட்டோர் போட்டியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக